சமுத்திரன்
Covid-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது. விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. கொவிட்-19இன் உலகமயமாக்கலுடன் உலக அதிகாரப் போட்டியின் முரண்பாடுகளும் அரங்கிற்கு வந்தன. குறிப்பாக, உலகரீதியில் பலவீனமடைந்துவரும் அமெரிக்க வல்லரசும் எழுந்துவரும் சீன வல்லரசும் இந்தப் பெருந்தொற்று நோயின் ஆரம்பம், பரவல், சர்வதேசப் பொறுப்புத் தொடர்பாக முரண்பட்டன. துரதிஷ்டவசமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த வல்லரசு அரசியலில் மாட்டிக் கொண்டது. மிக முக்கியமாக இந்த நெருக்கடி பூதாகரமாக வளர்ந்துவிட்ட சமூகப்-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் தன்மைகளையும் சுற்றுச்சூழலின் சீரழிப்பினையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதே போன்று பல நாடுகளும், உலக அமைப்புக்களும் இத்தகைய ஒரு அவலத்தின் பன்முகங்கொண்ட சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குப் போதியளவு தயார்நிலையை அல்லது ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் புட்டுக்காட்டியுள்ளது.
இந்தச் சவாலைக் கையாள்வதில் போட்டி, தேசியவாதம், நிறவாதம், இனவாதம், மதவாதம் மற்றும் அதிகாரவாத நிர்வாகமுறைமை போன்றன தலைதூக்கியுள்ள இந்தச் சூழலில் மக்கள் மட்டங்களில் தேவைகளின் அடிப்படையிலான பகிர்வை, கூட்டுறவை, மற்றும் சுற்றுச்சூழலை முன்னிறுத்தும் விழுமியங்கள் மதிக்கப்படும் அறிகுறிகள் தென்படுவது ஒரு நல்ல சகுனம். ஆயினும் இலாபத்திற்கூடாக மூலதனக் குவியலின் முடிவுறா வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் விதிகள் நிலைபெறும் மனித மேம்பாட்டின் முன்னுரிமைகளுடன் முரண்படுகின்றன. உலகளவிலான சவாலாகிவிட்ட இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள தேசிய எல்லைகளைத் தற்காலிகமாக மூடுவது அல்லது கட்டுப்படுத்துவது அவசியமான ஒரு வழிமுறை. ஆனால் இந்தச் சிக்கலைக் கையாள்வதில் நாடுகளுக்கிடையே மனிதத்துவ ஒருமைப்பாட்டிற்கும் கூட்டுறவுக்கும் பதிலாக போட்டியும், முரண்பாடுகளும் வலுப்பெற்றால் இந்தத் தற்காலிக நடைமுறையை முடிவுக்கு கொண்டுவருவது புதிய சவாலாக உருவெடுக்கும். ஒரு சில நாடுகள் மாத்திரம் வெற்றிபெறுவது போதாது. பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளும் வெற்றி பெறுவது அவசியம் என்பதை அழுத்திக் கூறவேண்டுமா?
ஏன் நாடுகளும் உலக நிறுவனங்களும் தயார்நிலையில் இருக்கவில்லை?
‘கொரோனாவைரஸ் நமக்கு நன்கு பழக்கமான ஒரு பூதமாக முன்கதவிற்கூடாக நுழைகிறது.’ (Mike Davis, March 14, 2020)
தற்போதைய சூழலில் கொவிட்-19 எனும் வியாதி 2019ஆம் வருட இறுதியில் வுஹானில் வெடித்து உலகரீதியில் பரவும் எனக் குறிப்பாக எவராலும் முன்கணிப்புக் கூறியிருக்கமுடியாது எனும் கருத்தில் நியாயமுண்டு. ஆனால் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒரு பெருந்தொற்று எந்த நேரத்திலும் இடம்பெறலாம் என்பதுபற்றியும் அதை எதிர்கொள்ளக்கூடிய தயார்நிலையில் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் இருக்கவேண்டிய தேவை பற்றியும் போதியளவு நேரடி அநுபவம் சார்ந்த மற்றும் நம்பகமான நிபுணத்துவ முன்னெச்சரிக்கைகள் இருந்தன என்பதை மறுக்கமுடியாது (Rodrik, 2020; Davis, 2005, 2020; Wallace, 2016; Wallace et al, 2020). இது பற்றி ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
- அநுபவம் சார்ந்த முன்னெச்சரிக்கைகளாகப் பல இருப்பினும் பின்வருவனவற்றைச் சுலபமாக இனம் காணலாம்: SARS (2003), MERS (2012), Ebola (2014-2016). இவை சந்தேகமின்றி போதியளவு முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளன. இவற்றின் அநுபவங்களின் அடிப்படையில் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
- Mike Davisஇன் 2005ஆம் ஆண்டு நூல் ´The Monster at Our Door´ – The global threat of Avian Flu. பிரபலம் வாய்ந்த இந்த நூல் 2003இல் சீனாவில் எழுந்த பறவைக் காய்ச்சல் பற்றியும் வைரசினால் ஏற்படும் அதுபோன்ற நோய் எதிர்காலத்தில் மீண்டும் தோன்றி உலகரீதியிற்ப் பெருந்தொற்றாகப் பரவக்கூடிய ஆபத்துப் பற்றியும் சொல்கிறது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இத்தகைய ஆபத்தான வைரஸ் தோன்றுவதற்கான காரணப் பின்னணியாக நவீன ஆலைத்தொழில்மயப்படுத்தப்பட்ட விவசாய விசேடமாக மிருக உற்பத்தி, மற்றும் துரித உணவுச் சங்கிலிகள் விளங்குவதைக் காட்டுவதுடன் நகரமயமாக்கல், சேரிகளின் வளர்ச்சி ஆகியன வியாதி பெருந்தொற்றாகப் பரவ உதவுவதையும் விளக்குகிறார் நூலாசிரியர். இது போன்ற பெருந்தொற்று மனித ஒருமைப்பாட்டிற்கு ஒரு சோதனை என்றும் அப்படியான காலத்தில் நாம் நம்மை மாத்திரமன்றி மற்றவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொண்டுள்ளோம் எனவும் சுட்டிக் காட்டுகிறார்.
தற்போதைய கொவிட்-19 பற்றி அவர் மார்ச் 14ஆம் திகதி எழுதிய கட்டுரையில் போதியளவு முன்னெச்சரிக்கைகள் இருந்தும் உலகின் தயாரற்ற நிலையைக் காரசாரமாக விமர்சிக்கிறார். இதுவரையில் ஆபத்தான நோய்களின் திடீர் வெடிப்பை எதிர்கொள்ளத் தயாரற்ற மோசமான நிலைபற்றிப் பல சினிமாப் படங்கள், கணக்கிலடங்கா நாவல்கள், நூற்றுக்கணக்கான நூல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாகக் கூறியுள்ள பின்னணியில் ‘கொரோனாவைரஸ் நமக்கு நன்கு பழக்கமான ஒரு பூதமாக முன்கதவிற்கூடாக நுழைகிறது’ என நியாயமான ஆத்திரத்தொனியில் எழுதுகிறார் (Davis, 2020).
- 2016ஆம் ஆண்டு உலக வங்கி வறிய நாடுகளுக்கென ஒரு பெருந்தொற்று அவசரகால நிதியுதவித் திட்டத்தை (Pandemic Emergency Financing Facility) அறிவித்தது. எல்லைகளைக் கடந்து பரவும் சுகாதார நெருக்கடிகளைக் கையாள உதவும் ஒரு திட்டமாக இது அறிவிக்கப்பட்டது பெருந்தொற்று ஆபத்தின் சாத்தியப்பாட்டினை உலக வங்கியும் அங்கீகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
- அமெரிக்காவின் CIA நிறுவனம் 2009ஆம் வெளியிட்ட ´State of the World 2025´ அறிக்கையில் பெருந்தொற்று பற்றி எதிர்வு கூறியுள்ளதை நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை தெரியப்படுத்துகிறது. CIAஇன் அறிக்கையின்படி ஒரு பெருந்தொற்று நோய் வெடிக்குமாயின், அது ஜனத்தொகை செறிவுமிக்க, மனிதரும் கால்நடைகளும் நெருக்கமாயிருக்கும் சந்தைகளைக் கொண்ட சீனா அல்லது தென்கிழக்காசியாவின் ஒரு பிரதேசத்திலே இடம்பெறும் என அந்தக் கட்டுரை தரும் மேற்கோள் சொல்கிறது (Duclos, 2020).[1] CIA அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பு. அந்த நோக்கிலேயே இந்த முன்கணிப்பை அது வெளியிட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஆகவே இந்தத் தகவல் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருந்தபோதும் அந்த நாடு எதுவிதத்திலும் தயார் நிலையில் இருக்கவில்லை என்பது தற்போது கண்கூடு.
இவைபோன்ற முன்னெச்சரிக்கைகள் அதிகரித்துவரும்போது அவற்றை மதிக்கும் ஒரு அரசாங்கம் தனது நாட்டின் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தை உரிய வழிகளில் கட்டியமைத்துப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அதேபோன்று சர்வதேச மட்டத்தில் இதற்கு உதவும் வகையில் ஒரு சுகாதார சேவை உட்கட்டுமானமும் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? கொவிட்-19 இன் உலகரீதியான தாக்கமும் அதைப் பல நாடுகள் கையாண்ட விதமும், சர்வதேச அமைப்புக்களின் இயலாமையும் மிகவும் துன்பகரமாகவே இருந்தன. இந்த நிலைமை கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்த நவதாராள உலகமயமாக்கலின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. சுயபோட்டிச் சந்தை, தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தகம், மூலதனத்தின் தாராளமயமாக்கல், சமூகபாதுகாப்புக்கான அரசின் செலவினத்தின் தொடர்ச்சியான வெட்டும் சுகாதார மற்றும் கல்வி சேவைகளின் தனியுடைமையாக்கல் ஆகியன நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் அம்சங்களில் அடங்கும்.
பல நாடுகளில் முன்னர் இருந்த தேசிய சுகாதார சேவைகளின் உட்கட்டுமானத்தின் தொடர்ச்சியான பலவீனமாக்கலும் செயலாற்றல் இழப்பும் இந்த கொள்கையின் பல்வேறுபட்ட பாதகமான விளைவுகளில் ஒன்றாகும். கொவிட்-19 இந்தக் குறைபாட்டினைப் பல நாடுகளில் அதிர்ச்சிதரும் வகையில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்காது காலம் தாழ்த்தியமைக்கும் அரசியல் தலைமையின் அலட்சியப் போக்கிற்கும் இந்தக்குறைபாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. பல செல்வந்த நாடுகள் கொவிட்-19 இன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தக் காலம் தாழ்த்தியபின் அவசரகால நடவடிக்கையாகக் கணிசமான தொகை பணத்தை ஒதுக்கிச் செயற்பட்டப்போதும் அந்த முயற்சியால் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தின் நீண்டகாலப் பலவீனமாக்கலின் அல்லது போதாமையின் விளைவுகளை வெற்றிகரமாகத் தடுக்கமுடியவில்லை என்பதை அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளின் நிலைமைகள் காட்டுகின்றன. நெருக்கடி கட்டுக்கடங்காது போகும் அறிகுறிகளைக் கண்ட போது ஸ்பெயின் நாட்டின் சமூக ஜனநாயக அரசாங்கம் தனியார் மருத்துவமனைகளைத் தேசியமயமாக்கியது வரவேற்கப்படவேண்டியதே. அதற்கு முன்னைய அரசாங்கம் பின்பற்றிய நவதாராள அரச செலவினச் சிக்கனக் கொள்கையின் விளைவுகள் ஸ்பெயினின் தேசிய சுகாதார உட்கட்டுமானத்தை பலவீனமாக்கியிருந்தது.
கொவிட்-19 ஐரோப்பிய ஒன்றியத்தின் முரண்பாடுகளை, ஏற்றத்தாழ்வுகளை மற்றும் அதன் மையப்படுத்தப்பட்ட தலைமையினதும் நிர்வாக இயந்திரத்தினதும் ஜனநாயகமற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. நவதாராள உலகமயமாக்கல் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தவில்லை, பெருந்தொற்று எனும் பொது எதிரி அங்கத்துவ நாடுகளுக்கிடையே ஒரு ஒருமைப்பாட்டு அலையை ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே இருந்த அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகள் மேலும் கூர்மையடைந்து பிரிவினையும் தேசியவாதங்களும் எழுச்சி பெறவே அது வழி சமைத்துள்ளது. இது நவதாராள ஐரோப்பியப் பொதுச் சந்தையின் அருவச் சக்தியில் அதீத நம்பிக்கை வைத்திருந்த ஒன்றியவாதிகளுக்கு ஒரு கசப்பான செய்திதான். கொரோனாவின் வருகையுடன் அங்கத்துவ நாடுகளின் தேசியவாதங்களும் தேசிய எல்லைக்கட்டுப்பாடுகளும் புத்துயிர்பெற்றன. ஒன்றியத்துக்குள்ளே ஜேர்மனியின் தலைமையிலான குழுவின் மேலாதிக்கத்தால் ஓரங்கட்டப்பட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகள் போர்க்கொடி தூக்குவதில் ஆச்சர்யமில்லை. 27 அங்கத்துவ நாடுகளையும் 440 மில்லியன் மக்களையும் உள்ளடக்கும் ஒன்றியத்திடம் ஒரு செயற்பாட்டுத்திறன்மிக்க ஒருங்கிணைந்த சுகாதார உட்கட்டுமானம் இருக்கவில்லை எனும் செய்தி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். இதுபோன்ற அவசரகால நெருக்கடியின்போது எல்லைகளை மூடுவது மற்றும் வளங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி நடைமுறைக்குகந்த கொள்கையும் புரிந்துணர்வும் ஒன்றியமட்டத்தில் இருக்கவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
இந்தியா ஒரு ஒழுங்கான சுகாதார சேவை உட்கட்டுமானத்தைக் கட்டியமைக்கத் தவறியுள்ளதென அமர்த்தியா சென் அவர்கள் கோவிட்-19 தொடர்பாக சமீபத்தில் NDTV இல் இடம்பெற்ற ஒரு உரையாடலில் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அரசாங்கத்தின் முழு முடக்க அணுகுமுறையால் பெருந்தொகையான மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயத்தையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
முழுநாடு தழுவிய முடக்கத்தை இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திய விதத்தில் மனிதாபிமானத்தைக் காணமுடியவில்லை. உட்கட்டுமானம் மற்றும் திட்டமிட்ட அணுகுமுறையைப் பொறுத்தவரை இந்தியாவில் கேரள மாநிலம் விதிவிலக்கானதெனச் செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இலங்கை அரசாங்கம் கொவிட்-19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இதுவரை கணிசமான வெற்றி பெற்றுள்ளபோதும் அதன் இராணுவமயமாக்கலும் பேரினவாத அரசியல்மயமாக்கலும் வரவேற்கப்படவேண்டியதல்ல. இந்தக் கட்டுரையை எழுதும்போது வைரசின் பரவல்வீதம் முன்பைவிட அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையின் நிலைமை எப்படி மாறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பொது மக்களின் வாழ்வை முடக்கியுள்ள அவசரகாலத்தை அகற்றுமாறு பலர் கோரியுள்ளார்கள்.
நவதாராள உலகமயமாக்கலின் மேலாட்சியின்கீழும் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தைத் தொடர்ந்தும் ஓரளவு திருப்திகரமாக வைத்திருந்த நாடுகள் கொவிட்-19 தாக்கத்தை மற்ற நாடுகளையும்விட ஒப்பீட்டுரீதியில் சில வழிகளில் நன்றாகக் கையாண்டுள்ளன. இந்த நாடுகளின் அரசாங்கங்கள் காலம் தாழ்த்தாது முடிந்தவரை துரிதமாகச் செயற்படவல்ல நிறுவனரீதியான வசதிகளைக் கொண்டிருந்தன. தொற்றுத் தவிர்ப்பு நடைமுறைகள், பரிசோதனையின் தரமும் வீதமும், மருத்துவ வசதிகள், குணமடைந்தோர் வீதம், மரணவீதம், etc. போன்றவையின் அடிப்படையில் இந்த நாடுகளின் ஒரு முழுமையான தரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியலைத் தயாரிப்பது தற்போது சாத்தியமில்லை. அப்படி ஒரு சர்வதேச ஒப்பீட்டுரீதியான மதிப்பீட்டைச் செய்யக்கூடிய கட்டத்தை இந்தப் பெருந்தொற்று இன்னும் அடையவில்லை. இன்னும் அது முடிவுக்கு வரவில்லை. அப்படி வந்தாலும் இரண்டாவது அலை, மூன்றாவாது அலை என அது திரும்பும் சாத்தியப்பாடுகள் உண்டெனச் சில நிபுணர்கள் சொல்கிறார்கள். தற்காலிகமாகச் சில உதாரணங்களை மட்டுமே தற்போதைக்குக் குறிப்பிடலாம். இவற்றைப் பின்னர் மீள்பரிசீலனை செய்ய வேண்டிவரலாம். தென்கொரியா, தைவான், கியூபா, சீனா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஃபின்லாந்து, நோர்வே ஆகியன அத்தகைய ஒரு தற்காலிக பட்டியலில் அடங்கும் என எதிர்பார்க்கலாம். சீனா பற்றி உலக அரங்கில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவில் முதலில் கொவிட்-19 பற்றி வெளிப்படையாக அறிவித்த மருத்துவர் லீ தண்டனைக்குள்ளானதும் பின்னர் அவர் அதே வியாதிக்குப் பலியானதும் உலகறிந்ததே. சீனாவின் அதிகாரவாத அணுகுமுறையும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த விமர்சனமும் நியாயமானதே. ஆனால் சீனா பாரிய தொற்றுநோயைப் பிரதேசரீதியில் கட்டுப்படுத்தி நாட்டின் பெரும்பகுதிக்கு அது பரவாமல் தடுப்பதில் வெற்றியடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கு ஆதாரமில்லை. சீனா முக்கிய தகவல்களை உரிய நேரத்தில் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. இவைபற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு சுதந்திரமான விசாரணை தேவைப்படலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் ஒரு சில நாடுகள் மட்டும் உலகச் சிக்கலாகிவிட்ட பெருந்தொற்றான கொவிட்-19 ஐ தமது தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள எல்லைகளுக்குள் வெற்றி கொள்வது போதாது.
ஐரோப்பாவில் சில நாடுகள் கொவிட்-19 பெருந்தொற்றுக்கெதிராகக் கூட்ட நோயெதிர்ப்பாற்றல் (herd immunity) அணுகுமுறையை வெளிப்படையாகப் பின்பற்றுகின்றன, உதாரணங்களாக சுவீடன், நெதெர்லாந்து. பிரித்தானியாவும் ஆரம்பத்தில் இந்தக் கொள்கையைப் பின்பற்ற முயன்று பின்னர் மற்ற நாடுகள் போல் தொற்றைக் கட்டுப்படுத்தும் வழிக்கு வந்தது. கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி இல்லாத இன்றைய நிலையில் கூட்ட நோயெதிர்ப்பாற்றல் இலக்கை அடைவதற்கான அடுத்த வழி வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைத் தவிர்த்து அதன் தொற்றினால் சமூகத்தின் பெரும்பான்மையோர் நோயெதிர்ப்பாற்றலைப் பெற வைப்பதாகும். இந்த அணுகுமுறையால் வயோதிபர்கள் மற்றும் சுகாதாரரீதியில் பலவீனமானவர்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகிறார்கள். கொவிட்-19 பொதுவான வைரஸ் (flu)காய்ச்சலையும்விட உயிருக்குப் பல மடங்கு அதிகமான ஆபத்தானதென்பதால் இந்தக் குழுக்களின் மரணவீதம் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுவீடனும் நெதெர்லாந்தும் தொடர்ச்சியாக நூறுவீதம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தன எனச் சொல்ல முடியாத போதும் இந்த நாடுகளின் இதுவரையிலான மரண வீதங்கள் மேற்கூறிய முடிவுக்கு ஆதாரமாக இருக்கின்றன. ஆயினும் ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்ட பல காரணங்களால் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமாயிருந்த நாடுகளிலும் மரணவீதம் மிக அதிகமாகவே உள்ளது. உதாரணமாக 2020 மே மாதம் இரண்டாம் திகதிவரை ஸ்பெயினில் ஜனத்தொகையின் 100,000 நபர்களில் 53.7 நபர்கள் கொவிட்-19ஆல் மரணித்துள்ளார்கள். இத்துடன் ஒப்பிடும்போது 26.4 ஆக இருக்கும் சுவீடனின் மரணவீதம் ஏறக்குறைய அரைவாசியாகவே உள்ளது. ஆனால் தொற்றுக் கட்டுப்பாட்டுக் கொள்கையை ஸ்பெயினைவிட நன்கு நடைமுறைப்படுத்திவரும் நோர்வேயில் கொரோனா மரணவீதம் 3.9 ஆகவும் நோர்வேயையும்விடத் திறமையாக செயற்பட்ட தென் கொரியாவில் 0.5 ஆகவும் இருக்கின்றன (2020, மே மாதம் இரண்டாம் திகதி நோர்வேயின் VG பத்திரிகையில் வெளிவந்த புள்ளி விபரங்களின்படி). சுவீடனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட அதன் அயல்நாடுகள் (நோர்வே, டென்மார்க், ஃபின்லாந்து) முடக்கல் கொள்கையை நன்கு நடைமுறைப்படுத்தியதால் சுவீடனும் பயனடைந்திருக்கலாம்.
சமூக, அரசியல், தார்மீக நோக்கில் கொவிட்-19ஐ எதிர்க்க கூட்ட நோயெதிர்ப்பாற்றல் ஏற்புடைய கொள்கையா என்பது பற்றி விவாதங்கள் தொடர்கின்றன. இது ஒரு மல்தூசிய மற்றும் சமூக டாவினிச (Malthusian and social Darwinist) அணுகுமுறை எனும் விமர்சனம் பலமானது. உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகள் இந்த அணுகுமுறையைக் கொள்கையளவில் நிராகரித்துள்ளன. இன்றைய நிலைமைகளில் கிடைக்கும் தகவல்களின்படி வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் கொள்கையைத் திறமையாகச் செயற்படுத்திய நாடுகளில் தொற்று மற்றும் மரணவீதங்கள் மிகக் குறைவு. ஆனால் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட ஒரு தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் சுலபமாகக் கிடைக்கமுன் பொருளாதார மீளுயிர்ப்புக்கு முன்னுரிமை கொடுத்து முடக்கம், சமூக இடைவெளி பேணல், தேசிய எல்லைக் கட்டுப்பாடுகள் போன்றன தளர்த்தப்பட்டபின் ஒரு புதிய பரவல் அலை எழுந்தால் என்ன செய்வது எனும் கேள்வியை தட்டிக்கழிக்க முடியாது. அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் எனும் கேள்வி எழுகிறது.
கொவிட்-19 இன் அரசியல் பொருளாதாரமும் சமூகத் தாக்கங்களும்
இந்தப் பெருந்தொற்றின் விளைவான உலகப் பொருளாதார நெருக்கடியைப் 2007-2008 இல் வந்த நிதி நெருக்கடியுடன் ஒப்பிடுவது ஒரு பொதுப் போக்காகியுள்ளது. அதேவேளை இன்றைய நெருக்கடி முன்னையதை விடவும் பலமடங்கு பாரியது மட்டுமல்லாது இது வெளிக்கொணர்ந்த அதிர்ச்சிகள் பன்முகமானவை என்பதும் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பொதுவான கருத்தாகும். இந்தப் பொருளாதார நெருக்கடி முன்னையதைவிடவும் வேறுபட்டது என்பதை
பொதுமக்கள் அநுபவபூர்வமாகப் புரிந்து கொள்கிறார்கள். 2007-2008 நெருக்கடி அமெரிக்காவில் நிதித்துறையில் ஆரம்பித்து வேறு பல, விசேடமாக ஐரோப்பிய, நாடுகளுக்குப் பரவியது. தமது வீடுகளை வங்கிகளிடம் அடமானம் வைத்துக் கடன் பெற்ற பெருந்தொகையினரால் கடனைத் திருப்பிக் கட்டமுடியாத நிலையினால் ஆரம்பித்த அந்த நெருக்கடியால் பெரும் நிதி நிறுவனங்கள் கணநேரத்தில் வீழ்ந்தன. இது நிதி மூலதனம் உருவாக்கிய பிரச்சனை (Harvey, 2010).
கொவிட்-19 சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்துப் பெருந்தொற்றாக உலகமயமாகியது. இருநூறுக்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் இதைக் கையாள எடுத்த வழிவகைகளின் தவிர்க்கமுடியாத உடனடியான பொருளாதார விளைவு உற்பத்தித் துறைகளின் மற்றும் பல சேவைகளின் வீழ்ச்சியாகும். பல்வேறு ஆலைத்தொழில்கள், விவசாயம், சர்வதேசப் போக்குவரவு, உல்லாசத்துறை, உணவகங்கள், பொழுதுபோக்குச் சேவைகள், பாவனைப் பொருட்களின் விற்பனை நிலையங்கள் எனப் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன. ´நிஜப் பொருளாதாரம்´ (´real economy´) எனப்படும் இந்தத் துறைகளிலேயே நெருக்கடி ஆரம்பித்து நிதி மூலதனத் துறைக்குப் பரவியது. ஆகவே இந்த நெருக்கடி கேள்வி, நிரம்பல் இரண்டினதும் வீழ்ச்சியுடன் ஆரம்பித்து நிதித்துறைக்குப் பரவி அங்கு பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி தீவிரமடைந்தது. தொழில் இழப்பு, வருமானமின்மை தனிநபர்களையும் குடும்பங்களையும் படுமோசமாகப் பாதிக்கின்றன. பெற்ற கடனைத் திருப்பிக் கட்டமுடியாத நிலையில் தனிநபர்கள் மட்டுமன்றி சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்களும் திண்டாடும் நிலையில் பல நாடுகளும் – குறிப்பாக இலங்கை போன்ற வளர்முக நாடுகளும் – கடன் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. இதனால் வங்கிகளும் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்முக நாடுகளிலிருந்து வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில் அவர்களில் தங்கியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரங்கள்பாதிக்கப்பட்டதுடன் தாய் நாட்டின் அந்நிய செலாவணி வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு நாட்டின் காசாதாரப் பொருளாதாரத்தின் அளவைப் பொறுத்து அதன் முக்கியத்துவம் வேறுபடலாம். உதாரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தில் வெளிநாட்டுக் காசாதாரம் முக்கிய பங்கினை வகிக்கிறது.
சீனாவின் முக்கிய நகரமொன்றில் ஆரம்பித்த நோயின் உலகமயமாக்கலுடன் பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும் உலகமயமானது உலகப் பொருளாதாரத்தில் சீனா வகிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. பெருமளவிலான நிரம்பல் சங்கிலிகள் (supply chains) சீனாவிலிருப்பதையும் இந்த நெருக்கடி உலகுக்கு நினைவூட்டுகிறது. வுஹான் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் பல உயர் கல்வி நிறுவனங்களையும் கொண்ட நகரமாதலால் அதன் சர்வதேசத் தொடர்புகளும் பன்முகரீதியானது.
ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடி கொவிட்-19 வந்ததால் மட்டும் வெடித்த ஒன்றல்ல. உண்மை என்னவெனில் உலகப் பொருளாதாரம் ஏற்கனவே மந்தநிலையிலேயே இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் தொடரும் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தினால் ஊகத்திற்கூடாகத் துரித இலாபம் பெறும் போக்கு, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் வளர்ச்சி, ஒரு புறம் நுகர்வுவாதக் கலாச்சாரத்தின் வளர்ச்சி மறுபுறம் நீண்டகாலமாகத் தொழிலாளர்களின் வளராத அல்லது வீழ்ச்சியடையும் மெய் ஊதியம், உழைப்பின் முறைசாரா மயமாக்கலின் (informalization), தற்காலிகமயமாக்கலின் உலகரீதியான பரவல், கடன்பளுவால் பாதிக்கப்படும் குடும்பங்களின் தொகை அதிகரிப்பு, நில அபகரிப்பு மற்றும் இயற்கையின் பண்டமயமாக்கலின் தீவிரமயமாக்கலும் சுற்றுச் சூழலின் சீரழிவும் – இந்தச் சூழ்நிலையிலேயே கொவிட்-19 பெருந்தொற்றாக மாறுகிறது. ஏற்கனவே மந்தநிலையிலிருந்த உலகப் பொருளாதாரம் ஒரு பாரிய சிக்கலினால் விழுங்கப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் பிரச்சனைகளுக்குள்ளான போதும் பல்லாண்டுகளாக உலகரீதியில் உயர் வளர்ச்சி வீதங்களைக் கண்ட சீனாவின் பொருளாதாரம் இந்தச் சிக்கலால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுத் தொடர்பான முடக்கல் கட்டுப்பாடுகள் தொடரும்வரை உலகப் பொருளாதாரம் பின்னடைவிலிருந்து மீளெழுவது சாத்தியமில்லை. அதேவேளை கொரோனா நெருக்கடிக்குப் பின்னான பொருளாதாரக் கொள்கைகள் என்னவாயிருக்கும் எனும் கேள்வியும் எழுகிறது.
சமூகப்-பொருளாதார தாக்கங்கள்: மேலும் சில குறிப்புகள்
கொரொனாவைரஸ் எதுவிதப் பாகுபாடுமின்றி யாரையும் தாக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் சிறிதளவு உண்மை உண்டு. ஆனால் பெரிய உண்மை என்னவெனில் இந்தப் பெருந்தொற்றினைக் கையாள அரசாங்கங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் சமூகப்-பொருளாதார விளைவுகள் அமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப வேறுபடுகின்றன. கொரோனா தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து மேற்கு நாடுகளின் சில செல்வந்தர்கள் தமது சொந்த ஜெட்விமானங்களில் மலைப்பிரதேச விடுமுறை இல்லங்களை நோக்கிப் பறந்தார்கள் எனும் செய்தியைப் படித்தேன். இவர்கள் உலகின் செல்வந்தர் வர்க்கத்திற்குள்ளேயும் ஒரு சிறுபான்மையினரே. இதற்கு மறு துருவத்தில் வேலையிழந்து, வருமானமிழந்து, சேமிப்புமற்ற நிலையில் பெருந்தொகையானோர் பல்வேறு நாடுகளில் அல்லல் படுகிறார்கள். இவர்களைப் பட்டினியிலும் பஞ்சத்திலுமிருந்தும் அதனால் வரும் விளைவுகளிலுமிருந்தும் காப்பாற்றுவது ஒரு உலகமயச் சவாலாகிவிட்டது.
ஐ. நாவின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization – ILO)இன் இயக்குனர் நாயகத்தின் சொற்களில் கொவிட்-19 இன் விளைவாக, ‘அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடையும் நாடுகள் இரண்டிலுமே தொழிலாளர்களும், தொழிலாற்றும் நிறுவனங்களும் பேரவலத்தை எதிர்நோக்குகிறார்கள்…கடந்த 75 வருடங்களுக்கும் மேலாகச் சர்வதேச ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோதனை இதுதான். ஒரு நாடு தோல்வியடைந்தால் நாம் எல்லோருமே தோல்வியடைவோம். நமது உலக சமூகத்தின் சகல பகுதிகளுக்கும், குறிப்பாக இடர்பாட்டுக்குள்ளாகும் நிலையில் அல்லது தமக்குத்தாமே உதவமுடியாத நிலையிலுள்ளோருக்கு, உதவும் தீர்வுகளை நாம் காணவேண்டும்’ (Rios, April 8, 2020). ILOவெளியிட்டுள்ள அறிக்கை தரும் புள்ளி விபரங்களின்படி(ILO, April 7, 2020):
- உலகின் மொத்தத் தொழிற்படை 3.3 பில்லியன் (billion)
- இதில் 81 வீதத்தினர் – அதாவது ஏறக்குறைய 2.67 billion தொழிலாளர்கள் – தொழிற்றலங்கள் முற்றாக அல்லது பகுதியாக மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- உலகம்பூராவும் 2 billion தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அபிவிருத்தியடையும் நாடுகளிலேயே உள்ளார்கள்.
பல நாடுகள் பாதிக்கப்பட்ட மக்களில் சில பகுதியினருக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தற்காலிக நிவாரணம் வழங்கப் பணம் ஒதுக்கியுள்ளதுடன் தொழில் நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட காலம்வரை வரி விலக்கும் வழங்கியுள்ளன. இதற்காகவும் வேறு அரசாங்க செலவுகளுக்காகவும் மத்திய வங்கிகள் மேலதிகமாக பணம் அச்சிட்டு உதவியுள்ளன. இது ஒரு குறுகிய கால நடவடிக்கையே. இது தொடர்ந்தால் பணவீக்க ஆபத்து எழலாம். நிவாரணப் பொதிகளின் உள்ளடக்கங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. செல்வந்த நாடுகள் தமது தேசிய வருமானத்தின் 10-15 வீதத்தை ஒதுக்கியுள்ளன. நிவாரணப் பணத்தின் பங்கீட்டைப் பொறுத்தவரை இறுதியில் அது செல்வந்தர்களுக்கே சாதகமாயிருக்கிறது என்பதே யதார்த்தம் (Stevenson, 2020). சில வறிய நாடுகள் செல்வந்த நாடுகளிடமிருந்தும் உதவிகள் பெற்றுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களில் இதுவரை உதவி கிடையாதோர் மற்றும் உதவியின் போதாமையால் பாதிக்கப்பட்டோர் பலர். இந்தியாவின் நிலைமை பற்றி அந்த நாட்டின் மூத்த அபிவிருத்திப் பொருளியலாளரும், முன்னை நாள் இந்திய திட்டமிடல் ஆணைக்குழு அங்கத்தவரும், திருவனந்தபுரம் அபிவிருத்திக் கற்கைகள் மையத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியருமான K. P. கண்ணன் சமீபத்தில் (April 13) எழுதிய கட்டுரையின் சில பகுதிகளைச் சுருக்கிக் கூறுவது பொருத்தமாயிருக்கும். 1.34 பில்லியன் ஜனத்தொகையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் இந்தியாவில் கொவிட்-19 நெருக்கடி இந்தப் பெரும் மக்களைப் பொறுத்தவரை சுலபமாக ஒரு பட்டினி நெருக்கடியாக மாறக்கூடியது. தொழிற்படையின் 90 வீதத்தினர் வேலையின்றி அல்லது சமூகப் பாதுகாப்பின்றி இருக்கும் நிலையில் உரிய அரச உதவி வழங்கப்படாவிடில் ஆபத்தான திருப்பம் ஏற்படலாம். இதை ஏற்கனவே காணக்கூடியதாக இருக்கிறது. பெருந்தொகையான மரணங்களையும் பட்டினியின் மற்றும் கொவிட்-19 ஆல் வரும் மரண பயத்தின் விளைவாக எழக்கூடிய சமூகக் கொந்தளிப்பை எப்படித் தவிர்ப்பது என்பதே இன்று இந்தியாவை எதிர் நோக்கும் மிகப் பெரிய நெருக்கடியாகும். இத்தகைய ஒரு பாரிய நெருக்கடியைக் கையாள இந்திய அரசாங்கம் நாட்டின் தேசிய வருமானத்தின் ஒரு வீதத்திற்கும் குறைந்த அற்ப தொகையையே ஒதுக்கியுள்ளது பெரும் அரசியல் துன்பியலாகும் எனக் கூறும் கண்ணன் தேசிய வருமானத்தின் 10 வீதம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக ஒதுக்கப்படவேண்டும் என்றும் அதைச் சாத்தியமாக்கும் வழிவகையையும் சுட்டிக் காட்டுகிறார் (Kannan, 2020).
பெருந்தொற்றுத் தொடர்பான இந்திய நிலைமைகள் இலங்கை உட்பட மற்றைய அயல் நாடுகள்மீதும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அவசரகால அதிகாரங்களுடன் இராணுவமயமாக்கப்பட்ட அணுகுமுறையின் உதவியுடன் பெற்ற வெற்றியின் மறுபக்கத்தில் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுடன், வேலையிழந்து, வருமானமிழந்து துன்புறுவோரின் விசேடமாக உதவிகள் கிட்டாத அன்றாடம் காய்ச்சிகளின் அவலங்கள் தொடரும் நிலையில் ஒரு அரசியல் நெருக்கடி வெடித்துள்ளது. கொவிட்-19 நெருக்கடியைத் தமது அரசியல் நோக்கத்தை அடையும் திட்டத்திற்குப் பயன்படுத்தும் நோக்கில் காய்நகர்த்துகின்றனர் ஜனாதிபதியும் அவரது கட்சியினரும். நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஜனாதிபதிக்கு சர்வ அதிகாரத்தையும் வழங்கும் வகையில் யாப்பை மாற்றும் நோக்கில் பொதுத்தேர்தலை நடத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தேர்தல் ஆணைக்குழு ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறுமென அறிவித்துள்ளது. இன்றைய பெருந்தொற்றுச் சூழலில் தேர்தலை நடத்துவது மக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தானதென்பதுடன், ஒரு நியாயமான, சுதந்திரமான தேர்தல் இடம்பெறக்கூடிய நிலைமைகளும் இல்லை எனும் யதார்த்தத்தை எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகக் குழுக்களும் சுட்டிக்காட்டியுள்ளன. யாப்புரீதியான நெருக்கடி ஒன்று தோன்றியுள்ளது. தற்போதைய சட்டரீதியான தேவைகளுக்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் யாப்புரீதியான அனுமதி இருந்தும் ஜனாதிபதி அதைச் செய்யத் தயாரில்லை. தற்போது இலங்கையில் நாடாளுமன்றம் இல்லை, நீதித்துறையும் தற்காலிகமாக முழுமையாக இயங்கமுடியாத நிலையில், ஆகவே நடப்பது ஜனாதிபதியின் ஆட்சிதான். அவர் இராணுவத்தின் மற்றும் தனக்கும் தனது கட்சிக்கும் விசுவாசமானவர்களின் உதவியுடன் நாட்டை ஆளுகிறார். இது ஆட்சிமுறைமையில் அதிகாரவாதத்தை மேலும் ஆழமாக்கவே உதவும். கொரோனா நெருக்கடி தொடங்கியபின் இலங்கையின் மத்திய வங்கி இதுவரை 170 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. அரச சேவையாளரின் ஊதியங்கள், பாதிக்கப்பட்டோருக்குப் பண உதவி போன்றவற்றிற்கு இந்தப் பணம் செலவிடப்படுகிறதெனெ அரசாங்கம் சொல்கிறது. ஆயினும் வாழ்வாதாரங்களை இழந்த பலருக்கு உதவிகள் போய்ச்சேரவில்லை எனச் செய்திகள் சொல்கின்றன. இந்தப் பணத்தின் பங்கீடு அரசியல் தலையீடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து தப்பமுடியுமா?
உலகின் மிகத் துப்புரவான நகரங்களில் ஒன்றெனக் கொண்டாடப்படும் சிங்கப்பூரில் கொவிட்-19ஐக் கட்டுப்படுத்துவத்தில் ஆரம்பத்தில் வெற்றி பெற்றபோதும் பின்னர் நோயின் பரவல் அங்குவாழும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்தது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் அரசாங்கம் பல இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்குள் தனிமைப் படுத்தி முடக்கியது. வசதிகள் குறைந்த மற்றும் மனிதநெருக்கடிமிக்க விடுதிகளில் அடைபட்டிருந்ததால் அவர்களிடையே கொரோனா தொற்றுவது சுலபமாயிற்று. இது செல்வந்த நகர அரசான சிங்கப்பூர் பெருமைப்படக்கூடிய விடயமல்ல. சிங்கப்பூரை செல்வபுரியாக்குவதில் வெளிநாட்டுத் தொழிலாளரின் பங்கு உலகறிந்தது. தனி நபர்களுக்கிடையே சமூக விலகல் அல்லது சமூக இடைவெளியைப் பேணுதல் வைரசின் தொற்றைத் தவிர்ப்பதற்கு அவசியமென்பது இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் பெருந்தொகையான தென்னாசியத் தொழிலாளர்கள் வாழும் இந்த விடுதிகளில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. வேறு பல நாடுகளில் சேரிகளில் குடியிருக்கும் சமூகங்களிலும் இது சாத்தியமில்லை. வைரஸ் தொற்றைத் தவிர்க்கச் சவற்காரம் பயன்படுத்தி நாளுக்குப் பல தடவைகள் கைகளை நன்கு கழுவ வேண்டுமென்பதும் ஒரு முக்கிய அறிவுரையாகும். இது குடிநீருக்கே தட்டுப்பாடுள்ள சூழல்களில் விசேடமாக நீர் விநியோகக் கட்டுப்பாடுகளுள்ள நகரங்களில், நீர் சந்தைமயப்படுத்துள்ள இடங்களில், வரண்ட பிரதேசங்களில், பொதுவாக வறியவர்களின் குடியிருப்புக்களில் சாத்தியமில்லை.
உலகப் பொருளாதாரமும் சீனாவும்
ஏற்கனவே குறிப்பிட்டபடி கொரோனா நெருக்கடி உலகப் பொருளாதரத்தில் சீனாவின் முக்கியத்துவத்தை நன்கு புலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா இன்று உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். 2019 ஆம் ஆண்டு சீனா மொத்தமாக 2.499 ட்ரில்லியன் (trillion) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது. இதில் 49% மற்றைய ஆசிய நாடுகளுக்கு, 20.1% வட அமெரிக்காவிற்கு, 19.9% ஐரோப்பாவிற்கு, மற்றும் 4.5% ஆபிரிக்காவிற்கும் சென்றுள்ளது. ஆலைத் தொழில் உற்பத்தியில் சீனா முன்னணியிலுள்ளது. சீனாவின் ஏற்றுமதிகளில் உயர் தொழில்நுட்பவியல் துறைகள் சார்ந்த பொருட்கள் ஒரு முக்கியமான இடத்தைப்பிடித்துள்ளன. வட அமெரிக்காவும் ஐரொப்பாவும் அதன் உயர் பெறுமதிப் பொருட்களின் பிரதான சந்தைகள். சீனாவின் உள்நாட்டுச் சந்தையும் மிகப் பெரியது. கடந்த 15 வருடங்களில் உள்நாட்டு நுகர்வுச் சந்தை துரிதமாக வளர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் சீனப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மறுபுறம் அமெரிக்காவும் அதன் அணியைச் சார்ந்த நாடுகளும் சீனாவின் பொருளாதார மேலாதிக்கத்திற்கெதிராக மாற்று வழிகளைத் தேடுகின்றன. இந்தச் சூழலில் சீனாவிலிருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்குக் கவரும் முயற்சியில் அந்த நாட்டின் அரசாங்கமும் தனியார் துறைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.
2003இல் இடம்பெற்ற SARS தொற்றினால் வந்த நெருக்கடியிலிருந்து சீனப் பொருளாதாரம் மிகத் துரிதமாக மீண்டது. 2007-2008 நிதி நெருக்கடியைத் தீர்க்கச் சீனா அமுல் படுத்திய உள்நாட்டு முதலீட்டு மற்றும் சர்வதேச நிதி உதவித் திட்டம் மற்றைய ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதுடன் கடன் பளுவினால் பாரிய பொருளாதாரச் சிக்கலுக்குள்ளான கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் நேரடியாகப் பயனளித்தது. அன்று சீனா உலக முதலாளித்துவ அமைப்பை நெருக்கடியிலிருந்து விடுவிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இது சீனாவின் தேசிய பொருளாதாரத்தின் மீள்வலிமையாக்கலுக்கு உதவியது. இன்றைய நெருக்கடி சீனாவையும் பெருமளவில் பாதித்திருப்பதுடன் ஏற்கனவே சீனாவின் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் கடன்பளுக்களும் அரசாங்கத்தின் கடனும் வளர்ந்துள்ளன. இந்த நிலையில் சீனா எத்தகைய சர்வதேசப் பங்கினை வகிக்கப்போகிறது என்பதைச் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். உள்நாட்டுச் சந்தையை மீண்டும் உயிரூட்டுவது சீனாவின் முன்னுரிமையாயிருக்கலாம். அதேவேளை அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளும் மீள் எழுதல் சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு அவசியம். முதலாம் மாதம் 23ஆம் திகதி வுகானில் வாழும் அனைவரையும் அவர்களின் வீடுகளிலிருந்து வெளிவராது முடக்கும் விதியை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்த சீன அரசாங்கம் நாலாம் மாதம் எட்டாம் திகதி அதைத் தளர்த்தும் முடிவை அறிவித்த போது வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அரசாங்கங்கள் கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தன்னம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் சீனா பொருளாதார மீட்டெடுப்புச் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தொடங்கியது. ஆயினும் இந்தத் தடவை சீனாவின் பொருளாதார மீட்சிப் போக்கு முன்னைய சந்தர்ப்பங்களைவிட மெதுவாகவே நகரும் எனப் பொருளியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (Hedrick-Wong, March 25, 2020).
பொருளாதாரத்தை மீண்டும் இயங்கவைக்க வைரசின் பரவலைத் தடுக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். மறுபுறம் அத்தகைய தளர்த்தல் வைரசின் பரவலை ஊக்குவிக்கும் ஆபத்து வளரலாம். கொவிட்-19 ஐ தடுப்பதற்கு ஊசி மற்றும் அந்த நோய்க்கு மருந்து எதுவும் இல்லாத நிலையில் எல்லா நாடுகளும் எதிர்கொள்ளும் முரண்பாடு இது தான். மறுபுறம் உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது பற்றி ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது. இந்த மாபெரும் நெருக்கடியின் சமூகப்-பொருளாதார, சுற்றுச்சூழலியல் பாடங்களை ஆழப்படித்து மாற்று அணுகுமுறைகளைத் தேடாது மீண்டும் அதே உலகப் பொருளாதார அமைப்பைச் சில ‘சரிப்படுத்தல்களுடன்’ மீள்நிர்மாணம் செய்வதுதான் உடனடி நோக்கமாயிருக்க வேண்டுமா?
இயற்கையின் பழிவாங்கல்
‘இயற்கைமீது மனிதர் ஈட்டிய வெற்றிகளையிட்டு நாம் தற்புகழ்ச்சி அடையாமலிருப்போமாக. ஏனெனில் நமது ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. முதலில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த முடிவுகளைத் தருகிறது என்பது உண்மைதான் ஆனால் இரண்டாம் மூன்றாம் தடவைகளில் அது மிகவும் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காத – பல சந்தர்ப்பங்களில் முதல் கிடைத்த முடிவுகளை இரத்துச் செய்யும் – விளைவுகளைத் தருகிறது.’
Frederick Engels, 1876, The Part Played by Labour in the Transition from Ape to Man.(https://www.marxists.org/archive/marx/works/1876/part-played-labour/ ) (சமுத்திரன், 2017, Samuthran.net)
டேவிட் ஹாவிய் (David Harvey, 2020) சொல்வதுபோல் கொவிட்-19 நாற்பது வருடங்களாக இயற்கையைப் பெரிதும் துஷ்பிரயோகம் செய்த நவதாராள உலகமயமாக்கலுக்கு எதிராக ‘இயற்கையின் பழிவாங்கல்’. இயற்கை தன் சீற்றத்தைக் காட்டியது இதுதான் முதற் தடவையல்ல. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடுகள் எடுத்த நடவடிக்கைகளால் ஒரு குறுகிய காலத்தில் நமது வளிமண்டலத்தின் மாசுபடுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியின் நற்பயனை பெய்ஜிங், நியூயோக், டில்லி போன்ற பெருநகர வாசிகள் மட்டுமன்றி உலகின் மற்றையோரும் மற்ற சீவராசிகளும் அநுபவித்தனர். புதைபடிவ எரிபொருளின் சக்தியில் தங்கிநிற்கும் உலகின் கரிமப் பொருளாதாரம் ஒரு உலகரீதியான மனித அவலத்தின் காரணமாக தற்காலிகமாக இயக்கமிழக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாதானலேயே நமக்கு இந்தப் புதிய அநுபவம் கிடைத்தது. இது உலக அமைப்பின் சுற்றுச்சூழல்பற்றி ஒரு அடிப்படையான தகவலை நினைவூட்டியுள்ளது. கரிமப் பொருளாதாராமே புவிக்கோளின் வெப்பமயமாக்கலுக்குப் பிரதான காரணம். பதினெட்டாம் நூற்றாண்டு ஆரம்பித்த ஆலைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியாவே கரிம வெளியீட்டில் முன்னின்றது. பின்னர் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆலைத்தொழில் மயமாக்கல் கரிம வெளியீட்டை மேலும் அதிகரித்தன. இருபதாம் நூற்றாண்டில் வட அமெரிக்காவே இதில் முன்னணியிலிருந்தது. இதைத் தொடர்ந்து சீனா, இந்தியா, பிராசில் போன்ற வளர்முக நாடுகளில் கரிமப் பொருளாதாரம் வளர ஆரம்பித்தது. இந்த நூற்றாண்டில் புதைபடிவ எரிபொருள் பாவனையில் சீனாவே முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் கரிம வெளியீட்டிலும் அது அமெரிக்காவையும் மிஞ்சி விட்டது (Malm, 2016; சமுத்திரன், 2017).
மூலதனத்தின் தாக்கங்களுக்கு எதிராக இயற்கையின் சீற்றம் பலவிதமான தோற்றங்களில் வெளிவருகிறது. ஒரு சுற்றுச்சூழலியல்ரீதியான பிரச்சனை அதனுடன் அமைப்புரீதியில் தொடர்புள்ள வேறு பிரச்சனைகள் மீதும் நமது கவனத்தைத் திருப்புகின்றது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னாலுள்ள காரணிகளின் அரசியல் சுற்றுச்சூழலியலைப் பார்த்தல் அவசியம். நன்கறியப்பட்ட பரிணாம உயிரியலாளரும் (evolutionary biologist)முற்போக்கு சமூக ஆர்வலருமான Rob Wallace சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொன்னது போல் இந்த நெருக்கடிக்கான அமைப்புரீதியான காரணிகளைத் தேடாது ஒரு கொரோனா வைரஸில் பழியைப் போடுவதுடன் விட்டுவிடுவது உண்மையை மறைக்கவே உதவும்.
சமீப தசாப்தங்களில் வைரஸ்களினால் கால்நடைகளையும் மனிதர்களையும் பாதிக்கும் வியாதிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்பைவிட அடிக்கடி வருகின்றன. இந்த வைரஸ்களில் சில மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானவையாகவும் இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் துரிதமாக உலகெங்கும் பரவ வல்லனவாகவும் இருப்பதும் அநுபவரீதியான உண்மையாகும். விஞ்ஞானரீதியான தகவல்களின்படி கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த SARS-CoV-2 வைரசினால் வந்த நோய்தான் கொவிட்-19. இது போன்ற வைரசுகளின் பரிணாமத்திற்கும் இலாபநோக்கில் ஆலைத்தொழில்மயப்படுத்தப்பட்ட விவசாயத்திற்கும் (factory farming), விசேடமாக கால்நடை உற்பத்தி ஆலைத் தோட்டங்கள் மற்றும் பல காரணங்களால் தொடரும் காடழிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதை இயற்கை மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுகள் காட்டுகின்றன (Wallace et al, 2020; Wallace, 2016). வளரும் இறைச்சிச் சந்தைக்காக கோழி, வான்கோழி, பன்றி, மாடு ஆகியவற்றின் உற்பத்தித் தொழிற்சாலைகள் பெருமூலதனத்தால் உலகமயமாக்கப்பட்டுள்ளன. 1990களிலிருந்து சீனாவிலும் இந்தத்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆலைத் தோட்டங்கள் வைரஸ்களின் தோற்றத்திற்கும் பரிணாமத்திற்கும் உகந்த சூழல்களைக் கொண்டுள்ளன. இவற்றிடமிருந்து பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைக் கொடுக்கும் வைரசுகள் தோன்றியுள்ளன, மீண்டும் தோன்றும் ஆபத்துக்கள் தொடர்கின்றன. மறுபுறம் காடழிப்பினால் வனவிலங்குகளின் வதிவிடங்கள் சுருங்கி அவற்றிற்கும் மனிதருக்குமிடையிலான வெளியில் (இடைமுகத்தில்) மாற்றமேற்படுகிறது. இது வன விலங்கிலிருந்து வைரஸ் நுண்ணுயிரிகள் நேரடியாக அல்லது ஒரு இடைத்தரப்பிற்கூடாக மனிதருக்குச் சென்றடையும் ஆபத்தை அதிகரிக்கிறது. மனித உணவாகப் பயன்படும் வனவிலங்குகளிடமிருந்து வைரஸ் மனிதருக்குத் தொற்றும் ஆபத்தும் அதிகமென ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய வழிகளில் ஒன்றுக்கூடாகத்தான் கொவிட்-19 நோய்க்குக் காரணமான கொரோனா வைரஸ் மனிதரிடம் முதலில் சென்றடைந்திருக்கலாமெனும் கருதுகோள் விஞ்ஞானிகளால் ஆராயப்படுகிறது. வனவிலங்கு மாமிசத்திற்குச் சீனாவில் மட்டுமல்ல உலகரீதியான சந்தை வளர்ந்துள்ளது.
சீனாவில் கால்நடை உற்பத்தி ஆலைத்தொழில்மயமாக்கப்பட்டதன் விளைவாகப் பல சிறுபண்ணை விவசாயிகள் கால்நடை உற்பத்தியைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களில் பலர் வாழ்வாதாரத்திற்காகச் சந்தைக் கேள்வியுள்ள ‘வன’ விலங்குகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டார்கள். இதற்காக இவர்கள் எஞ்சியுள்ள காடுகளுக்கு நெருக்கமாகத் தொழிலில் ஈடுபட்டார்கள். இந்தப் பகுதிகளில்தான் வைரஸ் தொற்றியுள்ள வௌவால்களும் உள்ளன எனும் தகவலை இரு மானிடவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர் என ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது (Spinney, 2020). வுஹானின் உணவுச் சந்தையில் தான் வைரஸ் முதலில் மனிதரைப் பற்றிக்கொண்டது என்றால் அந்த வைரசின் மூலம் எந்த உணவு அல்லது மிருகம் எனும் கேள்விக்கான இறுதியான பதில் இன்னும் வரவில்லை. ஆனால் இந்த வைரஸ் வுஹானின் ஆய்வுகூடமொன்றிலிருந்து வெளியேறவில்லை, இது மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் அல்ல என்பதில் விஞ்ஞானிகள் மிகத் தெளிவாயிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் மட்டுமல்ல அமெரிக்காவின் புலனாய்வுத்துறையும் இதையே சொல்கிறது.
முன்னைய வைரஸ் தொற்றுகளையும்விட கொவிட்-19 உலகமயமாக்கப்பட்டதன் விளைவாக வைரஸ் மற்றும் வேறு நுண்ணுயிரிகளால் வரும் நோய்களின் அரசியல் பொருளாதார அமைப்புரீதியான மூலக்காரணிகள் பற்றிய விழிப்புணர்வு வளர ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலாபத்தையே முழுமுதல் நோக்காகக் கொண்டியங்கும் அமைப்பு மனித மேம்பாட்டையும் இயற்கையையும் அந்த நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துகிறது. கொவிட்-19இன் ஆட்டம் ஓய்ந்துவிடலாம். ஆனால் அடுத்த தடவை அதையும்விட ஆபத்தான ஒரு பெருந்தொற்றுத் தோன்றக்கூடிய அமைப்புரீதியான காரணிகள் தொடர்கின்றன. தற்போதைய விவசாய உற்பத்தி அமைப்புக்கள் தொடரும்வரை இது போன்ற ஆபத்துக்களும் தொடரும் என்பதே கசப்பான பாடமாகும். இந்த நெருக்கடி உலக கரிம முதலாளித்துவ அமைப்பின் தன்மைகள் பற்றி விழிப்புணர்வூட்டவும் ஓரளவு உதவியுள்ளது என நம்பலாம். ஆனால் இந்த அமைப்புத் தானாக மாறப்போவதில்லை.
இனி?..?..?
மனித உயிர்களைக் காப்பதற்காக பெருந்தொற்றை உடனடியாகக் கட்டுப்படுத்துவதும் அதைத் தவிர்ப்பதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதும் முன்னுரிமை பெற்றுள்ளது நியாயமானதே. கடந்த நாற்பது வருடங்களாக நடைமுறையிலிருந்த நவதாராள உலகமயமாக்கலின் விளைவாகப் பல நாடுகளின் தேசிய பொதுச் சுகாதார சேவையின் பலவீனமாக்கலையும் உலக நிறுவனங்களின் இயலாமையையும் இந்த நெருக்கடி அம்பலப்படுத்தியுள்ளது. சகல மக்களுக்கும் தரமான சுகாதார, கல்வி சேவைகளை வழங்கும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அவசியத்தை இந்த நெருக்கடி மீண்டும் வலியுறுத்துகிறது. ஆனால் வல்லரசுகளின் அதிகாரப் போட்டிகள் மத்தியிலும் பெருந்தொற்றின் விளைவுகளைக் கையாண்டு அமைப்பைத் தொடர்ந்தும் சில ‘சரிப்படுத்தல்களுடன்’ தக்கவைக்கும் அரசியல் திட்டத்திற்கே ஆளும் வர்க்கக்கூட்டுகள் முன்னுரிமை கொடுக்கும் என்பதை மறந்துவிடலாகாது. முதலாளித்துவம் பிரச்சனைகளைத் தீர்க்கும் பெயரில் பொதுவாக அவற்றை வேறு பக்கங்களுக்கு மிகவும் திறமையாக மாற்றிவிடுகிறது. இது வரலாறு தரும் பாடம். போராட்டமின்றித் தரமான சமூகப்பாதுகாப்பு உரிமைகளைப் பெறுவது சாத்தியமில்லை. நிலைபெறு மனித மேம்பாடே சமூக முன்னேற்றத்தின், அபிவிருத்தியின் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் இலாபத்திற்கூடாக மூலதனக் குவியலின் முடிவுறா வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் விதிகள் நிலைபெறும் மனித மேம்பாட்டின் முன்னுரிமைகளுடன் முரண்படுகின்றன.
கொவிட்-19 நெருக்கடியின் அமைப்புரீதியான காரணிகளைத் தேடவேண்டியதன் அவசியத்தை இந்தக் கட்டுரை வலியுறுத்தியுள்ளது. இந்த நோக்கில் சில விளக்கங்களையும் சுருக்கமாகக் கொடுத்துள்ளது. இவை பற்றி மேலும் விரிவாக பின்னர் எழுதும் ஆர்வமுடன் உள்ளேன். இன்று கொவிட்-19 தொடர்பான உலக மட்டத்திலான கதையாடலை உலக அமைப்பைத் தக்கவைக்கும் உடனடித் தற்காலிக ‘தீர்வுகளின்’ தேடலுக்குள் மட்டுப்படுத்துவதை நிராகரித்து விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களுடன் ஒரு பரந்த முற்போக்கு அரங்கிற்கு எடுத்துச் செல்வதில் பல இடதுசாரி அறிவியலாளர்களும் செயற்பாட்டு ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளது உற்சாகமளிக்கிறது.
References
Davies, Mike. 2005, The monster at our door – The global threat of avian flu, Owl Books New York
Davies, Mike. 2020, In a plague year, Jacobin 14 March 2020
Duclos, Michel. Is coronavirus a game changer? 23 April 2020, https://www.institutmontaigne.org/en/blog/covid-19-game-changer-middle-east-and-maghreb
Harvey, David, Anti-capitalist politics in the time of covid-19, Jacobin, 20 March 2020
Harvey, David, 2010, The enigma of capital, Oxford University Press
Hedrick-Wong, China´s economic recovery will be slower than it was for SARS, China Development Institute, 25 March 2020, http://en.cdi.org.cn/component/k2/item/660-china-s-economic-recovery-from-covid-19-will-be-slower-than-it-was-for-sars
ILO Monitor: Covid 19 and the world of work, updated estimates and analysis, 7 April 2020, https://www.ilo.org/wcmsp5/groups/public/@dgreports/@dcomm/documents/briefingnote/wcms_740877.pdf
Kannan, K. P. No excuse for a niggardly Covid+19 package, The Hindu
Businessline, 13 April, 2020, https://www.thehindubusinessline.com/opinion/india-needs-a-better-covid-19-relief-package/article31297141.ece
Malm, Andreas. 2016, Fossil Capital The rise of steam power and global warming, Verso
Rios, Beatriz. ILO warns of devastating consequences of covid+19 on labour markets, April 8, 2020 https://www.euractiv.com/section/economy-jobs/news/ilo-warns-of-devastating-consequences-of-covid-19-on-labour-markets/
Rodrik, Dani. Will covid-19 remake the world? https://www.project-syndicate.org/commentary/will-covid19-remake-the-world-by-dani-rodrik-2020-04
Spinney, Laura. Is factory farming to blame for coronavirus? The Guardian, 28 March 2020,https://www.theguardian.com/world/2020/mar/28/is-factory-farming-to-blame-for-coronavirus
Stevenson, G. Following the coronavirus money trail, Open Democracy, 27 March 2020, https://www.opendemocracy.net/en/oureconomy/following-coronavirus-money-trail/
Wallace, Rob. 2016, Big farms make big flu, Monthly Review Press
சமுத்திரன், 2017, மூலதனமும் இயற்கையும் – மாக்சிச செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள்,I, II, III, IV, V. Samuthran.net
Wallace, Rob.,Liebman, Alex., Chaves, Luis. F., Wallace, Rodrik. 2020, Covid+19 and the circuits of capital, Review of the month, Monthly Review, May 2020.
[1] நான் குறிப்பிடும் கட்டுரையில் தரப்படும் முழுமையான மேற்கோள்: ´If a pandemic disease breaks out, it will be in a densely populated area, with close proximity between humans and animals, such as exists in some markets in China or Southeast Asia where people live close to livestock.´ (CIA, 2009, The State of the World 2025, cited in Duclos, 2020)
நன்றி – https://samuthran.net/2020/05/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/?fbclid=IwAR13h2atajDGznQWwf0njH8jQNz4DbZEreTuz1geMht4q0J7ULL2NzGDZb4