இன்று உலகம் முழுவதையும் உலுப்பிக் கொண்டிருக்கும் சர்வாதிகாரியான கொரோனாவிற்கு மாங்காய்ப் பிஞ்சு போன்ற நம் இலங்கை நாடு மட்டும் என்ன எட்டாக் கனியா? கொரோனாவும் இலங்கையை முயற்சி செய்து பறித்துவிட்டது. பறித்தது என்னவோ உண்மை என்றாலும் பறிக்கப்பட்ட இலங்கையின் தற்போதைய நிலை என்ன? அபிவிருத்தி நோக்கிப் பயணம் செய்த இலங்கை அடங்கிப்போய்விட்டதே. இச்சவாலுக்கு மத்தியில் இலங்கை சிறிது சிறிதாக எழுந்து வருகின்றபோதும் பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என்று அனைத்தும் இதுவரை முடக்கப்பட்டுத்தானே இருக்கிறது. அபிவிருத்திக்கு அவசியமான கல்வி நடவடிக்கைகள் மட்டும் இதுவரை எழுந்திராமைக்கான காரணம்தான் என்ன? இன்று எல்லோர்க்கும் அவசியமானதாகக் கருதப்படும் கல்வி உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்பது தானே அனைவரினதும் எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்புக்களும் சிலவேளைகளில் ஏமாற்றங்களாகலாம் என்பது உண்மைதான்.
இன்றைய உலகமாயமாதலின் காரணமாக ஆண், பெண் பால் வேறுபாடின்றி அனைவரும் தொழிலை நோக்கிப் பயணம் செய்வதற்கும் அத்தொழிலை தாங்கள் கற்ற கல்வியின் மூலம் பெற்றுக் கொள்வதற்கும் ஆரம்பக்களமாக அமைவதில் ஒன்றாக பல்கலைக்கழக உயர் கல்வி அமைகின்றது. ஆனால் இம்மாபெரும் சவாலுக்கு முகங்கொடுக்க முடியாத பல்கலைக்கழகங்கள், தங்களது கல்வி நடவடிக்கைகளை எல்லாம் எங்கோ ஒரு இடத்தில் பத்திரமாக மூட்டை கட்டி வைத்திருக்கின்றன. இந்நிலையில் வீட்டில் முடக்கப்பட்ட மாணவர்களின் கற்ற கல்வியின் மிகுதியும் தொழில் நோக்கிய பயணமும் எப்பொழுது ஆரம்பமாகுமோ? இக் கேள்விக்கு மத்தியில், பலமுறை விடுமுiறையைக் கண்டு சலித்துப் போயுள்ள மாணவர்களுக்கு இவ் அசாதாரண சூழ்நிலைகளுக்கு அப்பால் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமானாலும் கூட திடீரென்று கட்டாயமான சுகாதாரப் பாதுகாப்புக்களுடன் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு செல்கின்றபோது அதனை சுமூகமாக ஏற்றுக்கொண்டு கற்க முடியாத மனநிலையே அவர்களிடத்தில் ஏற்படும்.
ஏனெனில் பல நாட்கள் வீட்டிலிருந்து பல்கலைக்கழக விடுதிகளுக்கு செல்கின்ற மாணவர்களுக்கு சமூக இடைவெளியைப் பேண வேண்டிய இந்நேரத்தில் ஏனைய மாணவர்களோடு சமூக இடைவினை கொள்ள வாய்ப்பிருக்குமா? பல்கலைக்கழக விடுதிகளில் ஒரு அறையினுள் பல மாணவர்கள் சேர்ந்து படிக்கின்ற நிலையும் அதற்கு அப்பால் தங்களது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பழைய நிலையும் இந்நேரத்தில் கிடைக்குமா? ஒரு அறைக்கு நான்கோ ஐந்தோ என்ற நிலையிலேயே விடுதிகள் இல்லாத பஞ்சம் இருந்தது. இந்நிலைமாறி ஒரு அறையில் ஒன்றோ இரண்டோ என்ற நிலை வருகின்ற போது விடுதிகளுக்கு எங்கு போய் நிற்பது? இவர்களை விட வெளியில் இருந்து ஒவ்வொருநாளும் பல்கலைக்கழகம் வந்து போகும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் பயவுணர்வுடன் மடியில் நெருப்பைச் சுமந்து கொண்டுதான் வந்துசெல்வார்கள். எதிர்கால உலகு அல்லது பயணம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்விக்கான விடை யாருடைய கையிலும் இல்லாத இந்நேரத்தில் பல்கலை மாணவர்களின் தொழில் நோக்கிய எதிர்காலப் பயணம் மட்டும் என்னவாக இருக்கப் போகிறது? இந்நடைமுறைச் சவாலால் வயது தாண்டி பட்டத்தைப் பெற்றுவிட்டாலும் இனிவரும் எதிர்கால உலகோடு நின்று தொழில்புரியக் கூடிய சக்தி பல்கலை மாணவர்களிடத்தில் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டியும் இருக்கின்றதே. அவ்வாறு இல்லை என்றால் பட்டம் பெற்றும் பயனில்லை. முன்னர் ஒரு தொழிலை இலகுவாகப் பெற்றுவிட்டமாதிரிப் எதிர்காலத்தில் பெற்றுவிடலாம் என்று கனவு காண்பது கடினம்தான் போலும்.
ஏனெனில் எதிர்வரும் உலகில் எப்போது என்னென்ன நடக்க இருக்கின்றதென்று யாருக்கும் தெரியாது. எனவே அனைத்திற்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் கல்விக் கொள்கைகள் மட்டுமன்றி அக்கல்வியைக் கற்ற மாணவர்களும் எதிர்காலச் சமூகத்திற்குள் நின்று சேவையாற்றுவதற்குத் தயாராக மாற வேண்டும். இச்சூழ்நிலையில்தான் எதிர்கால உலகை சிந்திக்காது இன்றைய நடைமுறையை மட்டும் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான இணைய வழி கற்றல் முறையின் பிரவேசம் வந்திருக்கிறது. என்ன இணைய வழிக் கற்றலா? என்ன இது புதிதாக இருக்கிறதே? சிலர் இவ்வாறு சிந்திக்கலாம். இருந்தாலும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ள, இன்றைய நாளில் கற்றலிலும் கற்பித்தலிலும் எளிமை, விரைவு, விளைபயன், ஈர்ப்பு, பல்லூடகம் போன்ற பல்வேறு புதிய பரிமாணங்களை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்ற இணையம் வழியான கல்வி முறை இன்றைய காலத்திற்கு ஏற்றதாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணையக் கற்றல் முகாமைத்துவ முறை, ணுழழஅ உடழரன ஆநவவiபெஇ புழழபடந உடயளள சழழஅ மற்றும் புலனம் வழியாக விரிவுரைகளை நடாத்தியும் பின்னர் நடாத்தப்பட்ட விரிவுரைகளுக்குள் செய்முறைகளையும், பணிகளையும் மாணவர்களுக்குக் கொடுத்தும் வருகின்றனர். பரவாயில்லை இது வரவேற்கத்தக்க விடயம்தான். ஆனால் சற்று சிந்திக்க வேண்டிய விடயமும் கூட. ஏட்டுக் கல்வியாக இருக்கின்ற நம்நாட்டுக் கல்விக் கொள்கையில் இலத்திரனியல் கல்வி முறையை திடீரென்று கலக்க முற்பட்டால் சாத்தியமாகுமா? இந்நடைமுறைச் சவாலுக்கு மத்தியில் திடீர் முயற்சிதானே? ஆம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் முயற்சி வெற்றியளிக்காவிட்டால் என்ன பயன்.
ஏன் வீட்டிலிருந்தவாறே இணைய வழி வகுப்புக்களில் பங்கேற்பது இலகுவானது தானே அதில் என்ன வரப்போகின்றது என சிலர் கருதலாம். அது ஒருவேளை சாதாரண சூழ்நிலையில் அவர்கள் கருதுவதற்கு மட்டும்தான் சாத்தியமாக இருக்கும். வெளியில் எங்கும் செல்லாது பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என அனைவரையும் முடக்கி வைத்திருக்கும் இந்நேரத்தில், பெரும்பாலான பின்தங்கிய கிராமங்களில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வருகின்ற மாணவர்களின் நிலை என்ன? அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கணினி, தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை அவர்களது சமூகச் சூழலில் எதிர்பார்ப்பது தவறானதுதானே. ஒருவேளை அவ்வசதி வாய்ப்புக்கள் இருந்துவிட்டால் கூட பல பேர் வசிக்கின்ற ஒரு சிறுவீட்டில்; உள்ள நெரிசலுக்கு மத்தியிலும் ஏனையவர்கள் போடும் சத்தங்களுக்கு மத்தியிலும் மாணவர் ஒருவர் விரிவுரைகளில் கவனம் செலுத்திப் படிப்பதென்பது கடின விடயமாகத்தான் இருக்கும். குறிப்பாகப் பெண்பிள்ளைகள்தான் வீட்டு வேலைகள் செய்வதிலும் அம்மாக்களுக்கு உதவி செய்வதிலும் கூடிய ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். இவர்களை எந்த வேலையும் செய்ய விடாது இருந்து படியுங்கள், செயலட்டைகளைச் செய்து அனுப்புங்கள் என்றால் அவர்களது மனநிலை என்னவாக இருக்கும். இந்நேரத்தில் வீட்டு வேலைகளைச் செய்வதா? கல்வி வேலைகளைச் செய்வதா? வீட்டில் அனைவரும் முடக்கப்பட்டாலும் ஒற்றுமையாக ஒரு இடத்தில் இருக்கின்ற இவ்வேளையில் எந்நேரமும் தொலைபேசியிலோ, கணினியிலோ முகத்தைப் புதைத்துக் கொண்டு இருப்பதனால் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக் கொள்ளக் கூட நேரமில்லாத நிலைக்கு இம்முறை தள்ளியிருக்கிறது.
அதுமட்டுமன்றி கொரோனா முன்னெச்சரிக்கை கராணமாக சில மாணவர்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தினாலும் இணைய வழி வகுப்புக்களுக்குப் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் இத்தகைய மாணவர்கள், விரிவுரையாளர்கள் கொடுக்கும் பாடப்பணிகளை எவ்வாறு செய்து முடிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இவர்களை விட பல்கலைக்கழகங்களில் கற்கின்ற மாற்றுத்திறனாளிகளை யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை பார்த்தீர்களா? ஒருவரின் உதவியோடு தங்களது கற்கை நெறியினைத் தொடர்கின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவ ஆட்கள் இல்லாத நேரத்தில் இதுபோன்ற பணிகளைச் செய்யமுடியாமல் போகும் என்பதை யாரும் உணரவில்லை. இதற்காக எல்லா மாணவர்களும் ஒருவரின் உதவியோடு தான் கற்கின்றனர் என்பதனை இங்கு சொல்லவும் வரவில்லை. குறிப்பாக பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்கள் பெரும்பாலும் அடுத்தவரின் உதவியின்றி படிப்பதும் எழுதுவதும் கடினமான விடயம். பல்கலைக்கழகங்களில் அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வகுப்புக்கள மற்றும் உதவியாளர்கள் துணை கொண்டு விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன.
தற்பொழுது இணையம் மூலமாக நடாத்தப்படுகின்ற விரிவுரைகள், அதன்மூலம் அனுப்பப்படுகின்ற கோப்புக்களைப் பெறுவதென்பதும் அதன் பின்னர் விரவுரையாளர்களால் கூறப்படுகின்ற பணிகளை செய்து அனுப்புவதென்பதும் அவர்களுக்கு மிகவும் கடினமானதாகவே அமைகின்றது. இவ்வகையில் இவ் இணைய வழி கற்றல் என்பது சாத்தியமற்றதுதானே? இல்லை. முடியாதென்று சொல்வது மூடத்தனம். நினைத்தால் அவர்கள் வீட்டில் இருந்தவாறே எவ்வளவு இலகுவாகப் படிக்கலாம். எவ்வளவு இலகுவான கற்றல் முறை இது. இவ்வாறு ஒருசிலர் மனதில் தோன்றலாம், தோன்றியும் இருக்கலாம். அவ்வாறாயின் இக்கற்றல் முறைக்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளின் பயன் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதனையும் அறிந்துகொள்ளத்தானே வேண்;டும். இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர் மையக் கல்வி முறை தான் காணப்படுகின்றது. மாணவர் மையக் கல்வி முறை என்பது மாணவர்களுக்கு ஒரு விடயத்தை கற்றுக் கொடுத்து அது தொடர்பான விடயங்களை தேடலுக்குட்படுத்தி அவர்களது சிந்தனையை வளர்த்துவிடுவதாகும். மாணவர்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேற வேண்டுமாயின் அவர்களது சிந்தனையாற்றல் துரிதமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அறிவுடையவர்களாகவும் ஆற்றல் உடையவர்களாகவும் உருவாக முடியும்.
எந்த நூலக வசதியும் இல்லாத இந்நேரத்தில் தற்பொழுது உபயோகத்திலுள்ள இணைய வழி கற்றல் முறைகளுள் ஒன்றான புழழபடந உடயளளசழழஅ செயலியின் மூலம் விரிவுரைகள் எதுவும் நடத்தப்படாமல் மாணவர்கள் கற்பதற்கான குறிப்புக்கள் மட்டும் அனுப்பப்பட்டு அக்குறிப்புகளுக்குள் எவ்விதத் தேடலும் இல்லாமல், செயலட்டைகள், கணிப்பீடுகள் போன்றவற்றை செய்து அனுப்புவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிலை மாணவர்களின் சிந்தனைப் போக்குகள் வளர்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துமா? இருக்கின்ற விடயத்தை வைத்து கணிப்பீட்டினையோ செயலட்டையினையோ செய்து அனுப்புவது என்பது பயனற்ற ஒன்றுதானே. சரி இதனால் ஏதோ ஒருவகையில் மாணவர்கள் பயனடைகின்றார்கள் எனின் சமீபகாலமாக ணுழழஅ உடழரன ஆநவவiபெ என்ற செயலி அனைவராலும் இலவசமாகப் பயன்படுத்தப்படுகின்றமையினை யாவரும் அறிந்திருப்பீர். வீடுகளில் முடங்கியுள்ளவர்கள் கடந்த ஒரு மாதகாலமாகப் பயன்படுத்திவரும் இச்செயலியின மூலம் காணொளிக் கூட்டம், தனியாக உரையாடுவது, குறுந்தகவல் அனுப்புவது, நேரடி வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதாலும் செயலியைப் பயன்படுத்துவது எளிதானது என்பதாலும், புதிதாகக் கணக்கு தொடங்க வேண்டியதில்லை என்பதாலும் கடந்த ஒரு மாதத்தில் அறுபது மில்லியனுக்கும் மேலானவர்கள் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து உபயோகித்து வருகின்றனர். இச்செயலி தற்பொழுது குறைந்தது நூறு பேரினை உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழகங்களிலும் உலாவி வருகின்றது. இச் செயலி மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நேரடியாக விரிவுரைகளைக் கவனிப்பதுபோல் இருந்து கவனித்து தங்களுக்கு வேண்டிய சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதன்காரணமாக மாணவர்களுக்கு இது இலகுவான கற்கையாகவும் இருக்கிறது. இதொல்லாம் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளின் போது மாணவர்கள் காரணமின்றி வெளியில் செல்ல முடியாதது போல் இங்கு இல்லை.
விரும்பிய நேரத்தில் வெளியில் செல்லலாம். ஆகவே மாணவர்களிடத்தில் ஒழுங்கான தூண்டலுக்குரிய துலங்களை இம்முறையினூடாக எதிர்பார்க்க முடியாத நிலையே காணப்படுகின்றது. வீட்டில் இருந்து நேரம் ஒதுக்கி திரைப்படம் பார்க்கும் இன்றைய மாணவர் சமுதாயத்தில் அந்நேரத்தை விரிவுரைகளுக்கு ஒதுக்கி படியுங்கள் என்றால் வேலைக்கு ஆகுமா? இது ஒருபக்கமிருக்க இந்தச் செயலியைப் பயன்படுத்திய ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சமீபத்தில் முறைப்பாடுகள் எழுந்துள்ளன. இச் செயலியினூடாக நேரடியாக விரிவுரைகள் நடாத்தப்படுவது பாதுகாப்பற்றது என்பதோடு மாணவர்களுக்கு பயனற்றதும் கூட என்பதனால் சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் இச் செயலிக்குத் தடை விதித்துள்ளது. இந்திய அரசு, அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில் இலங்கைப் பல்கலைக்கழக கல்விக் கொள்கையில் மட்டும் இணைய வழி கற்றல் முறை எந்தளவிற்கு சாத்தியப்படும்? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப பல்துறையில் தோன்றி வரும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கவனத்தில் கொண்டு புதிய விடயங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் அவை சாத்தியமுடையதாக இருக்க வேண்டும். இவ்வசாதாரண சூழ்நிலையில் அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் எடுக்காத சமத்துவமற்ற மற்றும் சாதகமற்ற முறையாக இம்முறை இருக்கின்றமை மாணவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழிலுலகை கேள்விக்குறியாக்கிவிடக் கூடும். எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சுய நிகழ்த்துகைக் கற்கையினைத் தொடர்வதற்கும், அரசாங்கம் போட்டி நிறைந்த தொழிலுலகை எவ்வாறு வெற்றிகொள்ள முடியும் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் தயாராக இருக்கும்போதே எதிர்கால சவால்களுக்கு மத்தியில் ஏற்படும் கல்விசார் பிரச்சனைகளை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும்.
தெ.பேபிசாளினி
கி. பல்கலைக்கழகம்