‘படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகைநீட்டி
இட்டுங் தொட்டுங் கௌவியும் துழாவியும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லார்க்கும்
பயக்குறை யில்லைத் தாம் வாழும் நாளே.’
புறநானூறு 188 வது பாடல்.
இவ்வுலகம் சிறுவர்களுக்கானது; சிறுவர்களை பாதுகாப்பதை விட வேறொன்றும் பாதுகாப்பாக நிலைப் பெற்றிட முடியாது; இன்றைய சிறுவர்களே நாளையத் தலைவர்கள் போன்ற இன்னோரன்ன சிறுவர்களை முன்னிறுத்திய மகுட வாசகங்கள் எல்லாம், மீண்டும் வாசகங்களாக மட்டுமன்றி, செயல்வாதங்களாக முன்னெடுப்பதற்கான, காலம் வாய்ப்பாகி உள்ளதாகவே சிந்திக்க வேண்டி இருக்கிறது.
இயந்திரமயமாகிப் போன, இன்றைய சூழலில் சிறுவர்களுக்கான உலகமும் இயந்திரமயமாகிப் போன அவலநிலையையே, கண்கொண்டு காணவேண்டியுள்ளது. உலகமே எதிர்க்கொண்டிருக்கும் இப்பேரிடர்க்காலத்தில், வீட்டிற்குள் அடைப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கு கைவசமாகியுள்ள, சமுக வலைத்தள பாவனையும், அவர்களின் நன்நடத்தை பாழ்பட்டுப் போன நிலையையும் பேரிடரோடு இணைந்த பேரிடராக, ஊடகங்கள், செய்திகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும், இத்தருவாயில், சிறுவர்களின் மனவுலகம் தொடர்பில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவே, கருதக்கிடக்கிறது.
சிறுவர்கள் என்பவர்கள் ‘ வயதில் சிறியவர்கள்’ என்ற பொதுபுத்தியில் நின்றும் விடுபட்டு, சிறுவர்கள் குறித்த பரந்த பார்வை என்பது அவசியமாகியுள்ளது. ஏனெனில், இன்றைய சூழலில், சிறுவர்களின் விளையாட்டும், படிப்பும் இணையத்துடனேயே, சுருங்கிக் கிடப்பதை காணமுடிகிறது. குறிப்பாக, வேலைப்பளு காரணமாகவும், நகரமயமாக்கல் சூழலுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதன் காரணமாகவும், கல்வி போட்டி மனப்பாங்கை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாகவும், சிறுவர்களுக்கான விளையாட்டு என்பது, இணையத்துடனேயே மட்டிட்டு நிற்கின்ற அதேவேளை, பெரும்பாலும் சிறுவர்களின் பொழுது போக்கு என்பது, கார்ட்டூன்களுடனேயே, கட்டமைக்கப்பட்டு விடுகின்றமையையும் காணலாம்.
இத்தகைய கார்ட்டூன்கள், சிறுவர்கள் மத்தியில், மிகுந்த வரவேற்பை, காலாதிகாலமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அத்தகைய கார்ட்டூன்கள் குறித்தும் சிறுவர்களின் மனவுலகத்தில் அவை ஏற்படுத்தியிருக்கின்ற, ஏற்படுத்திவருகின்ற தாக்கம் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. மேற்குலக மோகத்தின் காரணமாகவும், மேற்குலகப்படைப்புகளையே, விதந்து போற்றும் ஒருவகையான மனபாங்கு காரணமாகவும், சிறுவர்கள் இரசித்துப் பார்க்கின்ற கார்ட்டூன்கள் தொடர்பில், இதுவரை காலமும் அத்துனை கரிசனை இருந்துவருவதாக அறியமுடியவில்லை.
எமது பொதுபுத்தியில், சிறுவர்களின் மனவுலகம் என்பது, கற்பனைகளோடு மட்டிட்டு நிற்பதாகவும், அவர்களுக்கான உலகம் என்பது பாதுகாக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்துக் கொண்டு, அவர்களால் உருவாக்கப்படுகின்ற கற்பனைகளோடு வாழ்ந்துக் கொண்டிருத்தல் என்பதாகவுமே, பதியவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலை என்பது உண்மைக்கு மாறானது.
எனெனில், நாம் வாழும் அதே நெருக்கடி உலகத்தில் தான் அவர்களும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் உலகம் என்பதும், அவரவர் குடும்பம் சார்ந்து, சமுகம் சார்ந்து, அதன் பின்னணியிலேயே உருவாக்கப்படுகின்றது. யதார்த்த உலகத்தோடு இயைந்தே, சிறுவர்களின் உலகம் உருவாக்கப்படுவதுடன், இலத்திரனியல் சாதனங்களும், சமுக வலைதளங்களும் தாம் விரும்பும் வகையிலேயே, அவர்களின் உளத்தைத் தகவமைக்கின்றன என்ற நிதர்சனமானத் தெளிவு என்பது அவசியமாகின்றது.
இத்தகைய தெளிவானப் புரிதலோடு, சிறுவர்களின் மனவுலகில் இடம்பிடிக்கும் கார்ட்டூன்கள், தொடர்பாக அணுகுதல் என்பது, காலத்தின் தேவையாகின்றது. பொதுவாக, கார்ட்டூன்கள் சிறுவர்களின் மனவுலகில், இடம்பிடிப்பதற்கான முக்கியமான காரணங்கள் என்ற வகையில். விரும்பத்தக்க வர்ணங்கள், இரசிக்கத்தக்க காட்சியமைப்புகள், நெஞ்சைநெகிழும் கதாப்பாத்திரங்கள், விளம்பரப்படுத்தல்கள் என பொதுபுத்தியில், நின்றும் அடையாளப்படுத்தலாம்.
எனினும், கார்ட்டூன்களில், வரும் கதாப்பாத்திரங்கள் அல்லது கதைகள் எவற்றையெல்லாம் சிறுவர்களுக்குப் போதிக்கின்றன என்பது, குறித்து நோக்குமிடத்து, பெரும்பாலான, கார்ட்டூன்கள், துப்பறிதலாகவும், அதிமானுட சக்தியுடைய பாத்திரங்களாகவும், மர்மக்கதைகளாகவும், ஆயுதமோதல்களாகவும், சண்டைக்காட்சிகளாகவும் கட்டமைக்கபடுகின்ற அதேவேளை, எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிப்பதாகவுமே அமையப் பெறுகின்றன.
ஆக,இத்தகைய கார்ட்டூன்கள் சிறுவர்களின் மனவுலகத்தில், எதிர்மறையான சிந்தனைகளும், எதிர்மறையான நடத்தை பயில்வுகளையுமே, ஏற்படுத்தி விடுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், பிறரோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை பாடமாக கற்பித்துவிட்டு, சண்டைக்காட்சிகளாக நிரம்பும் கார்ட்டூன்களையுமே, இரசிக்கச்செய்விக்கின்ற நிலையில், கட்புலஅறிவாக சிறுவர்களைச் சென்றடையும் கார்ட்டூன்கள், அவர்களின் மனவுலகில் எதிர்மறையான எண்ணங்களையே, உருவாக்கிவிடுகின்றன எனலாம். அதே நேரம், கார்ட்டூன்கள் என்பதும், வணிக நலனை நோக்காகக் கொண்டு படைக்கப்படுகின்ற நிலையில், சிறுவர்களின் மனவுலகினைக் கருத்திற் கொள்ளல் என்பது, கேள்விக்குறியே.
எனினும், சமுகக் கடப்பாடுடைய நாம், காலாதிகாலமாகச் சிறுவர்களுக்குச் சொல்லப்பட்டுவந்த சிறுவர்கதை இலக்கியங்களினை மறுவாசிப்புக்குட்படுத்தி, இயலுமானவரை நேர்மறையான எண்ணங்களை புகுத்தியது போல, கார்ட்டூன்களிலும், இத்தகைய மறுவாசிப்பு என்பது அவசியமாகின்றது. அத்தகைய மறுவாசிப்பு என்பது, இவரவர் பண்பாட்டு பின்புலம் சார்ந்தும், சூழலை நேசிப்பதையும், சக உயிர்களின் பால் அன்பு செலுத்துவதையும் வலியுறுத்துவதாக அமைதல் என்பதும் தேவைப்பாடுடையதாகிறது.
ஆக, பலவகை குறும்புகளாலும் மயக்கும், சிறுவர்களின் குறும்புகளில் மகிழ்ந்திருத்தல் என்பது எத்துனை இன்பம் பயக்கமோ, அவ்வாறே, அவர்களின் நடத்தை என்பதும் இன்பம் பயப்பதாக அமைத்துவிட வேண்டிய கடப்பாடுடைய நாம், நமது சூழல்சார்ந்த பரீட்சயத்தை, அவர்கள் விரும்பும் மனவுலகில் தகவமைக்கும் பொறுப்பில் நின்றும் வழுவாது, கார்ட்டூன்உலகை, மறவாசிப்பிற்கு உட்படுத்தி, அவர்களின் கைகளில் கையளிப்போமாக!
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழம்.