அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றினால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவில் 1,00,572 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 17, 25,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களும் வழக்கமாகச் செயல்படுவதற்கான முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈடுபட்டு வருகிற போதிலும் அரசின் இந்தச் செயல் அதிக அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன் 4,79,969 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை கொரோவினால் உயிரிழந்தவர்களின் வயது வாரியான தரவை அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்த்தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் மே 20 வரையிலான காலக்கட்டத்தில் உயிரிழந்த 70,000 பேரில் பெரும்பாலானோர் 85 வயதுக்கும் அதிகமானவர்கள் என்று தெரியவந்துள்ளது. #அமெரிக்கா #கொரோனா #உயிரிழப்பு