கொரோனா தொற்றுநோய் பரவலுடன் இணைந்தாக மேற்கொள்ளப்படும் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு உலகின் சக்திவாய்ந்த இஸ்லாமிய அமைப்பு இலங்கைக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் விரோதப் போக்கு அதிகரித்துள்ளதோடு, பக்கச்சார்பான மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஊக்குவிப்பது தொடர்பில், ஆழ்ந்த கவலை அடைவதாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதற்கு முஸ்லிம்களே காரணமென பரவலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
57 நாடுகளை உள்ளடக்கிய குறித்த அமைப்பு, இலங்கை அரசாங்கத்தின் கொள்கையை கண்டிப்பதாக தெரிவித்துள்ளதோடு, முஸ்லிம்களின் கௌரவத்தை பாதுகாக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்களை அதிகாரிகள் தகனம் செய்ததாகவும், இந்த நடைமுறைகளை நிராகரித்த முஸ்லிம் சமூக உறுப்பினர்களை கைது செய்யப்படுவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாது செய்வதை இலக்காகக் கொண்ட அனைத்து கொள்கைகளையும் நடைமுறைகளையும் நிராகரிப்பதாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களின் மத நடைமுறைகள் மற்றும் சடங்குகளை மதிக்கவும், அவர்களின் கௌரவத்தை பாதுகாக்கவும், வெறுப்பு பேச்சை வெளிப்படுத்துபவர்களை அடையாளம் காணவும் முன்வருமாறு, இலங்கை அதிகாரிகளுக்கு குறித்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு ஒத்துழைப்பு, பிணைப்புகள் மற்றும் அரசுகளுக்கு இடையேயான ஒற்றுமையின் மதிப்புகளை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பின் பங்கேற்பையும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்கு கூட்டாகவும் திறமையாகவும் பதிலளிக்க ஒவ்வொரு அரசின் அங்கத்தினரிடையே ஒத்திசைவு மற்றும் கூட்டு செயற்பாடு அவசியம் எனவும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.