பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களும் அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் பெற்றோரும் நம்புகிறார்கள் ‘வைரஸ் விடுமுறை’ முடிந்ததும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிடும் என்று. பெரும்பாலான பல்கலைக்கழக சமூகத்தினரும் அப்படிதான் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் எல்லாரும் இணையக் கல்வியை நாடத் தொடக்கி விட்டார்கள். பெரும்பாலான பெரிய பாடசாலைகள் அதைக் கடந்த மாதமிருந்தே தொடங்கிவிட்டன.
கற்றல் கற்பித்தலில் தொடர்ச்சியறாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திப்பது சரிதான். ஆனால் ‘வைரஸ் விடுமுறை’ முடிந்ததும் உலகம் விட்ட இடத்திலிருந்து இயங்கத் தொடக்கி விடுமா? அதில் எந்த மாற்றமும் இருக்காதா?
‘வைரஸ் விடுமுறை’ முடிந்ததும் பாடசாலைகள் வழமை போல இயங்கத் தொடங்கிவிடும். வழமை போல் பரீட்சைகளும் நடக்கும். அதே பாடத்திட்டம். அதே பரீட்சைகள். இப்படித்தான் எல்லா துறைகளிலும் வைரஸ் காலம் முடிந்ததும் விட்ட இடத்திலிருந்து எல்லாமே மாற்றமின்றித் தொடருமா?
இப்பொழுது சுத்தமாக இருக்கும் ஆறுகளும் குளங்களும் மறுபடியும் அழுக்காகும். இப்பொழுது சுத்தமாக இருக்கும் காற்றில் மறுபடியும் புகை சேரும். கடலில் மறுபடியும் அழுக்குகள் சேரும். பஞ்சாபின் ஜலந்தரிலிருந்து பார்க்கும் பொழுது கண்கொள்ளாக் காட்சியாகத் தெரியும் இமைய மலை மறுபடியும் மாசினால் மூடப்பட்டு விடும்.
அப்படி என்றால் கிட்டத்தட்ட 5 மாதக் குழந்தையான கோவிட்-19 மனித குலத்துக்கு ஏற்படுத்திய இழப்புக்கள் தாக்கங்கள் எல்லாவற்றையும் உலகம் ஒரு நாள் கடந்து சென்று விடும் என்று எடுத்துக் கொள்ளலாமா? கடந்த 5 மாத காலங்களில் கோவிட்-19இன் தாக்கத்திலிருந்து மனிதகுலம் எதை கற்றுக் கொள்ளப் போகிறது?
நமது கல்வி முறையின் போதாமையை இயலாமையை இந்த வைரஸ் நிரூபித்திருக்கவில்லையா? மனித நாகரீகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக திரட்டிய அறிவு, பெற்ற அனுபவம் எல்லாவற்றையும் ஒரு அற்ப வைரஸ் கேள்விக்கு உள்ளாக்கவில்லையா? கடந்த ஐந்து மாதங்களாக மனிதகுலம் அனுபவித்து வரும் துன்பங்களிலிருந்து பெற்ற பாடம்தான் என்ன? இப்படியொரு பின்னணியில் அண்மையில் வெளிவந்த ஓ.எல் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் ஒன்பதாம் இடத்திலிலேயே நிற்கிறது என்று வழமை போல சிலர் கத்தத் தொடங்கி விட்டார்கள்.
முதலாவதாக இது அதன் ஆழமான பொருளில் ஒரு விடுமுறை அல்ல. இது ஒரு நோய்த் தொற்றுக் காலம். வைரஸின் தாக்கம் முடிவடைந்ததும் உலகம் வழமைபோல விட்ட இடத்திலிருந்து இயங்கத் தொடங்க முடியாது. ஏனெனில் கோவிட்-19க்கு பின்னரான உலகம் பொருளாதாரரீதியாக வித்தியாசமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று கோடி பேர் வேலை இழப்பார்கள் என்று கணக்கிடப்படுகிறது. குறிப்பாக மக்கள் திரட்சியோடு தொடர்புடைய தொழில் துறைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. சுற்றுலாத் துறை, ஊடகத்துறை உல்லாச விடுதிகள் துறை, விளம்பரத் துறை, பயணப் போக்குவரத்துத் துறை, வாகன உற்பத்தித் துறை, தகவல் தொழில் நட்பத் துறை முதலாக பலதுறைகளில் வருமானம் வீழ்ச்சியடைந்து ஆட்குறைப்புக்கு இடம் உண்டு என்று கருதப்படுகிறது. கொழும்பில் தமிழ் ஊடகத்துறையில் இப்பொழுதே ஆட்குறைப்பு சம்பளக் குறைப்பு தொடர்பாகப் பேசப்படுகிறது. எதிர்காலத்தில் சம்பளத்தை குறைப்பது ஆட்களை குறைப்பது போன்ற விடயங்களை பல கம்பெனிகள் ஏற்கனவே திட்டமிடத் தொடங்கி விட்டன.
கோவிட்-19க்கு பின்னரான உலகம் முன்னரைப் போல இருக்காது. ஆனால் மனித குலம் கோவிட்-19 இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தன்னை திருத்திக் கொள்ளுமாக இருந்தால் தனது பாடத் திட்டங்களையும் தனது அறிவியல் நம்பிக்கைகளையும் மாற்றிக்கொள்ளுமாக இருந்தால் கோவிட்-19இன் விளைவுகளை எதிர்கொள்ளலாம். அதேசமயம் அதுபோல மேலும் ஒரு வைரஸ் தாக்குதல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளைக் குறைக்கலாம். மனிதர்கள் இந்த திசையில் சிந்திப்பார்களா?
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் டாண் டிவி என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டது. கோவிட்-19க்கு பின்னரான உலக அரசியல் எப்படிப்பட்ட மாற்றங்களுக்கு உள்ளாகும்? என்று. அவர்களுக்கு நான் சொன்னேன் ‘பூகோள அரசியல் எனப்படுவது பூகோளப் பொருளாதாரம் தான். பூகோளப் பொருளாதாரம் எனப்படுவது உலகளாவிய கோப்பரேட் நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டால்தான் உலகளாவிய பொருளாதாரத்திலும் புதிய அணுகுமுறைகள் ஏற்படும். நமது உள்ளூர் வியாபாரிகளே வைரஸ் தொற்றுக் காலத்தை சுரண்டலுக்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துகிறார்கள்.
அரசாங்கம் எந்தெந்த பொருட்களுக்கு விலையைக் குறைத்ததோ அவற்றையெல்லாம் பதுக்கினார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதற்குத் தேவையான முட்டை ,பருப்பு போன்ற அடிப்படை பொருட்களை அவர்கள் பதுக்கினார்கள். இவ்வாறு முட்டை பதுக்கப்பட்டதால் பத்து லட்சத்துக்கும் அதிகமான முட்டைகள் தேங்கி நின்றன. ஒரு கட்டத்தில் அவை அழுகிவிடும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே முட்டை மலிந்து சந்தைக்கு வந்தது. ஆனால் இது முட்டைக்கு மட்டுமே பொருந்தும். பருப்பை காணவே முடியவில்லை. மீன் டின்னையும் காணவே முடியவில்லை.
இப்படி ஓர் அனர்த்த காலத்தில் உள்ளூர் வியாபாரிகளே லாப நோக்கத்தோடு செயல்படும் பொழுது உலகளாவிய கோப்பரேட் நிறுவனங்களின் மனம் மாறும் என்று எப்படி எதிர்பார்ப்பது’ வைரஸ் தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை இனி வரும் மாதங்களில் எப்படிச் சீர் செய்யலாம் என்றுதான் அவர்கள் சிந்திப்பார்கள். சிலசமயம் முன்னரை விடச் சுரண்டல் அதிகமாக இருக்கலாம்.
பெரும்பாலும் இயற்கைக்கு பாதகமில்லாத உற்பத்திகளை ஊக்குவிக்கும் ஒரு போக்கு இனி அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் அமெரிக்க அறிஞராகிய சொம்ஸ்கி கூறுவதுபோல நாம் எப்படி வாழவேண்டும் என்பதை சந்தைiயே தீர்மானிக்கும் என்றால் நிலைமை மோசம்தான். எனவே அடிப்படை மாற்றம் கோப்பரேட் நிறுவனங்களில் ஏற்பட வேண்டும். இது வெறுமனே நீதி நெறி சார்ந்த ஒரு மனமாற்றமாக இருந்தால் மட்டும் போதாது. அது கட்டமைப்பு சார் மாற்றமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் கோப்பரேட் முதலாளிகள் மனம் திருந்த இடமில்லை. ஆனால் கோவிட் -19 இல் இருந்து பெற்ற பாடங்களின் அடிப்படையில் உலகலாவிய மக்கள்திரள் சிந்தித்து முடிவு எடுக்கலாம்.
சமூகங்களின் கருத்துருவாக்கிகள், சிவில் சமூகத் தலைவர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்றோர் அவ்வாறு புதிய சிந்தனைகளைத் தூண்டி விடலாம.; உலகில் எல்லாப் பெரிய செயல்களும் முதலில் யாரோ சில அறிஞர்களின் அல்லது மதப் பெரியார்களின் சிந்தனைகளிலிருந்து தோன்றியவைதான். வைரஸ் தொற்று காலத்தை தமிழ் மக்களில் எத்தனை பேர் ஒரு அடைகாக்கும் காலமாக அல்லது தயாரிப்பு காலமாக கடந்து வருகிறார்கள்? குறிப்பாக தமிழ் அறிஞர்கள் துறைசார் நிபுணர்கள் போன்றோர் இக்கால கட்டத்தை ஒரு விடுமுறைக் காலமாக கருதி தமது பிள்ளைகளோடு சேர்ந்து விடுமுறையை அனுபவிக்கிறார்கள் என்பது உண்மை. இதோடு சேர்த்து வைரஸ் தொற்றுக்கு பின்னரான காலத்தை குறித்து ஆழமாக சிந்திக்கவும் வேண்டும். இது கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் முழு உலகத்திற்கும் ஒரு புது அனுபவம்.; இதிலிருந்து சாதாரண ஜனங்கள் கற்றுக்கொள்வார்களோ இல்லையோ அறிஞர்கள், சிந்தனையாளர்கள், புலமைப் பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமது துறைசார்ந்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
பதினோரு ஆண்டுகளுக்கு முன் இதே காலப்பகுதியில் வன்னி கிழக்கில் நவீன தமிழ் வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பேரழிவு ஏற்பட்டது. பேரழிவைக் குறித்தும் அதற்கான காரணங்களை குறித்தும் அது போல மற்றொரு பேரழிவு இனிமேலும் வராமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் எத்தனை தமிழறிஞர்கள் சிந்தித்திருக்கிறார்கள்? குறைந்தபட்சம் அப்பேரழிவை எத்தனை பேர் காய்தல் உவத்தல் இன்றி பிரேத பரிசோதனை செய்திருக்கிறார்கள்?; அது ஒரு யுத்தப் பேரழிவு. இப்பொழுது ஒரு பெருந்தொற்று நோய்.தமிழ் அறிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
எனவே கோவிட்-19க்குப் பின்னரான பூகோள அரசியல் மாற்றம் எனப்படுவது உலகளாவிய மக்கள் திரளின் கையில்தான் இருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்பினால் புதிய தலைவர்கள் வருவார்கள். புதிய தலைவர்கள் புதிய சிந்தனைகளோடு வந்தால் அவர்கள் அதிகாரத்துக்கும் கோப்பரேட் நிறுவனத்துக்கும் இடையில் உள்ள உறவுகளைக் கறாராகத் தீர்மானிப்பார்கள்.; அப்படிப்பட்ட தலைவர்கள் வரவேண்டும். இல்லையென்றால் இன்னும் சில அல்லது பல ஆண்டுகளின் பின் கொரோனா வைரஸின் அப்டேட் பண்ணப்பட்ட மற்றொரு புதிய வைரஸோடு மோத வேண்டியிருக்கும்.