கொரொனா பேரனர்த்தக் காலத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பேணியவாறு பத்ததிச் சடங்குகளை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஆலோசனைகளும், அபிப்பிராயங்களும் .
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் சடங்கு வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்திபெற்ற இடங்களாகத் திகழ்கின்றன. இப்பிரதேசங்களில் ஆண்டிற்கொருமுறை நடைபெறுகின்ற சடங்கு வழிபாடுகள் இப்பகுதி மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்ததாகக் காணப்படுகின்றன. இச்சடங்கு வழிபாட்டு விழாக்களின் பிரதான நோக்கங்களாக மிகப்பெரும்பாலும் மழை வேண்டலும், பிணி தீர்க்க பிரார்த்தித்தலும் காணப்படுகின்ற போதிலும், இவைகளின் உள்ளார்ந்த சூட்சுமமாக சமூக ஒருங்கிணைவு, சமூகப் பகிர்வு, சமூக மற்றும் தனிநபரிடையேயான ஊடாட்டம், சமூக மற்றும் தனிநபர் ஆற்றுப்படுத்தல், உள்ளூர் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் பேணல், உள்ளூர் மருத்துவ முறைகளின் தொடர்ச்சி போன்ற பல விடயங்களும் காணப்படுகின்றன.
மட்டக்களப்புக் கிராமங்களின் சமூக அசைவியக்கத்திற் பெருஞ் செல்வாக்குச் செலுத்தும் இச்சடங்கு வழிபாடுகள் அவ்வவ் ஊர் சார்ந்த வளங்கள், பிரமாணங்கள், நியதிகள் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டு அவ்வவ் ஊர்களின் நெறிமுறைப்படி இயக்கம்பெற்று வருகின்றன. இதன்காரணமாக இவற்றை பத்ததிச் சடங்குகள் என்று அழைக்கின்றோம். இத்தகைய சடங்குகள் அச்சடங்குகளின் தனித்தன்மையையும், ஒரு ஊரின் சமூக இயங்கு நிலையின் இருப்பினையும் அதனுடைய முதன்மைப் பங்கையும் வெளிக்காட்டி நிற்கின்றன.
பத்ததிச் சடங்குகள் சொர்க்கம் நரகம் பற்றிப் பேசுவதில்லை மாறாக இந்த உலகத்தில் மனிதர்கள் எவ்வாறு உடல், உளச் சுகாதாரத்துடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனும் நோக்கத்துடன் இயற்கையினைப் பிரதானப்படுத்தி நடத்தப்பட்டு வரும் நமது உள்ளூர் வழிபாட்டு முறைமையாகவே தொடரப்பட்டு வருகின்றது.
‘வாதமொடு பித்தம் சிலேற்பனம் கண்ணோய்
பகைதோசமானதொரு நோய் கிரக தீவினைகள்
பாடுபட்டோடும் உன் நாமங்கள் சொன்னால்
அகமகிழ்ந் அஞ்சல் என்றருள் கிருபை புரிவாய்
அனலெனுங் கனல் தணிந்தாள நினையம்மா!’
என்று இயற்கைச் சக்தியான மாரியைத் துதித்துப்பாடுவதே இச்சடங்கின் ஆதாரசுருதியாக இருக்கின்றது. எனவே வருடத்திற்கு ஒரு தடவை நமது உடல் சுகாதாரத்தையும், உளச் சுகாதாரத்தையும் சீரமைத்து வரும் சடங்குகள் அவ்வப்போது பேரனர்த்தத்தின் சவால்களுக்குள் அகப்பட்ட மனிதர்களுக்கு அத்தகைய அனர்த்தங்களிலிருந்து மீண்டெழுவதற்கான ஆத்ம பலத்தை அதன் செயற்பாடுகள் ஊடாக வழங்கி வந்துள்ளதை கடந்த கால வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கின்றோம்.
இப்பின்புலத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் மனித குலத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கும் இந்தக் கோவிட் 19 எனப்படும் கொரோனா பெருந்தொற்றானது மேற்படி சடங்கு வழிபாடுகளின் இருப்பை அதன் தொடர்ச்சியை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது.
தற்போது கிழக்கிலங்கையில் சடங்கு வழிபாடுகளின் காலமாகும். சாதாரணமாக இந்நாட்களில் கண்ணகை அம்மன் சடங்கிற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெறுவது வழக்கம். ஆயினும் தற்போதைய நிலையில் சடங்கு வழிபாடுகளை மேற்கொள்ளுதலில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அரசாங்கம் என்பன இக்காலப்பகுதியை சுகாதாரப்பேரிடர் காலப்பகுதியாக அறிவித்துள்ளதோடு இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துதலின் பொருட்டு பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளமை நாமறிந்ததே. பெருந்தொற்றினைத் தமது கட்டுப்பாட்டிற்குள் ஓரளவு கொண்டுவந்துள்ள நாடுகள் உரிய சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இயல்பு நிலைக்குச் செல்வதற்கான தளர்வு நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளன. தொற்று இல்லை எனக்கடந்த பல வார மதிப்பீடுகளினூடாக கண்டறியப்பட்டுள்ள பிரதேசங்களில் உரிய சுகாதார நெறிமுறைகளுடன் புதிய இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன.
குறிப்பாக மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்தல், ஒவ்வொருவருக்குமிடையில் மூன்று அடிக்கு மேற்பட்ட தூரத்தினைப் பேணுதல், மூக்குவாய்மூடி அணிதல் முதலியன அவற்றுள் பிரதானமானவைகளாகும்.
இத்தகைய புதிய நிலைமகளின் மத்தியில் தனிநபர் பாதுகாப்பிற்கான அறிவித்தல்களைக் கவனத்திற் கொண்டு உரிய தரப்பினரின் அனுமதியினைப் பெற்று எவ்வாறு சடங்குகளைச் செய்வது எனச் சடங்கு நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தும் நபர்கள் உரையாடி வருகின்றார்கள். மிகப்பெரும்பாலும் தனிநபர் பாதுகாப்பிற்கான வரையறைகளையும் விதிமுறைகளையும் பேணியவாறு சடங்குகளை நடத்துவதன் சாத்தியங்கள் குறித்துச் சிந்தித்து வருகின்றார்கள்.
இப்பின்னணியில் கிழக்கிலங்கைச் சடங்குகளின் முக்கியத்துவங்கள் தொடர்பாக தொடர்ந்து ஆராய்ந்தும் செயற்பட்டுக் கொண்டும் வருகின்ற மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினராகிய நாம் கொரொனா பேரனர்த்தக் காலத்தில் புதிய நிலைமைகளின் மத்தியில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பேணியவாறு கிழக்கிலங்கைப் பத்ததிச் சடங்குகளை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் சம்பந்தமான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் இக்கட்டுரையூடாக முன்வைக்க விரும்புகின்றோம்.
குறிப்பாக எமது சடங்கு வழிபாட்டு விழாக்கள் காலத்துக்குக் காலம் சமூகச் சூழ்நிலைகளையும் அனர்த்தங்களையும், கவனத்தில்கொண்டும் இடர்காலங்களுக்கேற்றவகையிலும் மாற்றங்களை ஏற்று நடைமுறைப்படுத்தப்பபட்டிருப்பதை வரலாற்று ரீதியாக அறியக்கிடைக்கிறது. உதாரணமாக இலங்கையில் நெடுங்காலமாக நிலவிய யுத்த சூழலின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட்ட அவசரகால நடைமுறைகளின்போது சடங்கு வழிபாட்டு விழாக்களைக் கைவிடாமல்காலத்தின் நிலைமைகளுக்குத் தகுந்தாற்போல் முன்னெடுப்பதில் நமது மூத்த தலைமுறையினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது அக்காலங்களில் ஊரடங்குச் சட்டங்களும் ஒன்றுகூடல் தடைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சூழலிலும்சடங்கு வழிபாட்டு விழாக்களின் மூலங்களை மாற்றாதும், சடங்கின் ஆதார சுருதி சிதைவடையாமலும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நடைமுறைத்தேவைக்கேற்ற சாத்தியமானமாற்றங்களை மேற்கொண்டு சடங்கு வழிபாட்டு விழாக்களைநடத்தியுள்ளனர். அந்தவகையில் கீழே முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்தில்கொண்டு மூலம் மாறாது காலத் தேவைக்கேற்ற சிறு மாற்றங்களுடன் சடங்கு வழிபாட்டு விழாக்களை முன்னெடுப்பது சவாலான விடயமாக அமையாது என்பதையும் நாம் உறுதியாக நம்புகிறோம்.
01. சடங்கு வழிபாட்டில் வரையறைகளைக் கடைப்பிடித்தல்:
சடங்குகளை சடங்குப் பூசகர் (தலைமைப் பூசகர்) மற்றும் உதவியாளர்கள் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மாத்திரம்; பங்குபற்றும் வகையில் மட்டுப்படுத்தி நடத்துதல். அதாவது அதிகமான தெய்வக்காரர், அதிகமான பூசகர்கள், அதிகமான தொண்டர்கள் பங்குபற்றும் கோவில்களில் பிரதம பூசகர், தலைமைத் தெய்வக்காரர் உள்ளடங்க ஏனையோரின் பங்குபற்றுதலை கோவில் சடங்கின் தன்மைகளுக்கேற்ற விதத்தில் மட்டுப்படுத்திக்கொண்டு நடத்துதல். உதாரணமாக வழமையாக பத்து தெய்வக்காரர் தலைசுற்றும் கோவிலாக இருந்தால் ஒரு சடங்கிற்கு இரண்டு அல்லது மூன்று தெய்வக்காரர் மாத்திரம் பங்குகொள்வதெனத் தீர்மானிக்கலாம். இதற்கான அட்டவணை ஒன்றை ஆலய நிருவாகம் பொதுச்சபையில் கலந்துரையாடித் தயாரித்துக் கொள்ளலாம். இதன்படி ஆறு நபர்களே (தெய்வக்காரர், பூசகர்) மண்டபத்திற்குள் இருப்பர் இவர்களுடன் குறித்த சடங்கின் உபயகாரர்கள் நான்கு பேரோ அல்லது ஐந்து பேரோ மண்டபத்தின் அளவுக்கேற்ப அனுமதிக்கப்படலாம் இதன் பிரகாரம் ஒரு சடங்கில் மொத்தமாக பத்து தொடக்கம் பதினைந்து வரையான நபர்களின் பங்குபற்றுதலை ஏற்படுத்த முடியும். அடுத்த சடங்கில் வேறு நபர்கள் பங்குபற்றுவதென கோவில் சமூகத்தின் வளங்களுக்கும் வசதிகளுக்கும் ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம். ஏனையோர் (பூசகர்கள்,தெய்வக்காரர்,தொண்டர்கள்) ஆளாள் இடைவெளியைப் பேணியவாறு கோவில் வளாகத்திற்குள் இருக்கலாம்.
02. சடங்கு நேரத்தில் மக்கள் கோவிலுக்குள் கூடுவதை மட்டுப்படுத்தி அதற்கு மாற்றீடாக கிரமமான முறையில் ஊர்வலங்களை மேற்கொள்ளல் மூலமாக சடங்கு வழிபாட்டில் மக்கள் பங்குபற்ற வசதியளித்தல்.
நமது சடங்கு விழாவில் ஊர்வலம் வருதல், கோவில் வலம் வருதல், இன்னொரு சடங்குக் கோவிலுக்குச் சென்று திரும்புதல் என்பன பிரதானமாக இருக்கின்றன. ஆனால் தற்போதைய பேரிடர்க் காலத்தில் பெருந்திரளான நபர்களின் பங்குபற்றுதலுடன் அத்தகைய ஊர்வலங்களை நடத்த முடியாது. ஆனால் இந்த ஊர்வலம் வருதலை (கோவிலிலிருந்து வெளிச்சென்று வருதலை) தற்போதைய காலத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து அதன் பயனைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
அதாவது மக்கள் கோவில்களில் கூடுவதைத்தவிர்த்து சடங்கினை ஆளாள் இடைவெளியுடன் நடத்த இது வாய்ப்பளிக்கலாம். தினமும் சடங்குகளின் போது கோவில் பூசைகள் நிறைவடைந்ததும் தெய்வங்களும் பூசகர்களும் பக்தர்களை நாடிச் செல்லும் வகையில் வழிபாட்டு முறையில் காலத்தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யலாம். உதாரணமாக ஒரு தெய்வத்துடன் ஒரு பூசகர், ஒரு தொண்டர் என மூன்று நபர்கள் கோவில் வெளிகளிலோ அல்லது கோவிலைச் சூழவுள்ள மக்கள் வாழ்விடங்களுக்கோ சென்று அங்கு ஆளாள் இடைவெளியுடன் மூக்குவாய்மூடி அணிந்துகொண்டு பிரசன்னமாகும் மிக மிகக் குறைந்த அளவிலான பக்தர்களுக்கு (பெரும்பாலும் ஒரே குடும்ப அங்கத்தவர்கள்) வாக்குச் சொல்லி அடையாளங்கள் கொடுத்தல், பாணக்கம் முதலிய சடங்குப் பொருட்களை வழங்கி வரும் வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளலாம்.
இதேபோல் கல்யாணக்கால் வெட்டும் சடங்கு, கள்ளி எடுக்கும் சடங்கு, மஞ்சள் நீராடச் செல்லும் சடங்கு, கும்பம் சொரியச் செல்லும் சடங்கு என்பவற்றில் பங்குபற்றுனர்களின் எண்ணிக்கையில் வரையறைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கான ஏற்பாடுகளையும் அட்டவணையினையும் கோவில் நிருவாகம் கலந்துரையாடி தயாரித்துக் கொள்ளலாம். எந்தச் சடங்கன்று எந்தத் தெருவிற்குச் செல்லுவது, எந்தத் தெய்வம் எந்தப் பூசகர் உடன் செல்லுவது, இது தொடர்பான அறிவித்தல்களை ஊரவர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்புச் செய்வது என இத்தகைய ஏற்பாடுகள் அமைந்திருக்கும். இவ்வாறு முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் ஆளாள் இடைவெளியுடன் புதிய சூழ்நிலைமையில் நமது வருடாந்தச் சடங்குகளை நடத்தக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு ஊர்வலம் சென்று ஆளாள் இடைவெளியுடன் மக்கள் சடங்கில் பங்குகொள்ளச் செய்தல் இன்றைய காலத்தில் மிகவும் அவசியமான தேவையாக உணரப்படுகின்றது. அதாவது வாரக்கணக்கில் வீடுகளுக்குள் முடங்கி வாழும் மனிதர்களிடையே மனதளவில் பல்வேறு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன, குடும்ப வன்முறைகள், சிறுவர் வன்முறைகள் அதிகரிக்கும் ஏது நிலைகள் வலுப்பெற்றுள்ளன இத்தகைய சூழலில் இந்தச் சவால்களிலிருந்து மனிதர்களை விடுவித்தலுக்கான சமூக உளநல ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையாக நமது சடங்குகள் காலங்காலமாக இயக்கம்பெற்று வரும் பின்னணியில் சடங்குகளை ஆளாள் இடைவெளிகளுடன் நடத்துவதுபற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
03. சடங்கில் காணப்படும் உள்ளூர் மருத்துவப் பொறிமுறைகளை பிரயோகத்திற்குக் கொண்டு வருதல்:
பொதுவாகவே பத்ததிச் சடங்குகளில் உள்ளூர் மருந்துகள், முகிலிகள் என்பனவற்றின் பயன்பாடுகள் பிரதானமாக இருந்து வருகின்றன தொற்று நீக்கிகளாக அங்கீகரிக்கப்பட்ட வேம்பு, மஞ்சள், சாம்பிராணி போன்றவற்றின் பாவனைகள், தொற்று நீக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தி வாடை எனப்படும் ஒரு வகை மருந்தைத் தயாரித்து வழிபாட்டில் பயன்படுத்துதல் இச்சடங்கு காலங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. தற்போது மக்களனைவரும் கொரோனா தெற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் பொருட்டு மேற்படி பொருட்களை வாங்குவதற்கு அக்கறைப்படுகின்றார்கள். கொரொனா அனர்த்தம் வேம்பினதும் மஞ்சளினதும் மகத்துவங்களையும் முக்கியத்துவத்தையும் நன்கு எடுத்துணர்த்தி நிற்கின்றது. எனவே தற்கால கொரொனா பெருந்தொற்றுச் சூழலில் உள்ளூர் தொற்று நீக்கிகளான வேம்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளின் பாவனையினை அவற்றின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை நாம் சடங்கினூடாக மேலும் வலுவாக்கம் செய்தல் பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு வளவுகளிலும் வேம்பு மரத்தை நடுவதற்கும் ஒவ்வொரு வீடுகளிலும் சிறு அளவிலேனும் மஞ்சளை நடுவதற்கும் ஊக்கப்படுத்தலை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
04. சடங்குக் கோவில்களின் சடங்குசார் உணவுப்பரிமாற்றத்தை இடர்காலத்தேவைக்கு முன்னுரிமை கொடுத்து முன்னெடுத்தல் : –
சாதாரணமாகச் சடங்கு விழா நாட்களில் கோவில்களில் அமுது வழங்கும் நடைமுறைகள் காணப்படுவது வழக்கம். அந்நாட்களில் கோவிலுக்கு வருகைதரும் பெரும்பாலானோர் வயிறாற உணவருந்தித் திருப்தி அடைவர். இதுவும் சடங்கு வழிபாட்டின் ஒரு அங்கமாகும். தற்போதைய பெருந்தொற்றுச் சூழலில் பெரும்பாலான மக்கள் தொழிலின்றியும் வருமானமின்றியும் உணவிற்காக துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் மேற்படி கோவில்களில் அமுதுப்பரிமாற்றத்தை பொதுச் சுhகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளுடன் சடங்கில் பங்குபற்றுனர்களுக்கும் இப்பெருந்தொற்று முடக்கலால் பாதிக்கப்பட்டோருக்கும் சென்றடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் பற்றி குறிப்பாகக் கவனஞ்செலுத்தலாம்.
வௌ;வேறு இடங்களிலிருந்து வரும் மனிதர்கள் ஆளாள் இடைவெளியுடன் வங்கிகளிலும், வணிக நிலையங்களிலும், அங்காடிகளிலும், தொழிற்காலைகளிலும், நிறுவனங்களிலும் இயங்குவது குறித்து சிந்தித்து அதனை நடைமுறைப்படுத்த எத்தனிக்கப்படும் புதிய சூழலில், நன்கு அறிமுகமான, ஒருவருக்கு ஒருவர் நன்றாகத் தெரிந்த மனிதர்கள் பங்குபற்றுவதாகவும், மிகப்பெரும்பாலும் அளவில் சிறிய பிரதேச வரையறைகளைக் கொண்டதாகவும் நடைபெறக்கூடிய வருடாந்த பத்ததிச் சடங்கு விழாக்களை பேரிடர்க் காலத்தின் தேவைகளுக்கேற்ற விதத்தில் முன்னெடுக்க முனைதல் சடங்குகளின் பயன்களை விளங்கி வாழும் ஒவ்வொரு மனிதரினதும் கடமையாக உள்ளது.
மேற்படி விடயங்களைக் கருத்தில் கொள்ளும் போது தற்போதைய பேரிடர் சூழலில் சுகாதார ஒழுங்குவிதிகளைக் கண்காணிக்கும் முதல் வரிசை உத்தியோகத்தர்களான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், காவல்துறை உத்தியோகத்தர்கள் போன்றோரும் சடங்கு வழிபாட்டு விழாக்களின் முக்கியத்துவத்தையும் அதன் சமூகப் பயன்களையும் கருத்தில்கொண்டு சடங்கு வழிபாட்டு விழாக்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது இன்றியமையாததாக உணரப்படுகின்றது. அவ்வாறு ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் புதிய அசாதாரண சூழ்நிலையில் மேற்படி சடங்கு வழிபாட்டு விழாக்களை நடைமுறைப்படுத்துதல் சாத்தியமாக அமைந்திருக்கும்.
எனவே! பேரிடர்க்காலத்தின் புதிய அசாதாரண சூழ்நிலையில் சடங்குகளின் தேவைகளை சாத்தியமாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்துச் சிந்திப்போம். செயற்படுவோம். சவால்களிலிருந்து மீண்டெழுவதற்கான வாய்ப்புக்களையும் வசதிகளையும் கண்டறிவோம் கற்றறிவோம்.
கலாநிதி சி.ஜெயசங்கர், ஜோ.கருணேந்திரா (பூசகர்), து.கௌரீஸ்வரன், கி.கலைமகள்
மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு,
மட்டக்களப்பு, வைகாசி 2020.