142
இனி வரும் காலங்களில் வாய்க்கால் அமைப்புகளுக்கும் வேறு அமைப்புகளுக்கும் விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது இல்லை என்றும் சிறு போக பயிர்ச் செய்கையின் போது நீரின் அளவை அடிப்படையாக கொண்டு கட்டுக்கரை குளத்தின் கீழ் காணி உள்ள விவசாயிகளுக்கு ஈவு முறையில் பகிர்ந்து அளிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறு போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளுவது தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் 10 வாய்க்கால் அமைப்புக்களின் பிரதி தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கூட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஆரம்பத்தில் கூட்டத்தில் ½ ஏக்கர் படி திட்டத்தை நடை முறைப்படுத்த தீர்மானிக்கப் பட்டிருந்தது.சௌபாக்கியா திட்டத்தின் கீழ் ½ ஏக்கர் வீதம் ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்றைய தினம் திங்கட்கிழமை(11) இடம் பெற்ற கூட்டத்தில் வருகை தந்திருந்த விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும் வழமையான நடை முறைகளுக்கு அமைவாகவும் குறிப்பாக கடநத 50 வருடங்களுக்கு மேலாக நடை முறையில் இருந்து வரும் முறையாக நீர் வரத்து அதிக அளவில் இருப்பதினால் கட்டுக்கரை குளத்தின் கீழ் காணி உள்ளவர்களுக்கு ஈவு ஈடிப்படையில் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானத்திற்கு அமைவாக சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வாய்க்கால் அமைப்புகளுக்கும் வேறு அமைப்புகளுக்கும் விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது இல்லை என்றும் சிறு போக பயிர்ச் செய்கையின் போது நீரின் அளவை அடிப்படையாக கொண்டு கட்டுக்கரை குளத்தின் கீழ் காணி உள்ள விவசாயிகளுக்கு ஈவு முறையில் பகிர்ந்து அளிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைகள் தொடர்ந்தும் இடம் பெறக்கூடாது என இக்கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம்.சில சந்தர்ப்பங்களில் ஏழை விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் சரியான முறையில் ஒழுங்கு படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். புலவுக்குள் நெல் விதைப்பு செய்வது ஒரு தவறான செயல்பாடு என்று வலியுறுத்தி கூறியுள்ளேன்.அவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்.விதைப்பு ஆரம்பிக்கும் திகதியாக எதிர் வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன பொறியியலாளரும், திட்ட முகாமையாளரும், கமநல சேவை உதவி ஆணையாளரும் இணைந்து காணிப்பங்கீடுகளை மேற்கொள்ளுவார்கள் என்றும் இறுதி பட்டியல் எதிர் வரும் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டதன் பின் வயல் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் மேலும் தெரிவித்தார். #விவசாயம் #கட்டுக்கரை
Spread the love