இவ் உலக வாழ்வில் இயற்கையுடன் இணைந்ததாகவும் இயற்கையைப் பாதுகாப்பதாகவும் பழங்குடிமக்களின் வாழ்தல் இருந்த வருகின்றது. காடுகளையும் மனித வாழ்தலையும் கனிம வளம் பாதுகாப்பிற்காகவும் போராடியவர்களாக உலக வரலாற்றில் பழங்குடி மக்கள், பெண்கள் வாழ்தல்களையும் இருப்பினையும் பதிவு செய்யலாம்.
ஆனால் அவர்களது சுயமானவாழ்தல் என்பது காலனிய உலகமயமாக்கல், பொருளாதார இலாபமீட்டும் அதிகாரங்களுக்கு மிகவும் சவாலானது. உலகப் பொது ஓட்டத்தில் அவர்களையும் வலுக்கட்டாயமாக வரச்செய்தல் என்பது சவாலானதாக அதிகாரவர்க்கங்களால் உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. இயற்கை வளச் சுரண்டலுக்காய் பழங்குடி மக்களை நாகரீகப்படுத்தல், நவீனப்படுத்தல், அபிவிருத்தி செய்தல் என்னும் போர்வையில் அவ் மக்களை இயற்கையை வன்முறைக்குட்படுத்தியும் அவற்கெதிரான மக்கள் போராட்டங்களையும் உலக வரலாற்றில் புரிந்து கொள்ளலாம்.
உள்ளுர்த் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட பொருளாதாரத்திற்குப் பதிலாய் பணம், இலாபம், மூலதனம் என்னும் நோக்கில் உருவாக்கப்பட்ட உபரிப் பொருளாதாரம் ஏற்றுமதியினையும் சந்தையையும் தேடின. இச் சந்தைகளுக்கான உற்பத்தி பணக் குவிப்பு என்பதே அடிப்படையானது. இத்தகைய பொருளாதாரக் கொள்கைகள் வளங்களைத் தேடியலைந்தன. கனிம இயற்கை வளங்கள் அபகரிப்புக்கள் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டன. அதன் முக்கிய பொறிமுறை சர்வதேச கடன். இக் கடனுக்காய் இயற்கை வளங்கள் குத்தகைக்கு விடப்பட்டன, விற்கப்பட்டன.
இதற்கு மறுபுறம் வனப்பாதுகாப்பு, மிருகவதைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அச் சட்டங்கள் காடுகளில் வாழ்ந்த மக்களின் காட்டின் உரிமையை வாழ்வாதாரத்தினை இல்லாமல் செய்தது. அவ் மக்களிடம் காடுகளை பயன்படுத்தவும் பாதுகாக்கவும் வேட்டையாடவும் அவ் வேட்டை மிருக வதை அல்லாமல் இருப்பதற்கான அறிவு என்பது இயல்பானதாக அமையப்பெற்றுள்ளது. இவ் அறிவு அவ் மக்களின் வாழ்வியலில் பெற்ற அறிவு முறையாக இருந்து வந்துள்ளது. காடுகளை ஆறுகளை வயல்களை உயிர்களை பயன்படுத்தவும் அதனைப் புதுப்பிப்பிதற்கான அடிப்படை அறிவு என்பது இயற்கை கொண்டுள்ளது. அதனை பாகாப்பவர்களாக உணர்ந்தவர்களாக பழங்குடி மக்கள் இருந்துவந்துள்ளனர். இவையே அவர்களது வழக்காறுகளாக பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக உணவு சேகரிப்பு, தாவரப் பற்றிய புரிதல், அதனைப் பயன்படுத்துதல், மீள் சுழற்சி சார் அறிவுகொண்டவர்களாக பெண்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆண்கள் மீன்கள், மிருகங்கள்; வேட்டையாடுதல் தொடர்பான அறிவு கொண்டவர்களாய் உள்ளனர்.
இத்தகைய பழங்குடிமக்களின் வாழ்விற்கான அறிவு கவனிக்கப்படாமல் பெரும் முதலாளிய இலாபமீட்டலுக்காய் காடுகளிலிருந்தும் வாழ்விடங்களிலிருந்தும் விரட்டப்படுகின்றனர். மறுபுறம் நாகரீகப்படுத்தல் வாழ்வாதாரம் அமைத்தல் என தமிழர் சிங்களவர் என தங்களை அடையாளப்படுத்த திணிக்கப்படுகின்றனர். மறுபுறம் கிறிஸ்தவமயமாக்கல், இந்துமயமாக்கல் போன்ற மத ஆதிக்கத்திற்குட்படுத்தப்படுகின்றனர்.
உலகப்பரப்பில் பழங்குடிமக்களின் போராட்டங்கள் தங்கள் நிலங்களுக்கானதாய் காடுகளுக்கானதாய் மட்டுமல்ல உலக மக்களின் பாதுகாப்பிற்கான போராட்டமாகவே புரிந்து கொள்ள முடியும்.
‘1975 இல் அத்வானிக் காடுகள் ஏலத்தில் விடப்பட்டன. பெண்கள் மரங்களை வெட்டுவதற்கு எதிராய் உண்ணாவிரதம் இருந்து போராடினார்கள்.’
‘மேற்கு மலைத் தொடர்ச்சிப் போராட்டங்கள்’
(உயிரோடு உலாவ, வந்தனா சிவா, 1994, பூவுலகின் நண்பர்கள்)
இத்தகைய போராட்டங்களில் தங்கள் வாழ்வாதாரங்களுக்காய் பெண்களே முதன்மை தாங்கி போராடிய போராட்டங்களாகும்.
இலங்கையில் பழங்குடி மக்களில் வேடர்கள் தங்களை தமிழராய் அடையாளப்படுத்தியும் மகியங்கனை போன்ற பகுதியில் தங்களை சிங்களவராய் அடையாளப்படுத்தியும் உள்ளனர். இதைத்தவிர காஞ்சிரங்குடா குறவர் . வெலிக்கந்த குறவர் சமூகம் கிற்ஸ்த்தவமதத்தினை பின்பற்றுபபவர்களாய் உள்ளனர். காஞ்சிரங்குடாவில் வசிப்பவர்கள் ‘ எங்களது சாமியினை விட்டுக் கொடுக்க முடியாது எங்கட சாமிகள் வள்ளி கந்தசாமி’ அதத்தான் கும்பிடுவம் என்கின்றனர். இவ் மக்களின் பிரதான தொழில் வேட்டையாடுதல் , மீன்பிடி, கிழங்கு சேகரித்தல் காடுகளை அண்மித்து காடுகளை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த மக்கள். இவர்களது வாழ்வாதாரம் வேட்டையாடுதலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்றைய சூழலில் காஞ்சிரங்குடாவில் வயலை அண்மித்த நீர் வசதி அற்ற அடிப்படை வசதிகளற்ற பகுதியில் வாழ்கின்றர்.
இவர்களது மொழி தெலுங்கு பண்பாடு சடங்கு அனைத்தும் அவர்களது மொழியிலே நிகழத்தப்படுகின்றன. வேடர் போன்ற தொல்குடி பழங்குடி மக்கள் தங்களுடைய தாய் மொழியிலே சடங்கு, பண்பாடு, மருத்துவம் தொடர்பான அறிவினைக் கொண்டவர்களாக உள்ளன. இவர்களது கல்வி மொழி என்பது தமிழ் சிங்களம் போன்ற மொழியினை ஊடகமாகக் கொண்டது. சொந்த மொழி நலிவடையும் போது பண்பாடும் அவை உட்கொண்ட வழக்காறுகளும் தொல் அறிவுப் பொறி முறைகளும் அச் சமூகம் இழக்கின்றது. அது உலக வளத்தின் மீதான இயற்கை மீதான பெருஞ்சவலாக உள்ளது.
பசுமைப் புரட்சியின் பின் உள்ளுர் நெல்வகைகளை இயற்கைப் பசளை வேளாண்மை முறைகளை இழந்தது போல் பெருந்தோட்ட ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைக்காய் பெரும் முதலாளிய இலாபநோக்கிற்காய் பெருங் காடுகள் அழிக்கப்பட்டதும் நாம் அறிந்தது. வரட்சி, பெரும் வெள்ளம், பட்டினி, தங்கிவாழ்வோர் அதிகரிப்பு, நோய் தொற்றுக்கள் போன்ற மனிதனால் ஏற்படுததப்பட்ட இயற்கை அனர்த்தங்கள் தொடர்ந்து செல்லும் போக்கினையே காண முடிகின்றது.
மனிதன் இயற்கை மீது பிரயோகிக்கும் அதிகாரத்தின் மீதான ஒரு பகுதியாகவே இதனை உணரமுடிகின்றது. இயற்கையின் ஒரு பகுதியான மனிதர்கள் தங்கள் ஆண் நிலை அதிகாரத்தின் ஒரு பகுதியாகக் காடுகளை மலைகளை ஆறுகளை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடிமக்கள் மீதான வன்முறை இயற்கையின் இருத்தலையும் மக்களின் இருத்தலையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
மறுபுறம் பழங்குடி மக்கள் அவர்கள் பண்பாடுகள் அருங்காட்சியத்திற்கும் ஆய்வுக்குமானதாக மாற்றப்படுகின்றது. இத்தகைய சமூகச் சூழலில் மனித இருத்தலைப் பாதுக்காக்கும் அறிவுப் பொறிமுறைகளைக் கொண்ட பழங்குடி மக்களுக்கான வாழ்தல் உரிமம் என்பது அடிப்படையாக பேசப்படுமொன்றாகவும் அதனை உணர்வோராகவும் நாம் சிந்தத்தலும் செயற்படுதலும் அவசியமானதாகும்.
கலாவதி கலைமகள்