சென்னையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 14 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவர் சைமனின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது.
மேலும் அவரின் உடல் கொண்டுவரப்பட்ட அம்புலன்ஸ் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் சைமனின் உடலை அடக்கம் செய்யாவிடாமல் தடுத்த ஒரு பெண் உட்பட 14 நபர்களை கைது செய்த அண்ணாநகர் காவல் நிலைய அதிகாரிகள், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைமனின் மரணத்திற்கு பின்னர், கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #மருத்துவர்சைமன் #எதிர்ப்பு #குண்டர்தடுப்புசட்டம்