மீன் குழம்பின் சுவை கண்ட நாம்
மீனவனின் பசியை யார் அறிந்தார்.
மற்றவர் பசி தீர்க்க பொங்கும் அலையில்
உப்புக் காற்றில் சுவாசித்து
வீரியமாய் புறப்படுவான் மீனவன்.
முன்பு நானும் மீனவன் என்றால்
தலைவா என்று கூசலிட்டு ஒலி
எழுப்புகின்றாய் ரசிகனாய் – என்றும்
மீனவனாய் இருப்பவனை ஏனோ ஏளனம்
செய்கிறாய்.
தாயின் மடியில் குழந்தை உறக்கம்
கடலில் வள்ளத்தின் அடியில்
மீனவன் உறக்கம்.
பனி மழை வெயில் பாராது
குடும்ப பாசத்தின் வலையில்
பசி தீர்க்க தன் உதிரம் உருகினான் மீனவன்.
சிறகு விரித்து பறக்கும் பறவையினை
சிறகு உடைத்து கூட்டில் அடைத்து
வைத்தார் போல் – வறுமையின்
கூட்டில் அடைக்கப்பட்டான் மீனவன்
தினம் அவன் கடல் சென்றால் தான்
அவன் குடும்பம் சோற்றில் கை வைக்கும்.
இல்லையெனில்
பசி பட்டினியில் துடிதுடிக்கும்.
குடும்பத்தலைவி குடிசையின் வாயில்
கணவனை எதிர்பார்த்து.
கடலோசை அகோரத்தின்
பயம் கொண்டு பதறியடித்து
காத்துக்கொண்டு இருப்பாள்.
கடலில் போட்ட வலை
தூக்கிய பக்கம் எல்லாம் மீன்
துடிதுடித்தது – இப்போ
அலை கடலின் நடுவே அலைந்து திரிந்து
வலை தூக்க தூக்க வலை மட்டும்தான்
கடலில் நடந்தது என்ன
மீனவன் செய்த பாவம் தான் ஏதோ !
காரிருள் கரை தெரியாது
கடலலையின் தாலாட்டில்
கரை வந்து சேர்ந்து விட
அவன் ஏக்கமும் – அவன்
வேண்டிய தெய்வம் எல்லாம் யார் அறிவார்.
கடல் தாயே என்னைக் காப்பாய் என
முயற்சியை தொட்டவன் மீனவன்.
கடன் சுமந்து
வட்டிக்காரனின் வதை சுமந்து
கடும் குளிர் காற்று கானம் பாடும் அலைதனில்
கடல் தாய் கண்ணீர் துடைப்பாய் என
படகு தள்ளினான்.
பாரிய காரிருள் கண்ணை மறைத்தாலும்
கடன் கண்ணை நோண்டும் என
காரிருளே கண்ணுக்கு உதவிடு என
கண்ணீருடன் புறப்படுவான் மீனவன்.
மீனை உணவாக்க செல்லும் மீனவன்
மீனுக்கு அவன் உணவாகி செல்லும் நிலையும்
அவனுக்கு உண்டு – உண்மை தான்
இடி மழை கோர அலை
படகு நிலை மாற
காரிருள் கண்ணை மறைக்க
தன்னுயிர் காத்தால் தான்
தன் குடும்பம் பசி தீர்க்கலாம்
என கடல் தாயினை நம்பி
கடலில் குதிப்பதும் அவன் செயல்தான்.
படையெடுத்து அலை ஓலமிட
உப்பு தண்ணி குடித்தாவது
கரை வந்து சேர்ந்திடவே முழுமூச்சாய்
தன் முயற்சியினை எடுத்து விடுவான்.
அவன் மூளை சிந்திக்கும்
நான் போனால் வட்டிக்காரன் குடிசை
குடி கலைப்பான் – பிஞ்சை நஞ்சாக்குவன்
என தன் மூச்சை முழுமூச்சாய்
உயிர் தப்ப கடல் தாயை வேண்டிடுவான்.
கடல் தயோ கை விரித்தால்
அவன் வீங்கி மீனுண்டு
கண் நோண்டி ஒரு கட்டையாய்
கரை சேர்ந்திடுவான்.
அவன் குடும்பம் கருவாடாய் காய்ந்திடும்
கடனும் தலை விரித்து
அதன் செயலை காட்டிடும்.
பிஞ்சு கூட இதைச் சுமந்தே பணிசெய்ய
புத்தகத்தை தூக்கி எறிந்திடும்
இதைப் பார்த்த தாய் தன் நிலை மறந்து
பைத்தியமாய் பதறிடுவாள்.
கடல்நீர் உப்பானது ஏன்
நீ சிந்தித்துப் பார்
நான் சொல்வேன்
மீனவனின் கண்ணீர் அதில் அதிகம்
உப்பும் ஒரு சுவை தரும் ஆனால்
மீனவன் குடிசைக்கு என்றும் வறுமை பசிதரும்.
இதை யார் அறிவார்.
நெய்தல் வாழ்க்கை வாழ்ந்திடும்
பெரும் மனிதா உன் வாழ்க்கை
நான் அறிவேன் – விடிவெள்ளி பிறந்திட்டால்
நீ மீன்பிடிக்க புறப்படுவாய்.
மீன் கொண்டு பிறர் சுவை போக்கிடுவாய்
உன் பசி ஏனோ உனக்கு நிரந்தர பசியாகியது
உனக்கு கடவுளும் கை விரிப்பது இல்லை
நீ கை ஊண்டி ஆட்சி தொட்ட
அரசியலும் அதைப் பார்ப்பதில்லை.
உன் நிலை பார்க்க அவனுக்கு
நேரமில்லை – உதவிட பல கரம்
உண்டு அதை நீ எதிர்பார்ப்பதில்லை
உன் வாழ்க்கை இருள் என்று எண்ணாதே
காரிருளையும் துரத்தி சூரியன் ஒளி தருவான்
உன் முயற்சி ஒருநாள் – உன்
வாழ்க்கையில் ஒளி தரும் துவளாதே
மனிதா !!
இ.கிருபாகரன்
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.