Home இலங்கை யாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள் – நிலாந்தன்..

யாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள் – நிலாந்தன்..

by admin


கடந்த முதலாம் திகதி யாழ் நூலக எரிப்பு நினைவு கூரப்பட்டது.  எதிரியை எங்கே தாக்கினால் நிலை குலையச் செய்யலாமோ அந்த இடத்தில் தாக்குவதுதான் பொதுவான இயல்பு. இன்னும் கூர்மையாக சொன்னால் எதிர்த்தரப்பின் உயிர்நிலை எதுவோ அங்கே தாக்குவது. ஈழத் தமிழர்களின் உயிர் நிலை அல்லது குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களின் உயிர் நிலை கல்விதான் என்று கருதிய காரணத்தினாலேயே யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தவர்களின் உயிர்நிலை கல்விதானா என்ற கேள்விக்கு உரிய விடையைத் தனியாக ஆராய வேண்டும்.ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அப்படித்தான் நம்பினார்கள். அதனால்தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் கூறின் அது ஒரு பண்பாட்டு ரீதியிலான இனப்படுகொலை எனலாம். இது முதலாவது இரண்டாவது நூலகத்தை எரிப்பதற்குரிய அரசியல் பின்னணி. தமிழ் மக்களுக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று சிங்களத் தலைவர்கள் ஒரு பொருத்தமான தருணத்துக்காக காத்திருந்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ் தலைவர்களுக்கும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்பிப்பது அவர்களின் நோக்கம்.

ஏற்கனவே 1977இல் நிகழ்ந்த இன வன்முறையின் போது தமிழர்களுக்கு கொடுத்த அடி போதாது என்று தென்னிலங்கையிலிருந்த இனவாத சக்திகள் சிந்தித்தன. அதைவிட நோகக்கூடிய ஒரு அடி அதுவும் இதயத்தில் அல்லது உயிர் நிலையில் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு தருணத்துக்காக காத்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு தருணத்தை மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் களம் திறந்துவிட்டது. இது இரண்டாவது உண்மை.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் களம் எனப்படுவது தமிழ் தலைவர்களின் குத்துக்கரணத்தின் விளைவு. 1976இல் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ் தலைவர்கள் 1981இல் மாவட்ட அபிவிருத்தி சபைக்கு கீழிறங்கி வந்தார்கள். ஏன் அப்படிச் சறுக்கினீர்கள் என்று கேட்டபோது அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சொன்னார் ‘மாவட்ட அபிவிருத்தி சபை ஒரு தங்குமடம்’ என்று.

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மக்களிடம் ஆணையைப் பெற்ற தலைவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபை என்ற தங்குமிடத்தை ஏற்கத் தயாரானார்கள்.இதை அவர்கள் 1979 இலேயே தொடக்கி விட்டார்கள். மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்குவதற்கான தென்னகோன் ஆணைகுழுவிலிருந்து இது தொடங்கியது. இது ஒருவிதத்தில் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுத்தமை தான். இவ்வாறு தமிழ்த் தலைவர்கள் நசியத் தொடங்கியதை அப்போதிருந்த ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெரும்பாலானவை எதிர்த்தன. அந்த எதிர்ப்பை அவர்கள் வௌ;வேறு வடிவங்களில் வெளிக் காட்டினார்கள். ‘தங்குமடம் வேண்டாம் விடுதலையே வேண்டும்’ என்று இறைகுமாரன் உமைகுமாரன் உள்ளிட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குரல் எழுப்பினார்கள்.

பொதுவாக ஆயுதமேந்திய அமைப்புகள் தேர்தலை குழப்புவதற்கு ஒன்றில் வாக்குச்சாவடிகளை தாக்குவதுண்டு. அல்லது வேட்பாளர்களை தாக்குவதுண்டு. அல்லது பிரச்சாரக் கூட்டங்களை குழப்புவதுண்டு. அதைத்தான் தமிழ் இயக்கங்களும் செய்தன.புளொட் இயக்கம் யு.என்.பி வேட்பாளர் தியாகராஜாவை சுட்டுக் கொன்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் நாச்சிமார் கோவிலடியில் நடந்த ஒரு கூட்டத்தில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து இரண்டு பேரை கொன்றது. இவை தவிர யாழ் பல்கலைக்கழகத்தில் அப்போதைய எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் காவலரின் துப்பாக்கியை பல்கலைக்கழக மாணவர்கள் பறித்தார்கள்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் தான் நூலக எரிப்பு இடம்பெற்றது. இச் சம்பவங்களை ஒரு சாட்டாக வைத்து ஓர் உணர்ச்சிகரமான பழிவாங்கும் சூழலை உருவாக்கி நூலகம் எரிக்கப்பட்டது. பூபாலசிங்கம் புத்தகசாலை எரிக்கப்பட்டது. அதோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை காரியாலயம் எரிக்கப்பட்டது. எனவே நூலகம் எரிக்கப்படுவததற்கான அரசியல் சூழல் என்று எடுத்துப் பார்த்தால் அதில் தமிழ்த் தலைவர்களின் நேர்மையின்மைக்கும் ஒரு பங்கு உண்டு. மக்களிடம் எந்த வாக்குறுதிகளை முன்வைத்து ஆணையை பெற்றார்களோ அந்த மக்கள் ஆணையை மீறி மாவட்ட அபிவிருத்தி சபை என்ற அற்பமான ஒரு தீர்வுக்கு அப்போதிருந்த தமிழ் தலைவர்கள் இழிந்து சென்றார்கள். எனவே நூலக எரிப்பை நினைவு கூரும்போது தமிழ் தலைவர்களின் அயோக்கியத்தனத்தையும் நினைவு கூரவேண்டும். இது மூன்றாவது உண்மை.

நூலக எரிப்பு அரசாங்கத்தின் அனுசரணையோடு தான் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்கள் கிடைத்தன. அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பிரேமதாஸ போன்றவர்கள் பின்னாளில் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கினர். எனினும் அக்காலகட்டத்தில் அதற்காக எந்த ஒரு சிங்களத் தலைவரும் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கவில்லை. பல தசாப்தங்களின் பின் ரணில் விக்ரமசிங்க 2016ஆம் ஆண்டு அதற்காக மன்னிப்பு கேட்டார். மாமன் செய்த செயலுக்கு மருமகன் 35 ஆண்டுகள் கழித்து மன்னிப்புக் கேட்டார். மாமன் அதைச் செய்தபொழுது மருமகனும் மாமனின் அரசாங்கத்தில் ஒரு பங்காளியாக இருந்தார். எனினும் 35 ஆண்டுகளின் பின்னாவது ஒரு சிங்களத் தலைவர் மன்னிப்பு கேட்டது உற்று கவனிக்கப்பட வேண்டியது.

ஆனால் இங்கு மன்னிப்பு மட்டும் பரிகாரம் அல்ல. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்த ஐநா தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறுகால நீதி எனப்படுவது முழுக்க முழுக்க பொறுப்புக்கூறல் தான். பொறுப்புக்கூறல் என்பது நடந்த செயல்களுக்கு மன்னிப்பு கேட்பது மட்டுமல்ல அதற்கும் அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அந்த மக்கள் தங்களுக்கு நீதி வழங்கப்பட்டதாக நம்பவும் வேண்டும். ஆனால் ரணில் விக்கிரமசிங்க இதுவிடயத்தில் முதலாவது அடியை மட்டும்தான் எடுத்து வைத்தார். இது நாலாவது உண்மை

ஐந்தாவது உண்மை அல்லது மாயை. எரிக்கப்பட்ட காரணத்தால் அந்த நூலகத்தை பற்றிய பிம்பம் அதன் அளவை மீறி பெரிதாக்கப்பட்டது. குறிப்பாக ஒரு கிறிஸ்தவ மதகுரு நூலகம் எரிக்கப்பட்ட அதிர்ச்சியில் உயிர்நீத்தமை அந்த பிம்பத்தை மேலும் உணர்வுபூர்வமாகப் பெரிதாக்க உதவியது. அதனால் அந்த நூலகம் தென்னாசியாவின் மிகப்பெரிய நூலகம் என்று ஒரு தகவல் பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல. அதைவிடப் பெரிய நூலகங்கள் தென்னாசியாவில் உண்டு. எனவே தென்னாசியாவின் மிகப்பெரிய நூலகம் என்பது ஒரு மாயை.

ஆறாவது உண்மை.அந்த நூலகத்தில் மிக அரிதான ஏட்டுச் சுவடிகளும் சில மூல நூல்களும் பேணப்பட்டன. அரிதான இந்த மூல ஆவணங்கள் காரணமாகவே அந்த நூலகத்துக்கு ஒரு தனி இடமும் முக்கியத்துவமும் உண்டு. இதுதான் உண்மை. அந்த மூல ஆவணங்களையும் மூலச் சுவடிகளையும் மீளப் பெற முடியவில்லை என்பதுதான் அதில் உள்ள இழப்பின் கனம்.

ஏழாவது உண்மை. அந்த நூலகம் மட்டும் எரிக்கப்படவில்லை அதன் நினைவுகளும் நீக்கப்பட்டன. எரிந்த கட்டடத்தை ஒரு நினைவுச் சின்னமாக ; உயிருள்ள மியூசியமாகப் பேண வேண்டும் என்று யாழ் பல்கலைக் கழக புலமையாளர் சிலர் குரல் கொடுத்தனர். ஆனால் அந்தக் காயத்தை வெள்ளையடித்து மினுக்கி மறைத்து விட்டார்கள்.அது ஒரு நினைவழிப்பு. வரலாற்றழிப்பு.

எட்டாவது- அந்த நூலகத்தை எரித்ததின் மூலம் தமிழ் மக்களின் அறிவின் மீதான தாகத்தையும் அல்லது அறிவின் மீதான அடங்கா பசியை எரித்தழிப்பதையே எதிரிகள் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்ட சாதி ஏற்றத் தாழ்வுகள் காரணமாக ஏற்கனவே சமூகத்தின் ஒரு பகுதியினரின் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டும் ஒரு விமர்சனம் முகநூலில் வைக்கப்படுகிறது.அது உண்மை.

தமது சமூகத்திற்கு உள்ளேயே ஒரு தரப்பினரின் கல்வி கற்கும் உரிமையை மறுத்தவர்கள் தம்மைவிடப் பெரிய இனம் இனரீதியாக தமது கல்வி உரிமையை மறுக்கும் போது அதை எதிர்த்து போராடும் தகுதியை இழக்கிறார்கள் என்பது சரியான ஒரு வாதம் தான். ஆனால் தமது சமூகத்தில் சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக ஒரு பகுதியினரின் கல்வி உரிமையை மறுத்தவர்கள் தங்களைத் தமிழ் தேசியவாதிகளாக கூறிக்கொள்ள முடியாது. சாதி ஏற்றத் தாழ்வுகளையும் சமய ஏற்றத் தாழ்வுகளையும் பிரதேச ஏற்றத் தாழ்வுகளையும் பால் ஏற்றத் தாழ்வுகளையும் இவை போன்ற ஏனைய சமூக அசமத்துவங்களையும் ஏற்றுக்கொள்ளும் எவரும் தேசியவாதியாக இருக்க முடியாது. எனவே ஒரு தமிழ்த் தேசியவாதி சாதியின் பேரால் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியை நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரிப்பவர் தேசியவாதியல்ல. அவர்கள் தேசிய விரோதிகள்தான்.எனவே தேசியவாதிகள் அல்லாதவர்களின் சமூக ஒடுக்கு முறைக்காக இன ஒடுக்குமுறையை நியாயப்படுத்த முடியாது.

ஒன்பதாவது உண்மையல்ல மாயை. தமிழ் மக்களின் இதயம் நூல்களில் இருக்கிறது என்று கருதித்தான் தென்னிலங்கையில் இருப்பவர்கள் யாழ் நூலகத்தை எரித்தார்கள் என்று எடுத்துக் கொண்டால் தமிழ் மக்கள் அறிவிற் சிறந்தவர்கள் என்றும் எல்லாவற்றையும் அறிவின் வெளிச்சம் கொண்டு பார்ப்பவர்கள் என்றும் அறிவை வழிபடுகிறவர்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் அதை நிரூபிக்கிறதா?

தமிழில் புலமையாளர்களாகக் காணப்பட்ட பலரும் தமிழ் இயக்கங்களிடம் இருந்து விலகி நின்றார்கள். தமிழ் இயக்கங்களில் ஓர்கானிக் இன்ரலெக்சுவல்களாக நின்றவர்கள் மிகக் குறைவு. இதனாலேயே இயக்கங்கள் படித்தவர்களை பயந்தவர்கள் கதைகாரர் என்றெல்லாம் கணித்து வைத்திருந்தன. இப்பொழுதும் தமிழில் அறிவும் அரசியலும் ஒன்று சேர்ந்து பயணிப்பதாக கூறமுடியாது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்திலும் சரி அதற்கு முன்னும் பின்னுமான மிதவாத அரசியலிலும் சரி அறிவாராய்ச்சி மையங்களை காணமுடியவில்லை. சிந்தனைக் குழாம்களையும் காணமுடியவில்லை. தமிழ் மக்கள் அறிவைப் போற்றுகிறவர்கள் என்று கூறுவது சரியா?

இப்பொழுதும் திருத்தப்பட்ட நூலகத்துக்கு போனால் ஒரு பயங்கரமான உண்மையை கண்டுபிடிக்கலாம். அங்கே அறிவைத் தேடி வாசிக்க வருபவர்களின் தொகை மிகக் குறைவு. மாறாக பாடவிதானத்தோடு தொடர்புடைய விடயங்களை அமைதியான சூழலில் படிக்கச் வருபவர்களே அங்கு அதிகம். அதாவது அமைதியான சூழலில் பரீட்சைக்குப் பாடப் புத்தகங்களைப் படிக்கச் வருபவர்கள்.தவிர நகரப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிள்ளைகள் பாட இடைவேளைகளில் படிக்க வருவதுண்டு. ஆனால் அறிவாராய்ச்சி துறைக்காக உசாத்துணை தேவைகளுக்காக அந்த நூலகத்தை பயன்படுத்துவோரின் தொகை ஒப்பீட்டளவில் குறைவு என்றே கருதப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஒரு தொகுதி நூல்களையும் உபகரணங்களையும் நூலகத்திற்கு வழங்கியது. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவோரின் தொகை மிகக் குறைவே என்று நூலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதான் நிலைமை. அறிவியல் தேவைகளுக்காகவும் ஆராய்ச்சி தேவைகளுக்காகவும் நூலகத்தை பயன்படுத்துவோரை விடவும் பரீட்சை தேவைகளுக்காக நூலகத்தை பயன்படுத்துவோர் தொகை தான் அதிகமாக இருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது இந்த லட்சணத்தில் தமிழ் மக்களின் உயிர் நிலை அறிவு என்றும் தமிழ் மக்களின் இதயம் நூல்களில் இருக்கிறது என்றும் பொய் சொல்லிக்கொண்டு இரு #யாழ்நூலகம்  #எரிப்பு #நினைவுக்குறிப்புகள் #இனப்படுகொலை #வட்டுக்கோட்டைதீர்மானம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More