மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் இரண்டாம் நிலை வாரிசுகள் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு உள்பட சுமார் 913 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றில் நேரில் முன்னிலையாகி ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் எனவும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் எனவும் தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று தெரிவித்த நீதிபதிகள் அவர்களை சொத்துக்களின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றலாம் எனவும் இநடத வழக்கின் போது உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #ஜெயலலிதா #சொத்துக்கள் #உயர்நீதிமன்றம் #போயஸ்கார்டன்