மனித இனம் மட்டுமே பல காரணங்களால் ஒருவரை ஒருவர் பிரித்து பார்க்கின்றது. அத்தகைய இனப் பிரிவினைக்கு ஒரு காரணியாக மனித உடலின் நிறம் பயன்படுத்தப்படுகின்றது. உலகில் மனித உடலின் நிறங்கள், வாழும் பௌதீக நிலத்தோற்றம் மற்றும் காலநிலைக்கேற்ப வேறுபடுகின்றன. இவ்வாறு இயற்கையாகவே தோன்றும் வேறுபாட்டை செயற்கையான இனவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வருவதை உலகெங்கிலும் காணக்கூடியதாக உள்ளது. அத்தகைய செயற்பாடே அமெரிக்க வாழ் ஆபிரிக்க அமெரிக்க பிரஜை ஜோர்ஜ் புலொயிட்டின் கொடூரமான கொலை. இவரது கொலையின் பின்னர் உலகெங்கும் பல்வேறு இடங்களில் இக்கொலைக்கு எதிராக போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறன. இந்நிலையில் யார் இந்த கருப்பினத்தவர்கள்? இவர்கள் எவ்வாறு அமெரிக்காவை அடைந்தார்கள்? மேற்குலக நாடுகளில் நடந்தேறும் கருப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி நிறைந்த செயற்பாடுகள் எப்படி தொடங்கியது? என இன்னோரன்ன பல கேள்விகள் எம்மில் பலருக்கு உண்டு.
19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அத்திலாந்திக் அடிமை வர்த்தகம் இடம்பெற்று வந்தது. அக்காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான கருப்பின ஆபிரிக்கர்கள் அடிமைகளாக வெள்ளையர்களுக்கு விற்கப்பட்டனர். அவ்வாறு விற்கப்பட்ட கருப்பின மக்கள் வடஇ தென் அமெரிக்காவிற்கும் மற்றும் கரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக கப்பலில் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லும் போது கப்பலின் அளவை மீறி மக்கள் அடைக்கப்பட்டமையால் பலர் மூச்சுத்திணறலாலும் பசி பட்டினியாலும் வழியில் இறந்த கொடுமைக்ளுக்குச் சான்றாக வரலாறும் இலக்கியங்களும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. உதாரணமாக எட்வர்ட் பிரத்வெயிட் கமுவின் லிம்போ (Limbo) என்ற கவிதை கப்பலில் அனுபவித்த கொடுமைகளை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு இறந்தவர்கள் போக மற்றையவர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு புகையிலை மற்றும் கோதுமை தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இங்கு கொண்டு வரப்பட்ட கருப்பின மக்கள் தமக்கென தனித்துவமான மொழிகளைக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இக்போ, ஒருபா, சுலு, சோனா போன்ற மொழிகளின் பயன்பாடுகள் காணப்பட்டன. ஆனால் இம்மக்கள் தமக்கிடையே தம் மொழியில் உரையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மாறாக, இம் மக்கள் போர்த்துகேய , டச்சு மற்றும் ஆங்கில மொழிகளை பயன்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர். அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டவர்கள் தமது உறவினர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனித்தனியாக வௌ;வேறு இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். பெண்கள் அடிமைகளாக அமெரிக்கர்களின் வீடுகளில் ஊதியமற்ற பணிப் பெண்களாக அமர்த்தப்பட்டு உடல் உள ரீதியில் துன்புறுத்தப்பட்டனர். மேலும் ஒவ்வொரு அமெரிக்கரும் தமக்கென ஓர் கருப்பினத்தவரை அடிமையாக வைத்திருக்க உத்தியோக பூர்வ அங்கீகாரம் பெற்றிருந்தனர். இவ்வாறு கருப்பின மக்கள் அடிமைகளாக நசுக்கப்பட்டனர்.
இத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து விடுபட இம்மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர். இம் மக்களுக்காக குரல் கொடுக்க இவர்களுக்குள்ளிருந்து பலர் எழுந்தனர். பல போராட்டங்களின் விளைவாலும் , நாட்டில் உள்நாட்டு போரை தடுப்பதற்காகவும், வேலையாட்களை இழக்க விரும்பாமையுமே அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கருப்பின மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க 1863ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி கருப்பின அடிமைகள் விடுதலை பிரகடனத்தில் கைச்சாத்திட்டார். இதன் பின்னர் கருப்பின மக்களின் வாழ்வில் அடிமைத்தனம் பெயரளவில் நீக்கப்பட்டு , வேறு வழிகளில் இம் மக்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். அதன் ஆரம்பமாக ஜிம் குரோ சட்டம் (Jim Crow law) எனப்படும் பிரிவினைவாதச் (segregation) சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக அனைத்து பொது இடங்களும் வெள்ளையர்களுக்கு மட்டும் (whites only), கருப்பினத்தவர்களுக்கு மட்டும் (colored) என்ற பிரிவினையால் நிறைய ஆரம்பித்தன.
ஆபிரிக்க அமெரிக்கர்களின் பிள்ளைகள் வேறு பாடசாலைகளுக்கும் வெள்ளையின பிள்ளைகள் வேறு பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டனர். பொதுப் பேருந்துகளில் கருப்பினத்தவர் பின்புறங்களில் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். பொது பூங்காக்கள், கடைகள், உணவகங்கள் வெள்ளையின மக்களுக்காயின. கருப்பின மக்களுக்கு குறைவாகவே ஊதியங்கள் வழங்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இச் சட்டத்தில் காணப்பட்ட வரையரைகள் ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாக்குரிமையை தகர்த்து.
இக்காலப் பகுதியில் Ku Klux Klan (KKK) என்ற ஒரு குழு ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறைகளை முன்னெடுத்து இவர்கள் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபாடுவதை தடை செய்தது. இந்த காலப்பகுதியிலேயே இம்மக்களுக்காக மார்ட்டின் லூதர் கிங் இன் குரல் ஒலித்தது. இவ் அடக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் ஆபிரகாம் லிங்கனின் நினைவிடத்தில் ‘எனக்கு ஓர் கனவுண்டு’ (I have a dream) என்ற உரையாக ஒலித்தமை வரலாற்று சிறப்புமிக்கது. இவ் உரையில் ஆபிரிக்க அமெரிக்கர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவில் பின்வருமாறு காண எண்ணினார்.
நீக்ரோ என அழைக்கப்படும் ஆபிரிக்க அமெரிக்கர்களை நோக்கி, ‘நீங்கள் எப்போது திருப்தியடைவீர்கள்?’ (when will you be satisfied?) என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மார்டின் லூதர் கிங் தனது உரையில் பின்வருமாறு கூறுகின்றார். ‘நீக்குரோக்களை குற்றவாளிகளாகக் காட்டும் பொலிசாரது காட்டுமிராண்டி தனமான சொற்களால் எடுத்துகாட்ட முடியாத பேரவல நிலை தொடரும் வரை நாங்கள் திருப்தியடைய மாட்டோம். எமது நீக்ரோ பிள்ளைகளின் இளமைக்காலமும் மரியாதையும் வெள்ளையர்களுக்கு மட்டும் (whites only) என்ற வீதியோர பதாதைகளால் திருடப்படும் வரை நாங்கள் திருப்தியடைய மாட்டோம்.
இவ்வாறு துன்பப்பட்ட போதும், எனக்கு ஓர் கனவுண்டு … ஒரு நாள் இந்நாட்டில் எங்களது நான்கு சிறுவர்கள் தமது நிறத்தைக் கொண்டு கணிக்கப்படாமல் அவர்களது பண்பினையும் நடத்தையையும் கொண்டு கணிக்கப்படுவார்கள்.
எனக்கு ஓர் கனவுண்டு… அநீதிகளின் ஆக்ரோசமும் அடக்குமுறைகளின் ஆக்ரோசமும் நிறைந்த மிசிசிப்பி மாநிலம் விடுதலையும் நீதியும் நிறைந்த பாலைவனச்சோலையாக மாற்றப்படும்.
நாங்கள் இந்த புனித இடத்தில் கூடியிருப்பது அமெரிக்கர்களுக்கு அவசரமாக ஒன்றை நினைவுபடுத்தவே, படிப்படியாக எல்லாம் அமைதியாக மாறும் என்ற எண்ணத்தை மாற்றி உண்மையான ஜனநாயகம் சார்ந்த பிரமாணங்கள் வெளி வர வேண்டும். எமது நாட்டை புதைமணல் போன்ற இனவாத அநீதிகளிலிருந்து சகோதரத்துவம் நிறைந்த திடமான பாறைகளாக கட்டியெழுப்ப வேண்டும்.’ இவ்வாறு மார்டின் லூதர் கிங் ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வின் சுபீட்சத்தை தனது கனவினூடாக வெளிப்படுத்தியிருந்த போதும், புலொயிடின் கொலை உண்மையில் இம் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்களா? என்ற பெருங் கேள்வியை எழுப்புகிறது.
அமெரிக்கர்களைப் போன்று கல்வி கற்று அவர்களுக்கு சரி சமமாக அமரஇ அமெரிக்கர்களைப் போன்று ஆங்கிலத்தில் உரையாடி, பெரிய பட்டங்கள் பெற்று, அவர்களைப் போல் ஆடை அணிந்து சபையில் கருப்பினத்தவர்கள் ‘கருத்த தோலும் வெள்ளை முகமூடியும்’ அணிந்து நின்றாலும் கருப்பினம் கருப்பினம் தான் என இனப்பிரிவினையை அனுபவித்த கருப்பினத்தவருள் ஒருவராக பிரான்ஸ் பேனன் அவரது ‘கருத்த தோலும் வெள்ளை முகமூடிகளும்’ (Black skin white masks) என்ற புத்தகத்தில் அடக்குமுறை பற்றி பின்வருமாறு பதிவிட்டிருக்கின்றார்.
‘ஒரு வகையான மனிதாபிமானமற்ற செயற்பாடு எவ்வாறு மற்றொன்றிலிருந்து வேறுபடுகிறது என உறுதிபடுத்த முனைவது கற்பனையானது. இன்று நடைபெறும் மனிதாபிமானமற்ற செயற்பாடு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்றதை விட வேறுபாடான ஒன்றில்லை. எல்லா வகையான சுரண்டல்களும் ஒன்றை ஒன்று ஒத்ததாகவே காணப்படுகின்றன. அனைத்து அடக்குமுறைகளும் மனிதன் என்ற ஒரு பொருளுக்கு (object) எதிராகவே பிரயோகிக்கப்படுகின்றன.’ இக் கூற்று தற்காலத்திற்கு பொருத்தமான, முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. புலொயிடின் கொடூர கொலை , அத்தருணத்தில் என்னால் மூச்சு விட முடியவில்லை I can’t breathe) ……. என்ற வார்த்தையைக் கேட்டும் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை மேற்கொண்டமை அதிகார மற்றும் நிற இனவெறி அடக்குமுறையை எடுத்து காட்டுகின்றது.
அனேகமான நாடுகளில் கட்டமைக்கப்பட்ட இனவாதச் செயற்பாடுகள் அதிகார பூர்வமாக அந்நாட்டின் பொலிசாராலேயே முன்னெடுத்து செல்லப்படுகின்றன. இருப்பினும் இவர்களே நாட்டின் இறைமையை காப்பவர்களாக சித்தரிக்கப்படுவதையும் காணலாம்.
நாட்டின் பாதுகாவலரும் மக்களின் பிரதிநிதியுமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் CNN செய்தி பிரிவிற்கு புலொயிடின் கொலை பற்றி பின்வருமாறு கூறியுள்ளார். ‘சட்ட அமுலாக்கத்தின் கீழான சம நீதி என்பது நிறம், இனம் மற்றும் பால் கடந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் பொதுவானது. அவர்களுக்கு சம நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் அதை ஏற்கவே வேண்டும்’ என கூறுகின்றார். இக்கூற்று சட்ட அமுலாக்கத்தை போற்றுவதாக உள்ளமையைக் காணலாம்.
நாட்டில் பல இடங்களிலும் போராட்டங்கள் வெடிக்க அதனை கட்டுபடுத்த இராணுவ படைகளை குவிக்கப்படும் எனவும், ‘சூரையாடல் தொடங்கினால் அங்கு துப்பாக்கிச் சூடு தொடங்கும்’ (when the looting starts, the shooting starts) என போராட்டங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கதில் டிரம்ப் தெரிவித்திருப்பது வன்முறையை மேன்மைபடுத்துவதாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, சட்ட அமுலாக்கத்தினை நடைமுறைப்படுத்தும் பிரதிநிதிகளிடம் காணப்படும் கட்டமைக்கப்பட்ட இனவாதம் பற்றிய கேள்வியொன்று ஓ பிரையனிடம் (டிரம்பின் தேசிய பாதுகாப்பு அறிவுரையாளர்) கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்; ‘இங்கு கட்டமைக்கப்பட்ட இனவாதம் காணப்படுவதாக எனக்கு தோன்றவில்லை. என்னைப் பொருத்தவரை 99.9மூ ஆன சட்ட அமுலாக்கத்தினை முன்னெடுப்பவர்கள் சிறந்த அமெரிக்கர்களாவர். இருந்த போதிலும் சில கெட்ட ஆப்பில்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.’ என கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து வந்த மறுமொழிகள் அனைத்தும் நடந்தேறிய சம்பவங்களை புறக்கணிப்பதாகவே காணப்படுகின்றது.
கடந்த ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் 1000 ற்கும் அதிகமாக கொல்லப்பட்டவர்கள் ஆபிரிக்க அமெரிக்கர்களே ஆவர். மேலும் தவறான போதைப்பொருள் பயன்பாடு என்ற ரீதியில் 2018ம் ஆண்டு 100,000 ஆபிரிக்க அமெரிக்கர்களில் 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை போதைப்பொருள் பயன்பாடு அமெரிக்கர்களிடையே அதிகமாகவும் சம அளவில் காணப்பட்ட போதும் 100,000 பேருக்கு 350 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ள அதிகளவான கைதிகள் ஆபிரிக்க அமெரிக்கர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதே போலவே சமீபத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவைப் பொருத்தவரை பாரிய சவாலாக அமைந்துள்ளது. ஆபிரிக்க அமெரிக்கர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகளவு இறந்தவர்கள் ஆகவும் இவர்களது எண்ணிக்கை வெள்ளையின மக்களின் இறப்பின் தொகையில் மூன்று மடங்காகும் என APM ஆய்வு கூடம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இம்மக்களுக்கென எவ்வித மருத்துவ காப்பீடுகளும் வழங்கப்படாமையும் சரியான மருத்துவ பராமரிப்பின்மையுமே முக்கிய காரணங்களாக அமைந்நதுள்ளன. தொடர்ந்து ஆபிரிக்க அமெரிக்கர்களே அதிகளவு தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலைமைகள் அமெரிக்க அரசின் பாகுபாடான சட்ட ஒழுங்;கு முறைகளை எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறு ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான அடக்குமுறை என்பது தொன்று தொட்டு நடந்தேரிய வண்ணமே உள்ளது. பல இடங்களில் கருப்பின அடையாளத்தை வெள்ளை முகமூடிகள் கொண்டு தமது அறிவாற்றல் சமமானது என நிரூபிக்க முயன்ற போதும், வெள்ளையின மக்கள் தனது (self) என்பதை உயர்வாகவும் (superior) ஆபிரிக்க அமெரிக்க மக்களை பிறர் (other) என தாழ்வாகப் (inferior) பார்ப்பதுமே இவர்களை சமமாக ஏற்க மறுக்கின்றது. இவ்வாறு தினமும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இன வன்முறைக்கெதிரான செயற்பாடுகள் காலம்காலமாக எதிர்க்கப்பட்ட போதும் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்காக மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் அறவழி போராட்டங்களையும், மால்கம் எக்ஸ் வாக்குச்சீட்டா அல்லது துப்பாக்கி குண்டா (Ballet or Bullet) என்ற தனது உரையொன்றில் வன்முறை ரீதியான போராட்டத்திற்கும் அரை கூவல் விடுத்ததையும் காண முடிகின்றது. இவ்வாறு பலரும் தமது சமூகத்திற்கு நீதியைக் கொண்டு வர எத்தனித்த போதும் சம நீதி என்பது ஆபிரிக்க அமெரிக்கர்களை பொருத்தவரை கானல் நீராகவே உள்ளது.
‘சமாதானத்தை சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது ஏனெனில் யாராலும் சுதந்திரமற்ற சமாதானத்துடன் வாழ முடியாது.’ (Malcolm X)
தர்ஷினி சண்முகம்
மொழிகள் அலகு
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்
கிழக்குப் பல்கலைக்கழகம்இ இலங்கை