வெளிநாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் இலங்கையர்கள், தமது சொந்த நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏன் மௌனம் காக்கின்றனர்? என இலங்கையின் முன்னணி மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜோர்ஜ் ப்லொய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்க காவற்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள் வரவேற்கத்தக்கது என, மனித உரிமைகள் ஆர்வலர் ருகி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவிலோ அல்லது இந்தியாவிலோ எந்தவொரு நாட்டிலும் காவற்துறையினரின் அல்லது அரசாங்க அதிகாரிகளின் அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் முன்நிற்க வேண்டும்.” என இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலியுறுத்திய ருக்கி பெர்னாண்டோ, ”இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஏன் துணை நிற்கக்கூடாது?” எனவும் கேள்வி எழுப்பினார். இந்த பின்னடைவிற்கு இலங்கை ஊடகங்களும் பொறுப்பு என சர்வதேச புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
“ஜோர்ஜ் ப்லொய்ட்டின் மரணத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தை, இலங்கையில் நிகழும் மரணங்கள் மற்றும் கொலைகளுக்கு உள்ளூர் ஊடகங்கள் ஏன் வழங்குவது இல்லையெனவும், இவைகளுக்கு எதிராக எமது சமூகம் ஏன் கிளர்ந்தெழுவதில்லை” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நம்பகமான ஆதாரங்களைக் கொண்டுள்ள, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு ஆதரவு வழங்கிய கட்சியொன்று அமெரிக்காவின் ஜோர்ஜ் ப்லொய்ட் என்ற கறுப்பின மனிதனின் படுகொலைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலையும் அவர் நினைவு கூர்ந்தார்.
சர்வதேச அரங்கில் அரங்கேறும் அநீதி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக இலங்கையர்கள் எழுந்து நிற்க வேண்டிய அதேவேளை, தமது நாட்டில் இடம்பெறும் அநீதிகள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராகவும் குரலெழுப்ப வேண்டுமெனவும் ருக்கி பெர்னாண்டோ வலியுறுத்தினார்.
இலங்கையில் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் மஹர சிறைச்சாலையில் ஒரு மாதத்திற்கு முன்பு காவிந்தத இசுரு என்ற இளம் கைதி கொல்லப்பட்டமை பற்றிய தகவல்களை வெளிக்கொண்டுவரும் வகையில், கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ருக்கி பெர்னாண்டோ, இலங்கையில் சிறைக்கைதிகளின் அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள சிறைகளில் பத்தாயிரம் பேருக்கு மாத்திரமே இடவசதி காணப்படுகின்ற நிலையில், சுமார் 26 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கைதிகள் ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்படுவதன் ஊடாக அவர்கள் கடுமையான அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளாவதாக அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் சந்தேகநபர்கள் மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களுக்கு அமைய, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 81 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக காணப்படாத சந்தேகநபர்கள் மாத்திரமே என ருக்கி பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நீதிமன்றங்களால் தண்டனை பெற்று, சிறை வைக்கப்பட்டுள்ளவர்களில் அறுபது சதவீதத்துக்கும் அதிகமானோர், தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் சிறைத் தண்டனையை அனுபவிப்பதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா, அந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் செயற்பாட்டாளர் ஷமிலா லியனாரச்சி ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.