யாழ்ப்பாணம் மறவன்புலவு கிராமத்தில் ‘சுக நல மேம்பாட்டுக் குழு’ அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்கள், எதிர்காலத்தில் ஏற்படும் போது, கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்தக் குழு அமைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு, மறவன்புலபு ஜே-298 கிராம சேவையாளர் நல்லதம்பி தனபாலசிங்கம் தலைமையில், மறவன்புலவு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
டெங்கு, கொரோனா போன்ற தொற்று நோய்கள், எதிர்காலத்தில் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கும், அதேபோன்று போதைப்பொருள் பாவனை, சிறுவர் மீதான வன்முறை, குடும்ப வன்முறை போன்ற அனைத்து வகையான சமூகப் பாதிப்புக்களையும் இல்லாதொழிக்கும் நோக்கில், பொது அமைப்புகளை உள்ளடக்கிய, சுக நல மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச செயலர், பொலிஸ், இராணுவம், மற்றும் சுகாதார பரிசோதகர், கிராம சேவையாளர், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோருடன், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சுக நல மேம்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
15 பேரைக் கொண்ட குழுவின் தலைவராக கிராம சேவையாளரும், செயலாளராக பொதுச் சுகாதார பரிசோதகரும் செயற்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில், தென்மராட்சி பொதுச் சுகாதார மேற்பார்வையாளர் பி.பிரபாகரன், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, குடும்ப நல உத்தியோகத்தர் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். #யாழ்ப்பாணம் #மறவன்புலவு #சுகநலமேம்பாட்டுக்குழு #கொரோனா