உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதல் நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆணைக்குழுவில் சாட்சியமளித்த குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் சஹரான் ஹாசீமின் சாரதி என தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட போது கிங்ஸ்பெரி ஹோட்டலின் பாதுகாப்பு பணிப்பாளராக செயல்பட்ட ஓய்வு பெற்ற பிரதி காவல்துறைமா அதிபர் ஐவன் தம்மிக துடுவத்த நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய போது ஏப்ரல் 17ம் திகதி ஹோட்டலுக்கு வந்த ஒருவர், அப்துல்லா என்ற பெயரில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 20 ஆம் திகதி அங்கு வந்து தங்குவதாக கூறி சென்றதாக சாட்சியம் அளித்துள்ளார்.
அதேவேளை நேற்று சாட்சியளித்த குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், குண்டு தாக்குதலை நடத்தியவர் மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு முன்தினம் இரவு, தாக்குதல்தாரி சிவப்பு காரில் ஹோட்டலுக்கு வந்ததாக தெரிவித்து அது குறித்த சி.சி.டி.வி காட்சிகளையும் ஆணைக்குழுவில் முன்வைத்தார்.
பின்னர் குண்டுதாரி ஹோட்டலின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு அறைக்குச் சென்றதாகவும் அதே நாள் இரவு 8.59 அளவில் ஹோட்டலில் இருந்து புறப்பட்டதாகவும் ஹோட்டலுக்கு அவர் கொண்டு வந்த பைக்கு பதிலாக வேறு பையை வெளியில் எடுத்துச் சென்றதை அவதானித்தாகவும் தெரிவித்துள்ளார்.
குண்டுதாரி முன்பு கிராண்பாஸ், பாணந்துறை, மட்டக்குளிய மற்றும் தெமடகொடையில் வாடகைக்கு தங்கியிருந்தாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் 2010 ஆம் ஆண்டு முதல் 14 கையடக்க தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தியதாகவும் அவற்றில் 11 சிம் அட்டைகள் அவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார். #கிங்ஸ்பெரி #வங்கிக்கணக்குகள் #உயிர்த்தஞாயிறு