பட்டம் விடுவதை பார்வையிட சென்ற இரு சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற ஒரு குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளது. 3 மற்றும் 6 வயதுடைய 2 குழந்தைகளே இவ்வாறு கிணறு போன்ற ஒரு குழியில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில் கடந்த சனிக்கிழமை(9) மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும் குறித்த கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த இரு சிறுவர்களது சடலங்களும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவர்களின் தாய் சிற்றுண்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவேளை சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள சிறுவர்கள் பட்டம் விடுவதை பார்வையிட அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.இவ்வாறு சென்ற இரு சிறுவர்களும் கிணறு போன்ற ஒரு குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்கள் வீழ்ந்த கிணறு போன்ற குழி உள்ள பகுதி அவர்களின் வீட்டில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்கள் சிராஜ் சிபாம்(வயது-6) சிராஜ் ரிஸ்ஹி(வயது-3) ஆகிய சிறுவர்கள் ஆவர்.உயிரிழந்த சிறுவர்களின் தந்தை வேலைவாய்ப்பிற்காக மத்தியகிழக்கு நாடோன்றில் பணி புரிந்து வருகின்றார்.
இது விடயமாக சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபாவிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது
சனிக்கிழமை(9) மாலை குறித்த சிறுவர்கள் கிணறு போன்ற குழியில் தவறி வீழ்ந்து மூழ்கியவண்ணம் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். ஆனால் அச்சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிர் நீத்துள்ளனர். இது குறித்து விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
இதே வேளை சம்பவ இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை(10) சம்மாந்துறை காவல்நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சென்ற குழுவினர் காலை அம்பாறையில் இருந்து வருகை தந்த தடயவியல் காவல்துறையினருக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதுடன் உயிரிழந்த சிறுவர்கள் வீழ்ந்த கிணறு மற்றும் சுற்றுச்சூழலில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகினறனர். #சம்மாந்துறை #சிறுவர்கள் #மரணம் #கிணறு