தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 40,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் இழக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் கல்வியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் குழுவால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் அமலில் உள்ள கடுமையான முடக்க நிலைக் கட்டுப்பாடுகள், சமீபத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி சிறில் ராமபோசா அறிவித்தபடி, எதிர் வரும் ஜூன் மாதம் முதல் தளர்த்தப்படும் என்றும் கருதப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் புகையிலை மற்றும் ஆல்கஹால் விற்பனை மீதான தடையை உள்ளடக்கிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது முதல் அங்கு வைரஸின் பரவல் குறைந்து காணப்படுகிறது.
5.7 கோடி மக்கள் வாழும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை 18,000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.