Home கட்டுரைகள் பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…

பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…

by admin

எவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி நடுவே சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு.

“வணக்கம் அக்கா!” கரகரத்த ‘ஆண்’குரல்.

பாவாடையை ஒதுக்கி நிலத்தில் அமர்ந்தபடி பார்வதியின் பேச்சுத் தொடங்கியது. ‘என்னை பார்க்க ஆம்பிள போல இருக்கா? என்னை பார்க்க உங்களுக்கு வித்தியாசமா இல்லையா?’ என்று ஓரிரு முறை கேட்டு, எங்களது பதிலில் திருப்திப்பட்டவராய், தயக்கமின்றி கதைக்கத் தொடங்கினார்.

‘நான் பிறந்த நேரம் என்னவோ ஓப்ரேசன் செய்யணும் என்டு டொக்டர் சொன்னவராம். அம்மா பயந்து செய்ய வேணாம் எண்டதாம். பிறகு ஆறு அல்லது ஏழு வயசுல கொழும்புக்கு போய் செய்யச் சொன்னதாம். அது சிரமம் என்டு போகயில்லயாம். அதுக்குப் பிறகு நான் இப்படியேதான் இருக்கன். என்னை ஒரு பெண் பிள்ளையாத்தான் வளர்த்தவங்க. எனக்கு 25 வயசாகுது. ஆனா ஒருநாளும் மாதவிடாய் வந்ததில்ல. இப்ப ஒரு இரண்டு, மூணு வருசமா நான் கூடுதலா ஆண் போல உணர்றன். குரல் மாறிக் கொண்டு வருது. முகத்தில் நிறைய முடி. தாடி, மீசை வளர்றாப்போல. ஆணுறுப்பு மாதிரி இருக்கு. ஆனா வளரயில்ல. எனக்குள்ள சரியான குழப்பம். என்ர தோற்றத்துல இருக்குற வித்தியாசத்துலயே நான் ஊரைவிட்டு எங்கயும் போறதில்ல. பஸ்ல ஏறப் பயம். அழகான பொம்பிள பிள்ளயளப் பார்த்தா பிடிக்குது. ஆனா நான் எப்படி சொல்ல முடியும். இதுல நமக்கு எங்க அக்கா காதல், குடும்பம்- இப்பிடியே இருக்க வேண்டியதுதான்.”

பார்வதி சொல்லிக் கொண்டு போகும்போதே பார்வதி யார் என்பது எங்களுக்கு விளங்கியபோதும் தான் யார் என்பது பற்றி அவருக்கே தெரியவில்லை என அவர் தெரிவித்தது எம்மைத் துயருறுத்தியது.

தன் உடலில் ஏதோவொரு பிரச்சினையிருப்பதான பார்வதியின் கரிசனையை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்போமேயானால், ஆதிக்க சமூகங்களால் வரையறுக்கப்பட்ட உடல் என்பதன் வரைவிலக்கணத்திற்கு அப்பால் உருப்பெறும் உடல்களில் அல்ல பிரச்சினை, மாறாக அவ்வுடல்களை நிராகரிக்கும் ஆதிக்க சமூகங்களே பிரச்சினைக்குரியவை என்பதை அறியலாம்.

பால், பால்நிலை, பாலியல்பு எனும் வகைப்படுத்தலின் பல்வகைமையில் காத்திரமான நம்பிக்கை கொண்டவர்களாக எமது சமூக மாற்றங்களுக்கான பயணங்கள் அமைந்து வருகின்றன. அந்த வகையில் பலவருடப் பயணத்தின் பல்வகைமையில் கிடைத்த அறிமுகங்களில் ஒன்றே பார்வதி. அவரை 2019ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வடபகுதியில் இருக்கும் இறுதிப்போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவரது ஊரில் சந்தித்துக் கொண்டோம். அவருடனான உறவு தொடர்ந்திருக்கும் என நம்புகிறோம். எமது தொடர் பயணங்களில் பார்வதி எங்களின் சிந்தைகளில் ஏற்படுத்திய விரிவாக்கத்தின் தாக்கம் எப்போதும் இருக்கும். அதன் ஒரு வெளிப்பாடே இந்த ஆக்கம்.

பால் (செக்ஸ் -sex )
பொதுவாக பால் (sex), பால்நிலை (gender), பால்நிலை அடையாளம் (sexual identities), பாலியலீர்ப்பு உள்ளடங்கலாக பாலியல்பு (sexuality including sexual orientation) என்பவை பற்றிய தெளிவின்மை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இந்தக் கட்டுரை ஒரு நபரின் பால் (sex) குறித்துப் பேசுகிறது.

பால் என்பது பொதுவாக சமூகத்தில் பெண் (வூமன்-woman) அல்லது ஆண் (மேன்-man) என்ற இருமைக்குள் (பைனரி-binary) கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்றில் பெண்ணாக அல்லது ஆணாக மட்டுமே இருக்க முடியும் என்பதுவே இந்த இருமை. ஆயினும் இந்த இருமைக்கு அப்பால் பால் பல்வகைமை(இன்டர்செக்ஸ்-intersex) என்பதும் காணப்படுகின்றது.

இன்டர் செக்ஸ் என்பதற்கு இடையிலிங்கம் எனும் சொற்பதம் இந்தியாவிலுள்ள பால் பல்வகைமை உரிமைகளுக்கான ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டு, பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் தமிழில் இன்னும் இவர்களது உரிமைகளுக்கென பிரத்தியேகமாக குரல்கள் எழுப்பப்படவில்லை. ஆனாலும், பெண்ணுக்கும், ஆணுக்குமான இருமைக்கு நடுவில் இடையிலிங்கம் என்னும் சொற்பதத்தின் பொருத்தப்பாடு பற்றி இலங்கை தமிழ்பேசும் குயர் சமூகத்தின் மத்தியில் எழும் கேள்விகள் காரணமாகவும், எத்தனையோ வேறுபாடுகளைக் கொண்ட பல்வகைமை இன்டர்செக்ஸ் மத்தியில் காணப்படுவதாலும், இக்கட்டுரையில் குறித்த இன்டர்செக்ஸ் நபர்களின் உரிமைகள் சார்ந்த பிரக்ஞையோடு, பால் பல்வகைமையினர் என்னும் பதம் இன்டர்செக்ஸ் என்பதனைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பால் பல்வகைமை நபர்களை சமூகம் இன்னும் சரியாக அறிந்து கொள்ளவுமில்லை. அங்கீகரிக்கவுமில்லை. பார்வதியின் நிலையும் இதுதான்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு இருக்கும் பிறப்புறுப்பை வைத்து அது பெண் குழந்தையா அல்லது ஆண் குழந்தையா என்பதாக மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள். அதுவே அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழிலும் பெண் அல்லது ஆண் என பதிவும் வைக்கப்படுகின்றது.

இவ்வாறு பெண் அல்லது ஆண் என வரைவிலக்கணத்துக்குள் வராத பாலியல் மற்றும் மகப்பேற்று விருத்திக்கான உடல்கூறினைக் கொண்டிராதவர்களை பால் பல்வகைமையினர் என வகைப்படுத்தலாம். (https://www.who.int/genomics/gender/en/index1.html )இதற்கு கருக்கட்டலின்போது நிறமூர்த்தங்கள் எவ்வாறு இணைந்து கொள்கின்றன என்பதனை அறிவது அவசியமாகிறது.

• பெண்ணின் சினை முட்டையில் எக்ஸ்(XX) நிறமூர்த்தங்கள் இருக்கின்றன. ஆணின் ஒவ்வொரு விந்தணுவிலும் எக்ஸ், வைய்(XY) நிறமூர்த்தங்கள் இருக்கின்றன.

• கருக்கட்டும்போது பெண்ணின் சினைமுட்டையிலிருக்கும் எக்ஸ் நிறமூர்த்தத்துடன், ஆணின் எக்ஸ் அல்லது வைய் நிறமூர்த்தம் சேர்ந்து கொள்ளும். (X+X , X+Y)

• இவ்வாறு பெண்ணின் எக்ஸ் உடன் ஆணின் எக்ஸ் நிறமூர்த்தம் சேர்கையில் அது பெண் பாலியல் மற்றும் மகப்பேற்று அவயங்களைக் கொண்டிருப்பதால் அது பெண் குழந்தை என உயிரியல்ரீதியாக பிறப்பின் போது அடையாளப்படுத்தப்படுகிறது. (X+X))

• இவ்வாறு பெண்ணின் எக்ஸ் உடன் ஆணின் வைய் நிறமூர்த்தம் சேர்கையில் அது ஆண் பாலியல் மற்றும் மகப்பேற்று அவயங்களைக் கொண்டிருப்பதால் அது உயிரியல்ரீதியாக ஆண் குழந்தை என பிறப்பின் போது அடையாளப்படுத்தப்படுகிறது. (X+Y)

மேற்சொன்னவாறாக அல்லாமல் நிறமூர்த்தங்கள், சுரப்புகள், சில உடல் உறுப்புகளின் சேர்க்கையாக கருக்கட்டும்போது அது பால் பல்வகைமை என்பதாக உருவாகும். பால் பல்வகைமை என்றாலும் அது குறித்த ஒரு வகையாக இல்லாமல் பல்வகைமையான தன்மையைக் கொண்டது. (மேலதிக வாசிப்புக்கு: ஆங்கிலத்தில் (https://medlineplus.gov/ency/article/001669.htm, https://www.plannedparenthood.org/learn/gender-identity/sex-gender-identity/whats-intersex)

சிலர் பிறப்பின்போது (அநேகமாக மருத்துவரால்) அடையாளப்படுத்தப்பட்ட பால் எதுவோ அதனை ‘உயிரியல்ரீதியான பால்’ (பயலொஜிக்கல் செக்ஸ்/biological sex) என அழைக்கின்றனர். ஆனால் இந்தச் சொல் சிக்கல்தன்மை வாய்ந்த உயிரியல், உடற்கூறியல், மற்றும் நிறமூர்த்தங்கள் சார்ந்த நுணுக்கங்களையும், வேறுபாடுகளையும் உள்ளடக்கப் போதுமாக இல்லை என வாதிடப்படுகிறது.

உயிரியல்ரீதியாக பெண் அல்லது உயிரியல்ரீதியாக ஆண் என்னும் இருமையை மட்டும் கொண்டு நோக்குவது ஒருவருடைய உடம்பில் என்ன நடக்கின்றது என்பதனை விளக்கப் போதாமலிருக்கலாம். ஏனெனில் உயிரியல்ரீதியான பால் என்கையில் அது ஒரு நபரது உடலில் என்ன நடக்கிறது, எவ்வாறு உணருகிறார், அல்லது எவ்வாறு அடையாளப்படுத்துகிறார் என்பதுடன் ஒத்துப் போகவோ அல்லது முரண்படவோ கூடும். இவ்வாறு ஒருவரது பால் என்னவென நிர்ணயிப்பது ஒரு கரு வயிற்றிலிருக்கும்போது ஆரம்பமாகி விடுகிறது. சிலர் ‘உயிரியல்ரீதியான பால்’ எனக் கூறாமல், ‘பிறப்பின்போது அடையாளப்படுத்தப்பட்ட பால்’ எனக் கூறுவர். இது யாரோ (அநேகமாக மருத்துவர்கள்) இன்னொருவர் சார்ந்து தீர்மானம் எடுத்திருக்கின்றனர் என்பதனை அங்கீகரிக்கிறது.

பால் பல்வகைமை (இன்டர்செக்ஸ்- intersex) – என்பது என்ன?

வழமையாக சமூகத்தில் சொல்லப்படுகின்ற பெண் அல்லது ஆண் என்ற வரையறைக்குள் வருகின்ற மகப்பேற்று விருத்திக்கான அல்லது பாலியல் உடலவயவங்களைக் கொண்டிராமல் பிறக்கின்ற ஒரு நபரில் இருக்கும் பல்வகைமையான தன்மைகளைச் சுட்டி நிற்பதாகும். அதாவது பால் பல்வகைமை எனப்படும்போது அது நிறமூர்த்தங்கள், பால் திசுக்களை உருவாக்கும் உறுப்புகள், பால் ஹோர்மோன்கள் எனும் சுரப்புகள் அல்லது பாலியலுறுப்புகள் போன்ற வித்தியாசமான பல வேறுபாடுகளில் அமைந்த பால் குணாம்சங்களைக் கொண்ட நபர்களை உள்ளடக்கியதாகும். (https://www.verywellhealth.com/what-is-intersex-21881)
உதாரணமாக பார்வைக்கு பெண்போல் தோற்றமளித்தாலும் உடல் பாகங்கள் சமூகத்தால் ஆணுக்கானது என வரையறுக்கப்பட்ட அவயவங்களைக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு பெண்குழந்தை, கிளிட்டோரஸ் எனும் பெண் உறுப்பின் பகுதியைக் கொண்டிருந்தாலும் யோனியில் பிளவு இன்றியோ அல்லது ஒரு ஆண் குழந்தை, குறிப்பிட்டுச் சொல்லத் தக்க அளவிலான சிறிய ஆணுறுப்பின் பகுதியையும், பெண்ணுறுப்பின் யோனிப் பிளவினையும் கொண்டிருக்கலாம்.
பால் பல்வகைமை என்பது பிறப்பிலேயே வரும் நிலை என்றாலும் கூட, பிறப்பின்போது அனைத்து அடையாளங்களும் தெரியாமலும் இருக்கலாம். சிலவேளைகளில் பருவ வயதை அடையும் வரை பால் பல்வகைமை உடலமைப்பினை உடையவர் என்பது தெரியாமலிருக்கக் கூடும். அல்லது ஆண்மையற்றவர் என எண்ணக் கூடும். சிலர் தாம் பால் பல்வகைமையினர் என்பதனையே இறக்கும் வரை அறியாமல் இருக்கவும் கூடும்.

அநேகமான பால் பல்வகைமையினர், திருநர்கள் (ட்ரான்ஸ் ஜென்டர் –trans gender) அல்ல. அநேகமான பால் பல்வகைமை நபர்கள் தங்களது பால்நிலை வெளிப்படுத்தல்களில் அதாவது நடை, உடை, பாவனை போன்றவற்றில் பெண் அல்லது ஆண் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக பால் பல்வகைமை என்பதும் நடுநர் என்பதும் குழப்பிக் கொள்ளப்படுவதாகவும் உள்ளது. நடுநர் (என்ட்ரோஜின்-Androgyne) என்பது பொதுவாக பால்நிலை அடிப்படையிலானது. (பால்நிலை என்பது உணர்வின் – mind- அடிப்படையிலானது ) அதாவது பெண் அல்லது ஆண் என்ற பால்நிலைக்கு அப்பாலானது. இந்த நபர் ஒரு பால் பல்வகைமை நபராகவோ இல்லாமலோ இருக்கலாம். இது திருநர்களின் ஒரு வகையைச் சார்ந்தது. தான் பிறப்பிலிருந்து அடையாளப்படுத்தப்பட்ட பால்நிலையிலிருந்து மாறி, ஆண் அல்லது பெண் என்ற இருமைக்கு அப்பாலான பால்நிலையில் தம்மை அடையாளப்படுத்துபவர்கள் இவர்களாவார்.

பால் பல்வகைமையினர் எதிர்கொள்ளும் மருத்துவ சவால்கள்

பால் பல்வகைமையினர் எதிர்கொள்ளும் பெரும் சவால், ஒரு பால் பல்வகைமை நபர் என்றால் என்னென்ன உடலுறுப்புகள் எந்தெந்த அளவில் இருக்க வேண்டும், எந்தெந்த அவயவங்களின் கலப்பில் இருக்க வேண்டும் அல்லது எந்தளவு ‘வழமைக்கு’ மாறாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தீர்மானிப்பதாகும் . இங்கு பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவர்களின் கருத்தும், பல்வேறு விதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. சிலர் உள்ளுறுப்புகள் ஒரு பாலுக்குரியதாகவும், வெளியுறுப்புகள் இன்னொரு பாலுக்குரியதாகவும் இருக்கும் போது அவர்களை பால் பல்வகைமை நபர் என ஏற்காமல் நிச்சயமற்ற உடலுறுப்புகள் இருத்தல் வேண்டும் என மருத்துவர்கள் தீர்மானிக்கின்றனர். இன்னும் சிலர் ஹோர்மோன் சுரப்புகள் அசாதாரணமானதொரு கலவையாக இருப்பது வெளிப்பட்டால் மட்டுமே அதனை பால் பல்வகைமை நபர் எனக் கருதலாம் என்கின்றனர். அதாவது ‘வழமைக்கு’ மாறான பிறப்புறுப்புடன் பிறந்திருந்தாலும், மூளை ‘வழமைக்கு’ மாறான அனுபவத்தினைக் கொண்டிராவிட்டால் பால் பல்வகைமை நபர் இல்லை என்கின்றனர். இன்னும் சிலர் கருப்பையுடன், ஆண் பிறப்புறுப்பு சார் திசுக்களும் இருந்தால் மட்டுமே பால் பல்வகைமை நபர் என்கின்றனர். (https://isna.org/faq/what_is_intersex/)

இவ்வாதங்கள் முடிவுறப் போவதில்லை. பெண் அல்லது ஆண் என்ற வரைவிலக்கணத்துக்குள்ளேயே அனைத்து குழந்தைகளையும் வைத்துப் பார்க்க முயற்சிப்பதனால் பிறந்தவுடனே பிறப்புறுப்பில் வெளித்தெரியும் வித்தியாசங்களை மருத்துவர்கள் சத்திரசிகிச்சை செய்து நீக்கி விடுகின்றனர். சிலபோது பெற்றோர்கள் தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் அல்லது பெண் குழந்தைகள்தான் வேண்டும் என மருத்துவர்களை கோருவதன் அடிப்படையிலும் இச்சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. (மேலதிக வாசிப்புக்கு: https://www.hrw.org/report/2017/07/25/i-want-be-nature-made-me/medically-unnecessary-surgeries-intersex-children-us)

இவ்வாறான பால் பல்வகைமை குழந்தைகள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வளர்க்கப்படுகையில் காலப்போக்கில், குறிப்பாக பருவவயதை அடையும், அடைந்த காலங்களில் மாற்றங்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் சிறுவர்களின் உள, உடல்நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. (https://www.eurasia.undp.org/content/rbec/en/home/blog/2017/4/7/Being-intersex-is-hard-our-silence-makes-it-harder.html)
ஆகையினால் ‘வழமை’ இதுதான் என்று பச்சிளங் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்ற பாலுறுப்பு சத்

திரசிகிச்சைகளுக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும். (http://www.cirp.org/library/legal/USA/haas1/) குழந்தை எவ்வாறு பிறந்ததோ அவ்வாறே வளரவும், அதன் உடல் தொடர்பான உரையாடல்களை நடத்தவும், நம்பிக்கையை ஊட்டவும் குடும்பம், சமூகம், அரசு இணைந்து செயற்பட வேண்டும். இந்த கொடுமையான சத்திரசிகிச்சைக்கு எதிரான பால் பல்வகைமை செயற்பாட்டாளர்களின் அயராத முயற்சியால் இந்தியாவின் மாநில அரசான தமிழ்நாடு 2019ஆம் ஆண்டு, பால் பல்வகைமை குழந்தைகள் மீது இத்தகைய சத்திர சிகிச்சைகள் முற்றாகத் தடை செய்யப்படுவதாக அறிவித்தது. (https://www.hrw.org/news/2019/08/29/indian-state-bans-unnecessary-surgery-intersex-children )

பொதுவாக பால் பல்வகைமை நபர்கள் ஆரோக்கியமானவர்கள் என்றபோதும் ஒரு சிலருக்கு மருத்துவ கண்காணிப்பும், சிகிச்சையும் தேவையாயிருக்கிறது. ((https://www.reuters.com/article/us-india-lgbt-intersex/job-snubs-to-forced-surgery-indias-invisible-intersex-people-idUSKCN1V52M0)ஆனால் சமூகத்தின் அடக்குமுறை இவர்களை மருத்துவ உதவியைக் கூட நாடவிடாமல் கூசிப்போய் ஒளிந்து வாழ நிர்ப்பந்தித்திருக்கிறது.

அதேசமயம் முறையானதொரு மருத்துவ வழிகாட்டல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வல்லதாகும் என்பதற்கு அலெக்ஸ் இனது கதை முன்னுதாரணமாகும்.

“நான் அலெக்ஸ். நான் பருவமடைவதில் தாமதமானது. மருத்துவரிடம் சென்றபோது அவர் சில பரிசோதனைகளைச் செய்து விட்டு எனக்கு அதிகளவு ஆணுக்குரிய பாற்கூறுகள் இருப்பதாகச் சொல்லி பால் பல்வகைமைம். என்ற சொல்லை அறிமுகம் செய்து வைத்தார். முதல் அனுபவமே இப்படி இருந்தமை எனது அதிஸ்டம் என்றே சொல்வேன். இது எனது அடையாளத்தை நான் இழிவாகப் பார்க்காமல் நேர்மறையாக ஏற்றுக் கொண்டு வாழ பெருமளவு உதவி செய்ததுடன் எனது வாழ்க்கையில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.”

மேலதிக வாசிப்புக்கு: ஆங்கிலத்தில் (https://www.minus18.org.au/articles/i’m-intersex:-here’s-what-that-means )
எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ளவர்களின் இருப்பு

சர்வதேச மன்னிப்பு சபையின் 2018 ஆம் ஆண்டின் தகவல் உலக சனத்தொகையில் 1.7 சதவீதம் பால் பல்வகைமைக் குழந்தைகளாகப் பிறக்கின்றன என அறிவிக்கிறது. (https://www.amnesty.org/en/latest/news/2018/10/its-intersex-awareness-day-here-are-5-myths-we-need-to-shatter/ )

இதனை இன்னும் விளக்கமாகப் பார்த்தால் 2018ஆம் ஆண்டின் உலக மொத்த சனத்தொகையில் 1.7 சதவீதம் என்பது அண்ணளவாக 129.09 மில்லியன் மக்கள் பால் பல்வகைமையினர்என்பதாகும். இன்னும் விளக்கமாகச் சொன்னால் 2018இன் இலங்கை மொத்த சனத்தொகையின் ஆறு மடங்கு மக்கள் உலகம் பூராகவும் பால் பல்வகைமை நபர்கள் ஆக பிறந்துள்ளனர். இதிலும் பலருக்கு பருவமடையும் போது அல்லது பின்னரான காலப்பகுதியில்தான் தமது நிலை மாற்றமடைவது வெளிப்படுவதனால் பால் பல்வகைமை நபர்களுடைய மொத்த எண்ணிக்கை பிறப்பின் போதான அறிக்கையை விடவும் அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இத்தனை கோடிப் பேரையும்தான் கணக்கில் எடுக்காமல் இன்னும் பெண் அல்லது ஆண் என்ற இருமைக்குள் திணித்துக் கொண்டு வன்முறை செய்துகொண்டிருக்கிறோம்.

இது இவ்வாறிருக்க பிரித்தானிய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான இலங்கையின் கொள்கைகள் மற்றும் தகவல் குறிப்பில், இலங்கையில் பால் பல்வகைமை நபர்களை சமூகம் எவ்வாறு நடத்துகின்றது என்பதற்கான தகவல்கள் எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/745437/Sri_Lanka_-_SOGIE_-_CPIN_-_v3.0__October_2018_.pdf))

இது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும். இலங்கையின் சனத்தொகை பற்றிய புள்ளிவிவரம் எப்போதும் பெண், ஆண் என்ற இருமைக்குள்ளேயே தகவல்களைச் சேகரிக்கிறது. இது நேரடியாகவே இந்த இருமைக்கு அப்பாலுள்ளவர்களை ஒதுக்கும் செயற்பாடாகும். அரசாலேயே ஒதுக்கப்படும்போது இந்நபர்கள் தமது உரிமைகளையோ, சலுகைகளையோ எங்கனம் பெற்றுக் கொள்ள முடியும்?

எவ்வாறு இலங்கையின் சனத்தொகை பற்றிய புள்ளிவிபரக் கணக்கெடுப்பின்போது இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிராக அது சார்ந்த குழுக்கள் பிரச்சினைப்படுத்துகின்றதோ அதேபோன்று பால்ரீதியான ஒடுக்குமுறையும் பேசப்படல் வேண்டும். அவர்களை அங்கீகரிப்பதுடன் அவர்களது வாழ்க்கையை வலுப்படுத்தக் கூடிய சட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்குதல் வேண்டும்.

எவ்வாறு எண்ணிக்கைரீதியாக சிறுபான்மையாகவுள்ள இன அடிப்படையிலான குழுக்கள் தமது உரிமைக்காக சமூகப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்களோ அவர்கள், பால் அடிப்படையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள பால் பல்வகைமை நபர்கள் மீதான ஒடுக்குமுறையினை உணர்ந்து அவற்றைக் கவனத்தில் எடுத்து இணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் மட்டுமன்றி ஒடுக்குமுறைகளின் பல்வேறு வடிவங்களுக்காகப் போராடுபவர்கள் இவ்விடயத்தையும் சமூகத்தின் பேசு பொருளாக்குதல் வேண்டும். குறிப்பாக யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான இணைந்த போராட்டங்களே எம்மை வலுப்படுத்தும்.

துருக்கிய ஆராய்ச்சியாளரால் 2019இல் வெளியிடப்பட்ட ஆய்வு 1-1000 நபர்களில் ஒருவர் பால் பல்வகைமை நபர் என்கிறது. 14,200 குழந்தைகளில் செய்யப்பட்ட இந்த ஆய்வில் 1.3 -1000 பால் பல்வகைமை நபர்கள் என்று அறிவிக்கிறது. (https://www.webmd.com/parenting/baby/news/20190503/study-about-1-in-1000-babies-born-intersex)

கென்யா தனது தேசிய சனத்தொகைக்கான புள்ளிவிபரத்தில் பால் பல்வகைமை நபர்களைப் பதியப்போவதாக 2019இல் அறிவித்தது. இது சுமார் 49 மில்லியன் மக்கள் உள்ள இந்நாட்டில் 700,000 பால் பல்வகைமை நபர்களாவர். (https://www.bbc.com/news/world-africa-49127555)) இத்தகைய அரச உத்தரவாதத்துடன் கூடிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் இம்மக்கள் இருட்டிலிருந்து வெளியே வரக் கூடிய வழி பிறக்கும்.

இருமைக்குள் வராத இந்நபர்களை நமது சமூகங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதனால் இவர்கள் சுதந்திரமாக வெளியில் வரத் தயங்குகின்றனர். உதாரணமாக இது தொடர்பாக பார்வதி கூறுகையில்:

“நான் வெளிய போறதில்ல. கச்சான் செய்ற நான். காசு பேங்கில போடுறது, எடுக்கிறது எல்லாம் தங்கச்சிதான் செய்து தாறவ. அவ வெளியூர்ல இருக்கிறா. அவ வாற வரைக்கும் இருந்துதான் என்ட பேங்க் அலுவல் எல்லாம் முடிக்கிற நான். அது சின்ன வேலைதான். ஆனா நான் போனன் எண்டா எல்லாரும் ஒருமாதிரி பாப்பினம். அதால நான் போறதில்ல”

ஆதிக்க சமூகங்களின் விசித்திரப் பார்வைகளே ஒடுக்குமுறையின் வடிவங்களில் ஒன்றாகிறது என்பதை இது ஆணித்தரமாக உணர்த்துகிறது. இவ்வாறாக இவர்கள் சமூகத்திலிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எமது சமூகங்களில் அடக்குமுறை என்பது தனியே ஒரு அம்சம் தொடர்பானதான ஒருபோதும் இருந்ததில்லை. அதேபோன்றே பால் பல்வகைமை நபர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் பால் என்ற அடிப்படையில் மட்டுமன்றி சாதி, பால்நிலை, வர்க்கம், இனம், மதம், பிரதேசம், பாலியல்பு எனப் பல வடிவங்களின் சேர்க்கையாவதனால் அதன் தாக்கமும் தீவிரமடைகிறது. அவர்களது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வரலாறுகளும் இதில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பால் பல்வகைமை நபர்களது உரிமைகள் மீறப்படுவதனை எதிர்த்து அம்மக்கள் உலகின் பல நாடுகளில் ஒன்றிணைந்து போராடுகின்றனர். (https://www.rfsl.se/en/organisation/international/activists-building-an-intersex-movement-in-asia) இவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் சில:

• பால் பல்வகைமையினர் முகங் கொடுக்கின்ற வேதனையையும், அவர்களுக்கு அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதனையும் அங்கீகரிக்கவும்.

• பால் பல்வகைமையினர் என்று சொல்லப்படுகையில் அதனுடன் பிணைந்து வருகின்ற சமூகத்தால் நோக்கப்படும் இழிநிலையை நீக்கவும்.

• பால்வாதம், பால் பல்வகைமையினர் மீது மருத்துவரீதியாக புரியப்படும் அத்துமீறல், அதன் விளைவாக அவர்களுக்கு உண்டாகும் உளநல கரிசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.
• இத்தகைய மருத்துவரீதியான உரிமை மீறல்கள் முற்றாக தடைசெய்யப்படுவதுடன், குற்றமாக அறிவிக்கப்படல் வேண்டும்.

• ஒரு பால் பல்வகைமை நபருடைய பால்நிலை பெண்ணாகவோ, ஆணாகவோ, ஆணும், பெண்ணும் கலந்ததாகவோ, ஆணோ, பெண்ணோ அற்றதாகவோ இருக்கலாம். அதேபோல அவருடைய பாலியல் தெரிவும், எந்த நபர் சார்ந்ததாகவும் இருக்கலாம் என்பதனை அங்கீகரிக்கவும்.

• தாம் யாராக இருக்க வேண்டும் என்பதனை அவர்களது உணர்வுகளினதும், அனுபவங்களினதும் அடிப்படையில் அவர்களே தீர்மானிக்க இடமளிக்க வேண்டும்.

இத்தகைய பால் பல்வகைமை நபர்கள் சார்ந்து விழிப்புணர்வுடன் கூடிய ஒடுக்குமுறையற்ற குடும்பங்களையும், சமூகங்களையும், சூழலையும் உருவாக்குதல் வேண்டும். எங்களில் எத்தனை பேருக்கு பால் பல்வகைமை நபர்களான தோழர்கள் இருக்கிறார்கள் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். இவ்வுலகில் இருக்கும் அனைவருமே ஆசாபாசங்களோடும், உணர்வுகளோடும் உள்ளவர்களே. அது ஒவ்வொருவரது உரிமையுமாகும். ஆனால் சமூகம் பால் பல்வகைமை நபர்களை நடாத்தும் விதத்தில் காதல், கல்யாணம், குடும்பம், உறவுகள் என்ற சமூக வாழ்வையே வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அத்தோடு இந்நபர்கள் ஏதோ குற்றம் செய்தவர்கள் என்ற மனப்பாங்கையும் சமூகம் திணித்து விட்டிருக்கிறது. சமூகத்தின் இத்தகைய போக்கினால் பால் பல்வகைமை நபர்களது நடமாடும் சுதந்திரம், விரும்பிய தொழிலைச் செய்வதற்கான சுதந்திரம், குடும்பமாக வாழ்வதற்கான சுதந்திரம் போன்ற எத்தனையோ சுதந்திரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் அவர்களது இருப்பு அர்த்தமற்றவை ஆக்கப்படுகின்றன. இது மனிதத்திற்கு எதிரான குற்றமாகும்.

ஒரு குழந்தை பிறந்ததும் பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என்பதுவே முதல் கேள்வியாக எழுப்பப்படுகிறது. இதுவே பால் பல்வகைமை குழந்தைகளை நிராகரிப்பதற்கான முதல் நடவடிக்கையாகவும் அமைந்து விடுகிறது. ஆகவேதான் இருமைக்கப்பாலும் பிறக்கும் குழந்தைகள் பற்றிய அறிவும், தெளிவும் அனைவருக்கும் இருக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். அவர்களும் பெண், ஆண் குழந்தைகளைப் போன்றவர்களே என்பது திடமாக வலியுறுத்தப்பட வேண்டும். இவர்களது வாழ்க்கையையே அர்த்தமற்றதாக கணக்கிலெடுக்காமல் கடந்து போகும் நாம் எவ்வளவு பாரதூரமான அடக்குமுறைகளைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம். இவர்களை நாம் கண்டதேயில்லையே என்று நினைத்தால் ஏன் அவர்கள் நம் கண்முன் தோன்றியதேயில்லை என்பதற்கான காரணத்தை இனியாவது தேட முயற்சிப்போமா?

சுயத்தை ஆய்வுக்குள்ளாக்குவதன் ஊடாக தொடங்கிய பயணங்களில் ஒன்றே எமது இருப்பைப் பல்வகைமைப்படுத்தலும், அவற்றுக்கு பரந்து பட்ட அர்த்தங்களைச் சேர்த்துக் கொள்ளும் முயற்சியுமாகும். ஒன்றுசேரும் நண்பர்கள் வட்டம் விரிவடைய சிந்தனைத் தெளிவுகளும், கருத்தியல் ஆழப்படுத்தல்களும் எம்மில் முற்போக்கான மாற்றங்களை உருவாக்குகின்றன. பார்வதியைப் போன்ற பலருடனான உரையாடல்களும், உறவுகளைக் கட்டியெழுப்புதலும் சமூக நீதிக்கான போராட்டங்களுக்கும், பயணங்களுக்கும் இன்றியமையாததாகிறது.

குறிப்பு: காலத்துக்குக் காலம் பால், பால்நிலை, பாலியல்பு தொடர்பான விடயங்களும், சொற்களும், கோட்பாடுகளும் விரிந்து கொண்டே செல்வதனால் இங்கு கூறப்பட்ட வரைவிலக்கணங்கள் தற்போதைய நிலவரங்களின் படியானவை என்பதனை நினைவில் கொள்க.
(05.06.2020)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More