இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு எப்போதும் தொடரும் என்று அந்த நாட்டுத் தூதுவர் மொகமட் சாத் அலிக், யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு இன்று செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். பாடசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய தோடு மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்களையும் கையளித்திருந்தார்.
“எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளேன்.இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநரை கூட நான் சந்திக்க முயற்சித்தேன். எனினும் அவர் கொழும்பில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை.
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியானது இலங்கையின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றது என்பதனை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். கல்லூரி விளையாட்டுத்துறைளிலும் கல்வித் துறையிலும் பல சாதனைகளைப் படைத்து பெருமை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக இன்று பாடசாலைக்கு வருகை தந்த போது, பாடசாலை நிர்வாகத்தினருடன் நான் கலந்துரையாடியிருந்தேன். அவர்களுக்கு எனது சந்தோஷமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறானஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்ததற்காக பாடசாலைக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப்பைகளை இன்று நான் கையளித்திருக்கின்றேன்.நாங்கள் இலங்கையை நேசிக்கின்றோம். இலங்கை மக்களை நேசிக்கின்றோம். எனக்கு தனிப்பட்ட ரீதியில் இலங்கை மக்களிடையே ஒரு விருப்பம் இருக்கின்றது.
இலங்கை பாகிஸ்தான் உறவினை மேம்படுத்துவதற்காக நாம் இலங்கை மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கின்றோம். அதன் முதல் கட்டமாகவே இன்றைய தினம் நான் யாழ்ப்பாணத்திற்கான வருகை தந்தேன். எமது உறவு தொடரும். இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்பு எப்போதும் தொடரும்” என்று அந்த நாட்டுத் தூதுவர் மொகமட் சாத் அலிக் தெரிவித்தார்.
இன்றைய சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தெரிவித்ததாவது;
பாகிஸ்தான் தூதுவர் முகமது சாத் அலிக், தனிப்பட்ட பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிலையில் இன்றைய தினம் எமது பாடசாலைக்கு வருகை தந்திருந்தார். எமது கல்லூரி நிர்வாகத்தினரைச் சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதன்படி அவர் எங்களை சந்தித்து எமது பாடசாலையில் உள்ள கஷ்டப்பட்ட மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பைகளை வழங்கியிருந்தார்.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து கொண்டு வந்த கிரிக்கெட் மட்டைகள் மற்றும் மேலும் பல விளையாட்டு உபகரணங்களையும் எமக்கு அன்பளிப்பு செய்துள்ளார். அவர் பாகிஸ்தான் நாட்டின் பற்றிக்ஸ் கல்லூரி மிகவும் பிரசித்தி பெற்ற என்பதற்கிணங்க யாழ்ப்பாணத்தில் அதே பெயரில் இருக்கக்கூடிய எமது கல்லூரிக்கு வருகை தரவேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலே இங்கே வந்ததாகவும் தனது கருத்தினை தெரிவித்ததாகவும் எம்மிடம் எடுத்துரைத்தார் – என்றார். #வடமாகாண #ஆளுநர் #பாகிஸ்தான்தூதுவர் #கவலை