Home இந்தியா கொரோனா போன்ற கொள்ளை நோய்களை அதிகரிக்க துணை போகும் ஆத்மநிர்பார் அபியான் – பூவுலகின் நண்பர்கள்..

கொரோனா போன்ற கொள்ளை நோய்களை அதிகரிக்க துணை போகும் ஆத்மநிர்பார் அபியான் – பூவுலகின் நண்பர்கள்..

by admin

இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக மே 12ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தினமும் குறிப்பிட்ட துறைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நிதி அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளன. கொரோனாவினால் ஏற்பட்டுள்ள முடக்கத்தை சரிசெய்வதற்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை புறந்தள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும் என்கிற சூழல் செயல்பாட்டாளர்களின் அச்சத்தையும் கவலையையும் நேற்றைய அறிவிப்புகள் உண்மையாக்கியிருக்கின்றன.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றும் (zoonotic diseases) கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது வனவிலங்குகளின் வாழ்விட அழிப்பு (habitat loss ) என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த மாதம் scientific american ஆய்விதழில் வெளிவந்துள்ள முக்கியமான ஆய்வறிக்கை, காடழிப்பை நிறுத்துவதன் மூலம் கொள்ளை நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டுகிறது. மேலும், உலகம் முழுவதும் இப்போது நடைபெறுவதை விட 10% கூடுதலாக காடுகள் அழிக்கப்பட்டால் 77 லட்சம் பேருக்கு கூடுதலாக மலேரியா நோய் வர வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

மனிதர்கள் காடுகளை ஆக்கிரமிப்பது அதிகரிக்க வனவிலகுகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு அதிகரிக்கிறது அதனால் zoonotic spillover நடைபெற்று நோய் தொற்றும் அதிகரிப்பதாக தெரிவிக்கிறார் நோய்பரவுதலியல் நிபுணரும் (epidemiologist), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் “one health institute”ஐ சேர்ந்த பிரணவ் பண்டித். மேலும், இதைப்போன்ற கொள்ள நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணங்களாக காடழிப்பு, நகரமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவைதான் என்கிறார். கடந்த ஐந்தாண்டுகளில் பரவிய எபோலா, ஜிகா இப்போது saars Cov 2 என அனைத்து தொற்றுகளும் சூழல் சீர்கேடால் நடைபெற்றவைதான் என்கிறார் பிரணவ்.

மேலும், 2015 ஆம் ஆண்டு unfccக்கு இந்தியா கொடுத்துள்ள உறுதிமொழி, இந்தியா வெளியேற்றும் சுமார் 300 கோடி டன் (3 பில்லியன் டன்) கார்பனை உள்வாங்கிக் கொள்வதற்காக இப்போது இருப்பதை விட இன்னும் மிக அதிகமாக காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் என்றுதான்.

மேற்சொன்ன பின்னணயில்தான் நிதி அமைச்சரின் நேற்றைய அறிவிப்பை நாம் பார்க்கவேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி உள்ளீட்ட பல்வேறு நாடுகள் அனல் மற்றும் அணு மின் உற்பத்தியை கைவிட முடிவுசெய்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்களை மூடுவதற்கு பதிலாக மேலும் 50 புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான அனுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

நிலக்கரி மற்றும் கனிம சுரங்கங்களில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும் என்றும் அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பாக்சைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக கூட்டு ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பும் காடுகளை அழிப்பதற்கு வழிவகை செய்யும். மத்திய இந்தியாவில் வனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில்தான் இந்த கனிமங்களும், நிலக்கரி படிமமும் கொட்டிக்கிடக்கிறது. மொத்தமாக 550 சுரங்கங்கள் அமைக்கவும் அதற்கான கட்டுமானங்களை உருவாக்கவும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் தேவைப்படும், அவை அனைத்தும் வனங்களை அழித்துதான் உருவாக்கப்படும். இத்தனை லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காடுகள் அழிக்கப்பட்டால் வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளது. மேலும் கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை கட்டமைப்புகளான மின் உற்பத்தியை தனியாருக்கு தாரைவார்த்துக்கொடுத்தது மாநில மின்வாரியங்களை எப்படி கடனாளியாக மாற்றியுள்ளன என்பது உறுதிப்பட்டிருக்கும் நேரத்தில் மின் பகிர்மானத்தையும் தனியாருக்கு கொடுப்பது மக்களுக்கு விரோதமான செயல். கொள்ளைநோய் காலகட்டத்தில் அரசு துறைகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தாலே போதும் – பொதுத்துறை கட்டமைப்புகளின் தேவையை புரிந்து கொள்ள முடியும்.

இதெல்லாம் தாண்டி நிலக்கரி படிம மீத்தேன் எடுப்பதற்கான அனுமதி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். நிலக்கரி படிம மீத்தேன் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் “நீரியல் விரிசல்” (hydraulic fracturing) சூழலையும், நிலம் மற்றும் நீர் வளத்தையும் முழுவதும் பாழ்படுத்திவிடும் என்றும், உந்தப்பட்ட நிலநடுக்கங்கள் Induced earth quakes) வருவதற்கு காரணியாக இருப்பதாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டன.

அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை அனுமதிப்பது என்று அமைச்சர் அறிவித்திருப்பது எதை பற்றியும் கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் ஐசோடோப்புகளை உற்பத்தி செய்ய இந்தியாவில் போதுமான அளவு உலைகள் செயல்படுகின்றன, அப்படி இருந்தும் அணு சக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது அணு மின் திட்டங்களை துவக்கத்தான் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

இந்த நேரத்தில் சூழலை காக்கவும், காடுகளை காக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் “ராணுவ தளவாட உற்பத்தி”, விண்வெளி போன்ற துறைகளில் தனியாரை அனுமதிப்பது கொரோனா போன்ற தொற்றுகளை கையாள எப்படி உதவும்?

பிரதமரின் “ஆத்மநிர்பார் அபியான்” அறிவிப்பு கொரோனாவை கையாள என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்தகைய செயல்பாடுகள் கொரோனா போன்ற தொற்றுநோய்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும்.

உலகெங்கும் மக்கள் கொத்து கொத்தாக கொரொனாவுக்கு மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து நின்று கொண்டிருக்கிறார்கள். தேசப்பிரிவினையை விட பெரிய புலம் பெயர்வு நம் கண் முன்னால் நிகழ்ந்து கொன்ண்டிருக்கிறது. சொகுசு வீடுகளில் வாழ முடியாத இந்தியா வீதிக்கு வந்து நிற்கிறது. இந்த தருணத்தில்தான் இப்படிப்பட்ட அச்சமூட்டும் அவநம்பிக்கையூட்டும் திட்டங்களை அறிவிக்கிறார் நிதியமைச்சர்.

நிதி அமைச்சர் அறிவித்துள்ள மேற்சொன்ன திட்டங்களை கைவிடவேண்டும் என்றும், இது குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், விவசாய சங்கங்கள், வணிக அமைப்புகள் குரல் கொடுக்கவேண்டுமென்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோருகிறது.. வனத்தை காப்பது நம் வாழ்வை, வாழ்வாதாரத்தை, எதிர்காலத்தை காப்பதற்கு சமம்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More