Home இலங்கை சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை

சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை

by admin

தமிழீழ விடுதலைப் புலிகள், ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

விடுதலைப்புலிகள் பற்றி சுமந்திரன் பேட்டியில் சிங்கள மொழியில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எம்மிடம் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுவதாலும் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளது. அது போல (புளொட்) தமிழீழ விடுதலைக் கழகமும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (மே 8) அன்று ஆக இருக்க வேண்டும் சிங்கள ஊடகத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பில், விடுதலைப் புலிகளையும், ஆயுதப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் வெளியிட்ட கருத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட கருத்தாகவும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

1976 மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடு நடைபெற்றது. தமிழர் இழந்த சுதந்திரத்தை மீட்க (சுதந்திரத் தமிழீழம்) வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அப்பொழுது நாம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். 1971ல் ஆட்சியைக் கைப்பற்ற ஆயுதப் புரட்சி செய்த ஜே.வி.பியினர் ஆயிரக்கணக்கில் அந்தச் சிறைகளில் இருந்தனர்.

1977 பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆணை கேட்டு பெரு வெற்றி பெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழின விடுதலைக்காக 1971, 1972களில் உருவாகியது.

1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று ஆயுதப் போராட்டத்தின் மூலம் அந்தச் சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று இயங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைளில் ஒருபொழுதும் பங்காளிகளாக இருந்ததில்லை.

1983 ஜூலைக் கலவரத்தின் பின் இந்திய நாட்டின் தலையீடும், அனுசரனையும் இடம்பெற்ற பேச்சுகள் இந்தியாவில் புதுடெல்லியில் இடம்பெற்ற வேளைகளில் பேச்சுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈரோஸ் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

2001-2002 காலப்பகுதியில் நோர்வே அனுசரனையுடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் பேச்சு ஆரம்பித்தது. 2002 டிசம்பரில் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்தனர்.

2002 பெப்ரவரியில் நோர்வே ஒஸ்லோ நகரில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சின் போது ஒரு உடன்பாடு எட்டப்பட்டது(OSLO Communique). அந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் சர்வதேசத்திற்கு முன் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் “தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சு நடத்தி இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டது.

அவ்வேளையிலிருந்துதான் சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழர்களின் உச்ச அரசியல் பலம் ஏற்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியான பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போரும், போர் நிறுத்தமும், சர்வதேச அரங்கில் இலங்கை அரசுடன்  ஒஸ்லோவில் பேச்சு நடத்த உடன்பட்ட காலத்தில் ஜனநாயகக் கோட்பாட்டில்; இயங்கி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அப்பேச்சுகளில் பங்கு கொண்ட விடுதலைப்புலிகளை அங்கீகரித்து நின்ற காலத்திலிருந்துதான் இலங்கை இனப்பிரச்சனை சர்வதேசத்திலும் அரசியல் விடுதலைப் பரிணாமத்தைப் பெற்றது.

அந்த ஒஸ்லோ உடன்படிக்கையின் அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கைகளையே 2004முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுத் தேர்தல்களில் பெரு வெற்றி பெற்று வருகிறது. 2004 பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2009 போர் முடிந்த பின் 2010 பொதுத் தேர்தலிலும் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றது. 2011 ஒக்டோபர் 24 முதல் 27 வரை அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பின் பேரில் வோசிங்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடன்  பேச்சில் ஈடுபட்டனர்.

இறுதியில் 2012 மார்ச்சில் நடைபெறவிருந்த ஐ.நா.மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற விசாரணைக்கான பிரேரனை தயாரிக்கப்பட்டது. தமிழின விடுதலைக்கான போர் இலங்கை அரசு இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலேயே நடைபெற்றது.

2011 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், 2013 மாகாண சபைத் தேர்தல்களில், 2015பொதுத் தேர்தல்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகள், ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே வெற்றிகள் ஏற்பட்டன.

ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுத மேந்திப் போராடிய இயக்கத்தினர், போராளிகளின் வழக்குகளில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் , நீலன் திருச்செல்வம் முதலான பல வழக்கறிஞர்கள் வாதாடியிருந்தனர்.

இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியக் காங்கிரஸ் அமைப்புக்களில் ஜவர்கலால் நேரு, சுபாஸ் சந்திர போஸ் முதலான தலைவர்களிருந்தனர். மகாத்மா காந்தி காங்கிரசில் இடம்பெறவில்லையாயினும் அவர் ஆதரவும் தலையீடுகளும் இருந்தன.

ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு செய்து மக்களைக் கொன்ற ஆதுரையை கொன்ற பகவத்சிங், உத்தம சிங் முதலானோர் கைதுசெய்யப்பட்டு கராச்சி நீதிமன்றத்திலே தூக்குத்தண்டனை வழங்க வேண்டுமென்ற வழக்கில் ஜவர்கலால் நேரு தோன்றி பகவத்சிங் முதலானோரை விடுதலை செய்ய வேண்டுமென வாதாடினார்.

தூக்குத் தண்டனைக்கு எதிராக மகாத்மா காந்தி இங்கிலாந்து வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் மகாத்மா குறிப்பிட்டார். “பகவத்சிங் முதலானோரின் போராட்ட வழிமுறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும், அவர்கள் தியாகத்தை மதிக்கிறேன். அவர்களைத் தூக்கிலிட வேண்டாம்” என்று கேட்டிருந்தார். இலங்கையிலும் எங்கள் வழக்கறிஞர்களும் ஜவர்கலால் நேரு, மகாத்மா காந்தி போலவே நடந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலை அமைப்புப் போராளிகளை போரினால் பாதிப்புற்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களை தமிழ்த் தேசிய ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலை இயக்கத்தில் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கைத் திட்டத்தையே கொண்டு செயல்படுகிறது. ஆரம்பத்தில் சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் போராளிகள் பங்கு கொண்டிருந்தனர்.

எனவே தென்னிலங்கையில் பௌத்த சிங்கள ஒற்றையாட்சி, பெரும்பான்மைத்துவ ஆட்சிச் சித்தாந்தத்துடன் எழுச்சி பெற்று வரும் அரசியல் இராணுவச் சூழ்நிலையில் தமிழ்ப் பேசும் மக்கள், அரசியல், சமூக அமைப்புக்கள் ஒன்றுபட்டு எழுச்சி பெற வேண்டியதே இன்று வேண்டியதாகும். ஜனநாயக அரசியலில் அதுவும் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து நிற்கும் மக்களிடம் கருத்து வேற்றுமைகளில் இணக்கத்தை உருவாக்கி பிளவுகளுக்கு இடமளிக்காமல் நம்பிக்கையை ஏற்படுத்துவதே சிறப்பானதாகும்.

விரைவில் தமிழ் அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் ஒன்று கூடி மேற்கொண்டு செயல்பட வேண்டிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கருதியுள்ளோம்.

மாவை.சோ.சேனாதிராசா,
தலைவர்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More