நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினை ஆதரிக்கப் போவதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சிறு பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாருமான எஸ்.புவனேஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்தினை மறுத்து அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் செவ்வாய்க்கிழமை(9) தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது சங்கத்தின் பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாருமான எஸ்.புவனேஸ்வரி கட்சி ஒன்றின் வேட்பாளரை ஆதரித்து திருக்கோவில் விநாயகபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு கருத்துக்களை கூறி இருந்தார்.
இந்த விடயத்தை நான் மறுக்கின்றேன். கட்சி ஒன்றிற்கு ஆதரிப்பதாக கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்த பெண் எமது சங்கத்தின் சார்பாக உள்ள ஒரு பிரதேச தலைவராவார்.இவரை தற்போது எமது சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளோம். இது தவிர எமது சங்கமானது இதுவரை எந்தவொரு தரப்பினர்களுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ தேர்தலில் ஆதரிப்பதாக எந்தவொரு முடிவினையும் எடுக்கவில்லை.வட கிழக்கு பகுதியில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கமானது இவ்வாறான ஆதரவு நிலைப்பாட்டினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எடுக்க பொருத்தமான உரிய தீர்வுகளை எமது சங்கம் பெறும் என்ற நம்பிக்கையுடன் நாம் எமது பயணத்தை கொண்டு செல்கின்றோம்.
எனவே தயவு செய்து அரசியல் சாயங்களை பூசி எமது போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாம் என கோருகின்றேன் என்றார். #நாடாளுமன்றத்தேர்தல் #அரசியல்தரப்பினரை #காணாமல்ஆக்கப்பட்டவர்களின் #ஸ்ரீலங்காபொதுஜனபெரமுன