170
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு பின் புறமாக பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையிலையே உருவ பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படிருந்த வேளையிலையே இனம் தெரியாத நபர்களால் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து வீதியோர மின் கம்பத்துடன் உருவ பொம்மை கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய எம்.ஏ. சுமந்திரன் விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை ஒரு போதும் ஏற்க மாட்டேன் என கூறிய கருத்து தமிழ் மக்கள் பலரின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த கருத்துக்கு எதிராக அவர் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சிக்குள்ளும் , கூட்டமைப்புக்குள்ளும் , கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் தமிழ் தேசிய கட்சிகளும் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலையே இன்றைய தினம் சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து வீதியோரம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து அறிய முடிகிறது.
இதேவேளை சுமந்திரனின் ஆதரவாளர்கள் இச் செயல் அரசியல் நாகரிகமற்றது என விசனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #சுமந்திரன் #உருவபொம்மை #செருப்பு மாலை
Spread the love