தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் கட்டளையிட்டுள்ளார்.
யாழில்.கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ , தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.
குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதவான் , 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
நீதவானின் கட்டளையை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிசார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் கைகளில் கையளித்துள்ளனர்.