உலகமே எதிர்கொண்டிருக்கும் பேரிடர் என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை இன்றளவும் அதன் வீரியம் குறையாமல் உலுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்திய சார்ஸ், எபோலா வைரஸுக்கு மத்தியில் கொரோனா தொற்று அச்சம் பரவலான மற்றும் தாக்ககரமான பல்வேறு விளைவுகளை இன்றுவரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த வருட இறுதியில் இதன் பரவல் நிலையை அல்லது தொற்றாளரை சீனா கண்டறிந்த போதும், சீனாவின் அசமந்தபோக்குதான் உலக நாடுகள் இன்று எதிர்கொள்ளும் இத்தகையதொரு பேரிடருக்கு காரணம் என பல்வேறு நாடுகளும் சீனா மீதும் அதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் (W.H.O) மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.
உலக பொருளாதாரம், உலக சுகாதாரம், கல்வி, போக்குவரத்து என அனைத்திற்குமான முடக்கநிலையை கொரொனா ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை உலக நாடுகள் பரவலாக ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் முக்கிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. சீனாவில் தொடங்கி அமெரிக்கா உட்பட பல்வேறு வல்லரசுகளையும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும், ஒட்டுமொத்த உலகத்தையும் கொரொனா நிலைக்குலையச் செய்துள்ளது.
தொற்று, தொற்றுமூலம், தோற்று காவி என கொவிட்-19 தொடர்பான சந்தேகங்களும், கேள்விகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அவரவர் துறை சார்ந்து செயல்படுவது தொடர்பாகவும், மாற்றுவழிமுறைகளை கைக்கொள்வது தொடர்பாகவும் பரவலாக சிந்தித்தும் செயற்பட்டும் வருவதையும் அவதானிக்க முடிகிறது.
தொற்று தொடர்பான தீர்க்கப்படாத சந்தேகங்கள் தொடர்கின்ற நிலையில், அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே இருந்து வருகின்ற சுகாதார ஆலோசனைகளே கொவிட்- 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குமான முன்னாயத்தங்கள் என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டு வருகின்றன.
அடிக்கடி கைகளைக் கழுவுதல், இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டைகளை பயன்படுத்துதல் என்பவற்றோடு மிகப் பிரதானமாக சமூக இடைவெளியை பேணுதல், முகமூடிகளை, முககவசங்களைப் பயன்படுத்துதல் ஆகிய ஆலோசனைகள் பாதுகாப்பு வழிமுறைகள் என்ற அடிப்படையில் பரவலாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.
ஊடகங்களும், சமூக வலைதளங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி பாதுகாப்பு வழிமுறைகளை, அசையும் காண்பியங்களாகவும், விளம்பரங்களாகவும் தாங்கி வருகின்றன.
பிரதான வழிமுறை என்ற அடிப்படையில் முன்மொழியப்படும் முகமூடிகளை பயன்படுத்தல், சமூக இடைவெளியை பேணுதல் ஆகிய பத பிரயோகங்கள் கணிசமான அளவு பயன்பாட்டில் இருந்து வருகின்ற நிலையில், இத்தகைய சொற்களின் அல்லது சொற்றொடர்களின் பொருத்தப்பாடு குறித்தும் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
குறிப்பாக இத்தகையதொரு பேரிடர்க் காலப்பகுதியில், அதிகப்படியான விளம்பரங்கள், விழிப்புணர்வு செய்திகள் ‘for everyone’s safety please wear a mask while riding’, ‘for your safety and the safety of others, A mask should be worn’, ‘ keep safe and Wear a face mask’ , ‘wearing a face mask correctly, can heb prevent the spread of covid-19 to others’, ‘ My mask protects you, your mask protects me’ என்பதாக அமைவதையே பரவலாக அவதானிக்க முடிகிறது.
இவை தமிழாக்கம் அல்லது சிங்கள மொழிபெயர்ப்பு செய்யப்படும்போது பெரும்பாலும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக( தமிழ் – முகமூடி , முககவசம், சிங்களம் – முகாவரணய ஃமுஹுனு ஆவரணய) அமைந்து விடுவதை அவதானிக்க முடிகிறது. இந்த அடிப்படையில்தான் முகமூடி அல்லது ஃபேஸ் மாஸ்க் என்ற சொல்லின் பயன்பாடு குறித்தும் நோக்க வேண்டி இருக்கிறது.
1. முகமூடி பற்றிய தெளிவு
நமது பண்பாட்டை பொருத்தவரை, முகமூடி என்பது புழக்கத்தில் உள்ள அதேவேளை மிகப் பழக்கப்பட்டு போனதொரு சொல்லாடல். குறிப்பாக, முகத்தை மூடி, வேறொரு உருவத்தைக் காண அல்லது விலங்கு பறவைகள் உருவத்தை பெற்றுக்கொள்வதற்காக அணியப்படுவது என்பதான புரிதல் தான் பரவலாக இருந்து வருகின்றது. குழந்தை முதல் பெரியவர் வரை பல்வேறு விழாக்கள், சடங்குகள் அனைத்திலும் முகமூடி அணிதல் பரவலாக இடம்பெறுகிறது.
அதேநேரம், குழந்தைகள் விளையாட்டுக்காக, முகமூடிகளை அணிந்து விளையாடுதல், பயமுறுத்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் அவதானிக்கலாம். இதேநேரம், பல்வேறு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் விபரிக்கும் போது முகமூடி கொள்ளைக்காரர்கள் என்ற பதம் பரவலாக பயன்படுத்தப்படுவதையும் அவதானிக்கலாம்.
ஆக இத்தகைய எடுத்துக்காட்டுகளிலிருந்து ஒருவரின் உண்மையான முகத்தோற்றத்தை மறைப்பதற்காகவும், முழுமையாக முகத்தை மூடுவதற்காகவும் பயன்படுவது முகமூடி என்பது தெளிவாகின்றது. அவ்வாறே கவசம் என்ற சொல்லாடல் பெரும்பாலும், விளையாட்டுத்துறையிலும் போர்களிலுமே ( தலை கவசம், மார்பு கவசம் ) பயன்பாட்டில் இருந்து வருவதையும் அறியலாம்.
2. மூக்கையும், வாயையும் மூடுவதற்கு பயன்படுத்துவதை முகமூடி என வரையறுப்பதின் பொருத்தப்பாடு.
கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக முன்மொழியப்படும் பாதுகாப்பு வழிமுறைகளில் முகமூடி பயன்பாடு பிரதானமானது. ஆயினும், முகமூடி என்பது ஏற்கனவே சொல்லப்பட்டது போல, உண்மையான முகத்தோற்றத்தை மறைப்பதற்கு பயன்படுவது என்ற தெளிவு இருக்கின்ற பட்சத்தில், தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் மூக்கையும் வாயையும் மூடுவதற்கான ‘மூக்கு வாய் மூடி’யை முகமூடி என்று வரையறுத்தல் எத்துனை பொருத்தப்பாடு உடையது என்பது குறித்து சிந்திக்க வேண்டி இருக்கிறது.
சமூக இடைவிலகல் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பிரதான வழிமுறை என்ற வகையில் முன்மொழியப்படும் மற்றொரு ஒரு முக்கிய விடயம் ஆகும்;. சமூக இடைவிலகளாக, சமுக இடைவெளியாகக் குறிப்பிடப்படும் சொல்லின் பொருத்தப்பாடு என்பது, மூன்று கட்டங்களில் ஆராயப்பட வேண்டியது.
1) சமூக இடைவிலகல், சமூக இடைவெளி, சமூகத் தூரப்படுதல் பற்றிய தெளிவு.
சமூக இடை விலகல், சமூக இடைவெளி, சமூக தூரப்படுத்தல் முதலாம் பொருள்படும் வகையிலே social distance எனும் சொல்லாடலின் தமிழாக்கமாக மேற்கண்ட சொற்கள், சமகாலசூழலில் பயன்பாட்டிலிருந்து வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. இடைவிலகல் என்பது பொதுவில் நடைமுறையில் இருந்து, வருகின்ற ஏதேனும் முக்கிய விடயம் ஒன்றிலிருந்து முற்றாக விலகி இருத்தல் அல்லது குறித்த துறையுடனான தொடர்பிலிருந்து முற்றாக விலகியிருத்தல், தொடர்பை முற்றாக துண்டித்தல் என்றே அறியப்படுகின்றது. இந்த அடிப்படையில் தான் பாடசாலை மாணவர் இடைவிலகல் என்ற சொல்லாடல் பரந்தளவில் நம் மத்தியில் பரிச்சயமாகியுள்ளது. ஆனால், சமகால சூழலில் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறை என்ற அடிப்படையில் ‘சமூக இடைவிலகல்’ அல்லது ‘சமூக இடைவெளி’ என்பதான சொல்லாடல், சமுக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றமையை அவதானிக்கலாம். ஆங்கிலத்தில் ‘ social distance ‘ என்றும், சிங்களத்தில் ‘சமாஜ துரஸ்தபாவய’ என்றும் பயன்படுத்தப்படுகின்றது.
சமூக இடைவிலகல் என்பது நமது பண்பாட்டை பொருத்தவரை புழக்கத்தில் இருக்கின்ற பரிச்சயமான, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அல்லது பாரதூரமான விளைவுகளை சுட்டக் கூடிய ஒரு சொல்லாடலாகவே அமைகிறது. குறிப்பாக சமூக இடைவெளி அல்லது சமூக தூரப்படுத்தல் என்பது பல்வேறு பரிமாணங்களிலும் பிரயோகிக்கப்படுவதை அவதானிக்கலாம். சமூக தூரப்படுத்தல் என்பது சாதி ரீதியாக, இன ரீதியாக, பால் ரீதியாக, நிற அடிப்படையில் என தூரப்படுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலை என்பது, அனைத்துவகையான பண்பாட்டுச்சூழலுக்குள்ளும், நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றளவிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய இடைவெளி, அல்லது தூரப்படுத்தல் என்பது எப்போதும் எதிர்மறையான விளைவுகளுக்கே இட்டுச்சென்றுள்ளமையை தான் ஹிட்லர் முதல் அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஜோர்ஜ் ஃப்லோய்ட் கொலை வரை நினைவூட்டுகிறது.
நமது பண்பாட்டில், குறிப்பாக சாதிவிலக்கல் என்பது சமூகத்தூரப்படுத்தலாக அடையாளப்படுத்தப்படுகிறது. இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், கணவனை இழந்த பெண்ணை கைமைநோன்பு என்ற அடிப்படையில் முழுமையாக சமூகத்தில் இருந்தும், சடங்காசாரங்களிலிருந்தும் விலக்கி வைத்தல் சமூகத் தூரப்படுதல் அல்லது சமுக இடைவெளியாகவே அறியப்படுகிறது. சமகாலத்தில் பால்நிலை தொடர்பான சரியான புரிதலின்றி மாற்று பாலினத்தவரை சமுதாய பால் கட்டமைப்புகளிலிருந்தும் விலக்கி வைத்தல் பரவலாக பேசப்படுகின்ற விடயமாக இருந்து வருவதையும் அவதானிக்கலாம்.
ஆக இத்தகைய அவதானிப்புகளிலிருந்து சமூக இடைவிலகல் அல்லது சமூகத் தூரப்படுத்தல் அல்லது சமூக இடைவெளி என்பது குழுமமாக மற்றொரு குழுமத்தோடு இணைய விடாது தூரப்படுத்தி வைத்தல் என்பதையே தெளிவுபடுத்துகின்றது. விளக்கச் சொன்னால் எக்காலத்திலும் எந்தவிதமான தொடர்புகளும் பேணமுடியாது துண்டித்து வைத்தல் என்பதாகும். ஆக, சமுக இடைவெளி என்பது தொடர்புகளை முற்றாக துண்டித்து வைத்தலும், மீள் இணைப்பிற்கு வாய்புமறுக்கப்பட்ட சூழல் என்பது தெளிவாகின்றது.
2) ஆளாள் இடைவெளியை, சமுக இடைவெளியாக வரையறுத்தலின் பொருத்தப்பாடு.
மேலே எடுத்தாளப்பட்டவற்றிலிருந்து, சமுக இடைவிலகல் அல்லது சமுக இடைவெளி என்பது எத்தகைய ஒரு வரையறைக்குள் உள்ளடங்குகின்றது என்பது தெளிவாகின்றது. உண்மையில், தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறை என்ற அடிப்படையில் ஆளாள் இடைவெளி என்பது குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியாக இருத்தல் வேண்டும் என்றே குறிப்பிடப்படுகின்றது. ஆக தனி நபர்களுக்கு இடையிலான, ஆட்களுக்கிடையிலான உடல் ரீதியான இடைவெளி ( physical distance ) தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறை என்பது தெளிவாகின்றது. தொற்று வீரியம் குறைவடைந்து மறைந்து போகக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் என்ற எதிர்வுகூறல்கள் இருக்கின்ற நிலையில், பேணப்பட வேண்டிய ஆளாள் இடைவெளியை அல்லது உடல் ரீதியாக பேணப்பட வேண்டிய இடைவெளியை சமூக இடைவிலகல் அல்லது சமூகத் தூரப்படுத்தல் அல்லது சமூக இடைவெளி என்பதாக குறிப்பிடுவதின் பொருத்தப்பாடு என்னவாக இருக்கிறது?, இருக்கப் போகிறது?
3) சமுக இடைவெளி அல்லது சமுகத் தூரப்படுத்தல் என்பதான சொல்லாடல்கள், ஆளாள் இடைவெளியை குறிக்க பயன்படுத்துவதிலுள்ள பாரதூரமான, விளைவுகள்.
மனிதர்கள் சமூகத்தின் கூறு என்ற அடிப்படையில் இயல்பாகவே சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ வேண்டிய கடப்பாடுடையவர்கள். எனினும், இயந்திரமயமான சூழல் தனியன்களாக வாழ்வதற்கான சூழலையே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எனவே, ஏற்கனவே தனியன்களாக வாழும் மனிதர்கள் மத்தியில் சமூக இடைவெளி என்பதான சொற்பிரயோகங்களின் பயன்பாடு எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
குறிப்பாக, தொற்றின் பரவல் நிலை சீனாவின் வூஹான் மாநிலத்தில் பரவலடைந்த நிலையில், சமுக இடைவெளி என்ற அடிப்படையில், சீன அரசாங்கம் முழுமையான முடக்கநிலையை வூஹான் மாநிலத்தில் கடுமையாக அமுல்படுத்தியிருந்தது. இந்நிலையில் சமுக வலைதளங்களில், பரவலாக வலம் வந்த ஒரு வீடியோ ஒளிப்பதிவு, சமுக இடைவெளி, அம்மாநில மக்களின் மனஉளைச்சல் நிலையின் பாரதூரமான விளைவுகளின் வெளிப்பாடு என்ற அடிப்படையில் உலகளவில் பேசுபொருளாகி இருந்தமையும், நோக்கப்பட்டமையும் இங்கு எடுத்துநோக்கப்பட வேண்டியிருக்கிறது.
ஆக, தொற்றுநீக்கத்தின் பின்னர் சமுகமாக ஒன்றிணைய போகும், மக்கள் குழுமத்தின் பேரவாவிற்கு மத்தியில், சமுகத்தூரப்படுத்தல், அல்லது சமுக இடைவெளி என்பதான சொற்பிரயோகங்கள் தனியங்களாகவே வாழபழக்கப்பட வேண்டிய மனிதர்களுக்கான எதிர்வுகூறல் என்பதன் அடிப்படையிலான பிரயோகங்கள் தான் என்ற ஐயநிலையையே தோற்றுவித்திருந்தது.
சமூகத் தூரப்படுத்தல் அல்லது சமூக இடைவெளி இதுவரை காலமும் முற்றாக துண்டிக்கப்பட்டத் தொடர்புகளை வரையறுக்கின்ற பட்சத்தில், சமகாலத்தில் உலகமே எதிர்க் கொண்டிருக்கின்ற, அசாதாரண சூழல் என்பது ‘ Stay home, Stay safe ‘ என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், தனியன்களாக, வாழப்பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டை தான் பரவலாக அவதானிக்க முடிகிறது. ஆக, இத்தகையதொரு சூழலில் சமுக இடைவெளி என்பதான சொல்லாடல், முற்றாக தொடர்புகளை துண்டித்து வாழுவதற்கான, மனபாங்கை அல்லவா பரவலாக உருவாக்கப் போகிறது.
ஏற்கனவே, மாணவர் சமுதாயத்தின் மத்தியில். போட்டிப் பரீட்சைகள் போட்டி மனபாங்கையும், தத்தம் சுயம்சார்ந்து சிந்திக்கின்ற நிலைப்பாட்டையும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், சமுக இடைவெளி என்ற சொற்பிரயோகம், ஒன்றாகக்கூடி வாழ்வதற்கான சூழல் சார்ந்த தேவையை, சமுகம் சார்ந்து சிந்திக்க வேண்டிய நிலையின் தேவைப்பாட்டை முற்றாக மறுதலித்து வாழும், வாழத்தலைப்படும் சமுக உருவாக்கத்திற்கான வாய்ப்பையே பெற்றுக் கொடுக்கப்போகிறது.
சமுக இடைவெளி, அல்லது சமுகத் தூரப்படுத்தல் என்ற சொல்லாடல் சமுக, பண்பாட்டளவில், அதற்கான ஒரு பாரதூரமான செயன்முறை கட்டமைப்பை கொண்டிருக்கின்ற பட்சத்தில், இத்தகையதொரு அசாதாரண சூழலில், வேலையின்மை, சமுகத் தொடர்பு இன்மை, தனித்திருத்தல் என இன்னப்பிற வகையிலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்ற மனிதக்குழுமத்தின் மத்தியில், ஆளாள் இடைவெளியை, ‘சமுக இடைவெளி’ என்பதான செயன்முறையாக வரையறுத்தல் விரிசல்நிலைகளை பலப்படுத்தக்கூடிய பேராபத்தையல்லவா ஏற்படுத்த போகிறது.
ஆக, இன்றளவிலும் இயந்திர மயமான சூழலில் உறவுகள் விரிசல் கண்டுள்ள நிலையில் தனியன்களாக மனிதர்கள் வாழ பழக்கப்பட்டு போன நிலையே பரவலாக அவதானிக்க முடிகிறது. இத்தகையதொரு சூழ்நிலையில், ஆளாள் இடைவெளியை, சமூக தூரப்படுத்தல் அல்லது சமூக இடைவெளி என்பதாக குறிப்பிடுதலும், சுகாதார நலன் கருதி, பேணவேண்டிய ஒரு மீட்டர் ஆளாள் இடைவெளியை சமூக இடைவிலகளாக அல்லது சமூக இடைவெளியாக கருதுதலும் எத்துனை பொருத்தப்பாடு உடையது என்பது குறித்தும், அத்தகைய சொல்லாடலகள்; ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இந்த அடிப்படையில் தான் ஏற்கனவே பல்வகையிலும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கின்ற மனிதர்கள் மத்தியில் இத்தகைய சொல்லாடல்களின் உபயோகம் குறித்தும், அவை ஏற்படுத்தப் போகின்ற விரிசல்நிலைகள் குறித்தும், சமுக இடைவெளி என்ற சொல்லாடல் சமுகக்கட்டமைப்பு சார்ந்தும் உளவியல் சார்ந்தும் மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்ற தாக்கநிலை குறித்தும் இத்தகையதொரு அசாதாரண சூழலில் சிந்தித்து செயற்படல் என்பது தேவைப்பாடுடையதாகிறது.
கொரொனா தொற்று உலகளவிலான முடக்கநிலையை ஏற்படுத்தி, அசாரண வாழ்வியல் சூழலுக்குள் நிர்பந்தமாகத் தள்ளிவிட்டிருக்கின்ற நிலையில், ஆரோக்கியமான சமுக மீள்கட்டமைப்பு என்பது, உலகளவில் வேண்டப்படுகின்ற ஒன்றாகவே இருந்துவருகின்றது. இத்தகையதொரு சூழலில், கையாளப்படும் சொற்பிரயோகங்கள், மேலும் ஒரு அசாதாரண சூழலுக்குள் மக்கள் சமுதாயத்தை இட்டுச் செல்லாத வகையில், பயன்படுத்தலும், அதனூடாக, ஆரோக்கியமான சமுக மீள்கட்டமைப்பு உருவாக்கத்தில் பங்குகொள்ளலும் நமது தார்மீகப் பொறுப்பாகிறது.
கலாநிதி.சி.ஜெயசங்கர்.
இரா.சுலக்ஷனா.