கலாநிதி.சி.ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை இந்தப் பக்கத்தில் வாசித்தேன். பழங்குடிகள் ஒரு காட்டில், தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர்கள் எனினும், அதிகாரமற்ற குழுவினராக, அடர்ந்த காடுகளுக்குள்ளும், பரந்த பறவை வனங்களுக்கிடையேயும் தம்மை தனிமைப்படுத்தி வாழ்பவர்கள். ஆனால், அரசஅதிகாரம், முதலாளித்துவம், காலனித்துவம், ஏகாதிபத்தியம், உலகமயமாக்கம் என்பவற்றின் தாக்கங்களிலிருந்து தம்மை ஒதுக்கிக் கொண்டவர்கள் என்று ஆசிரியர் கூறுகின்றார். தொன்றுதொட்டு வாழ்பவர்கள் என்ற அடிப்படையில், உருவாகி சிங்களத்திலும், தமிழிலும் இன்னும் சில இந்திய மொழிகளிலும் வழங்கும் ஆதிவாசிகள் என்ற சொல்லை விடுத்து, இன்றைய ஆய்வாளர்கள் ஏன் பழங்குடியினர், தொல்குடியினர் என்ற சொற்களைப் பாவிக்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை. பழங்குடிகளா, தொல்குடிகளா என்று விவாதங்களையும் ஆரம்பித்துள்ளனர். ஆங்கிலத்தில் ஆதிவாசிகளைக் குறிக்கும் Indigenous tribe என்ற சொல்லையே நவீன காலத்தில், மானிடவியலில் ஏற்பட்டிருக்கும், கருத்து விரிவையும் உட்கொண்டு, பயன்படுத்துகிறார்கள். ஆதிவாசிகளும் அச்சொல்லாலேயே தம்மை குறிக்கின்றனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
அடுத்தபடியாக ஜெயசங்கர், ‘முதலாளித்துவம், காலனித்துவம், ஏகாதிபத்தியம், உலகமயமாக்கல் போன்ற கருத்தியல்களுக்கு, எதிராகப் போராடுபவர்களாக ஆதிவாசிகள் உள்ளனர்’ என்று கருத்துப்பட எழுதுகிறார். இது சரியான கருத்தாக எனக்குப்படவில்லை. அவர்களின் உணவு பழக்கவழக்கம் தொட்டு, சகல வாழ்வியல் முறைகளும், மேற் சொன்னவைகளுக்கு சாதகமானவைகள் அல்ல. இந்த அளவிலேயே, மேற்கூறியவற்றுக்கான அவர்களின் எதிர்ப்பு, முரண்பாடாக அமைந்துவிடுகிறது. இதற்கு மேல், அவர்களின் எதிர்ப்பு போதவில்லை. இதனாலேயே குமாரிஜெயவர்தனா போன்ற அறிஞர்கள், அவர்களை ‘ முதிர்ச்சியடையாத கிளர்ச்சியாளர்கள்’ என்று அழைத்தனர். ( பார்க்க பிரவாகம் 5)
நெடிய இலங்கை வரலாற்றில், இரு சம்பவங்கள் மாத்திரந்தான், வேடர்கள் ஆயுதம் ஏந்தியதாக குறிக்கப்பட்டுள்ளது. ஒன்று : இரண்டாம் இராசசிங்கன் படையில், சில வேடர்கள் இணைந்து ஒல்லாந்தர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட்டமை. இரண்டாவது : 1817 – 1818 இல், நடந்த ஊவாவெல்லஸ்ஸ கலவரத்தில், விரல்விட்டு எண்ணக்கூடிய, வேடர்கள் கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக, போரிட்டமை. இந்த இரு சம்பவங்களைத் தவிர, அவர்கள், ஏனைய போர்களில் பங்குபற்றியதாக அறியமுடியவில்லை.
இந்த இடத்தில், 17 ஆம் நூற்றாண்டு இலங்கையை சித்தரித்த றோபட்நொக்ஸ் குறிப்பிடும் சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது. ‘இலங்;கை அரசன் ஒருவன், வேடர்களின் அம்பெய்தும் திறமையை அறிந்து, அவர்களை தமது படையில் சேருமாறு வற்புறுத்தினானாம். மனிதர்களது மீது அம்பெய்துவது எங்களது வழக்கம் இல்லை. நாங்கள் வயிற்றுப்பாட்டுக்குத்தான் மிருகங்களைக் கொல்கிறோம். எங்களை விட்டுவிடுங்கள் என்று அரசனிடம் கெஞ்சிக் கேட்டுப்பார்த்தனராம். அரசன் அவர்களை கட்டாயமாகச் சேரத்தான் வேண்டும் என்று பணித்தானாம். வேறுவழியில்லாமல், முதல்நாள் போரில் கலந்துக் கொண்ட அவர்கள், மறுநாள் போருக்கு வராமல் அடர்ந்த காட்டில் மறைந்துக் கொண்டனராம்.’ அந்த நிகழ்வு ஜெயசங்கர் மேற்கோள் காட்டும் கூத்துப் பாடலுக்கு உதாரணமாக அமைவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறான கருத்துக்கள் கொண்ட, பாடல்களை நமது கூத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கப் பெருமையாய் உள்ளது. அப்பாடலின் அடி ‘ வெற்றி என்கிறோம் ஃ வெற்றியில்லை ‘ என்றிருக்க வேண்டும்.
ஜெயசங்கரின் மானிட அக்கறையின் வெளிப்பாடுகளாக, அவரின் எழுத்துகள் மிளிர்வதை அவதானித்து வருகிறேன். அவர் ஆதிவாசிகள், விளிம்புநிலையினர் மீது ஆழ்ந்த பரிவும் அக்கறையும் கொண்டவர். அந்தவகையில், இந்தக் கட்டுரையும் மற்றவர்களுக்கு வெறும் காட்சிப் பொருளாகத் தோன்றும். ஆனால் மக்கள் வழங்கும் மானிட முக்கியத்துவம் உள்ள செய்தியை விளக்கி நிற்கிறது. மனித குலம் உய்ய இந்த செய்தியை ஏற்றேத் தீர வேண்டும்.
சாதிருவேணி சங்கமம்.
1 comment
நல்ல விமர்சனப் பார்வை.தொடருங்கள்.
வாழ்த்துக்கள்….