சமீப காலத்தில் உலகையே தன்வசத்தில் வைத்துக்கொண்டிருக்கும் கொடிய நோய் என்று எல்லோராலும் பேசப்படும் கொரோனாவானது, அது தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை அதன் பிடியை சற்றும் தளர்த்தாமல் பெறுமதியான மனிதனின் உயிருடன் விளையாடிவருகின்றது. சிறியவர் பெரியவர் என்று பாராது தன் குணத்தை சிறிதும் மாற்றாது ஒரே வகையான தாக்கத்தை காட்டி வருகின்றது. பல விதமான முயற்சிகள் எடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை.
இவ் உயிர் கொல்லி நோயிலிருந்து பாதுகாப்புபெற இயற்கையாகவே, தங்களை தனிமைப்படுத்தி கொண்டு ஏனையோரையும் பாதிக்காமல் தனிமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவானது மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்ட வண்ணம் பரவி வருகின்றது. இன்றுவரை நோய்க்கான எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படாமை இன்னும் மனதை வாட்டுகின்ற நிகழ்வாக காணப்படுகின்றது.
ஆரம்பத்தில் சீனாவை மட்டும் பாதித்த கொரோனா எனும் கொடிய நோய் இப்போது உலக நாடுகளையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக ஏராளமான உயிர் பலி நிகழ்ந்து வருவதையும் அவதானிக்கலாம். இந் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இத் தாக்கத்தில் இருந்து மக்களின் பெறுமதியான உயிரை பாதுகாத்து கொள்வதன் நோக்கத்தில் நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக மக்களின் நகர்வை குறைப்பதற்காகவும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
‘கல்வி என்பது இவ்வுலகில் பெரிதும் மதிக்கப்படும் ஒன்று கல்வி ஒன்றே இந்த உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம்’ என்பது நெல்சன்; மண்டேலாவின் வாக்கு. ஒரு மரத்திற்கு எப்படி அதன் வேர்கள் முக்கியமோ அது போல மனிதனுக்குக் கல்வி இன்றியமையாதது. இன்றைய காலத்தில் கல்வி அத்தியாவசிய தேவையாக மாறி விட்டது. கல்வியை கற்பதனால் மனிதர் உயர்ந்த இடத்தினை அடைகின்றனர். ‘ஒழுக்கம் உயிருக்கு மேலாக ஓம்பப்படும்’ என்பது முது மொழி. இவற்றை எல்லாம் நோக்கும் போது கல்வியை எவ்வாறேனும் பெற வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகிறது.
தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக வீட்டினுள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின்; போக்குவரத்து சேவைகள், வங்கிச்சேவைகள், கல்விச்சேவைகள் மற்றும் தனியார் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டது. நாட்டு மக்களின் சுகமான வாழ்வுக்காக நாடு முழவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாது வீடுகளில் இருந்து இடைவெளியை பேணிப்பாதுகாத்து வருகின்றனர். பாடசலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் இயங்கி வரும் பாடசாலைகள் கால வரையறை இன்றி மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு மந்த நிலையில் செல்கின்றது.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்வியமைச்சு பாடசாலை மீண்டும் திறக்கும் திகதியை ஒத்தி வைத்துள்ளது. ஆகவே பாடசாலையில் ஒரு நேரசூசியின் அடிப்படையில் ஆசிரியரின் வழிகாட்டலில் கல்வியை பெற்றுவந்த மாணவர்கள் இன்றைய சீரற்ற சூழ்நிலையால் பாதுகாப்பாக பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றனர்.
பாடசாலைகள் சென்று ஆசிரியரின் வழிகாட்டலுடன் கல்வி கற்பதன் விளைவாக மாணவர்கள் தங்கள் திறமைகளை நேரடியாக வெளிப்படுத்துவார்கள். அதன் மூலம் பல தலைமைத்துவங்களும் உருவாக்குவதும் வழமை. எனினும் கொரோனாவால் பாதுகாப்பு கருதி வீட்டில் இருக்கும் மாணவர்கள் தங்கள் கல்வியை ஆர்வத்தோடு கற்பதாக தெரிய வில்லை. இதனால் மாணவர்களுக்கு முன்னர் கற்பிக்கப்பட்ட அனைத்தும் விடயங்களில் இருந்தும் நீட்சியடைந்து செல்லும் நிலமையே தற்போது ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் வீட்டில் எவ்வித கற்றல் செயற்பாடுகள் இன்றி இருகின்ற அதேவேளை கற்றலில் மந்த நிலை ஏற்பட்டள்ளது. இதனால் கல்விக்கும் மாணவர்களுக்கும் இடைவெளி அதிகரித்து செல்கின்றது. கொரானா விடுமுறை மாணவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை. அதற்கு பதிலாக தொலைக்காட்சி மற்றும் விளையாட்டுடன் இவர்களின் வாழ்கை கழிக்கின்றனர்.
பாடசாலை நடைபெறாத காரணத்தால் மாணவர்கள் கல்வியை விருப்பத்தோடு கற்பதற்கான சூழல் அரிதாகவே காணப்படுகிறது. பெற்றோர்களும் பாடசாலைகள் நடைபெறாவிடத்து தங்கள் பிள்ளைகளை கல்வியை கற்பதற்காக வற்புறுத்துவதும் இல்லை. கொரோனாவின் கொடிய தாக்கம் குறிப்பிட்ட காலத்திற்கு பின் குறைவடைந்து நாடு பழைய நிலமைக்கு வந்தபின் நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் பழயை நிலைமை போல் மாறிவிடும். அதன் பின் கல்விச் செயற்பாடுகளும் மீள ஆரம்பிக்கும்.
இதனால் மாணவர்கள் தங்கள் கல்வியை அன்றாடம் கற்று அதனை பரீட்சயமாக்கி வைத்தல் சிறந்ததாகும். அதன்மூலம் மாணவர்கள் கல்வி எனும் ஆயுதம் கொண்டு சிறந்தவர்களாய் திகழ்வர். இதனை கருத்தில் கொண்டு கல்வியமைச்சினால் வீட்டில் இருந்தவாறே கல்வியை தொடர்வதற்கு பல வழிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 2020ஆம் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிப்பதற்காக வீட்டிலிருந்து கல்வியை கற்று சிறந்த முறையில் பெறுபேறுகளை பெறுவதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி மற்றும் வானொலியின் மூலமும் நடைபெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்நிலை (online) மூலமும் கல்வி போதிக்கப்படுகின்றது. வீட்டில் கல்வியை தொடர்ந்து கற்ப்பதற்கும் இவ்வாறான வழிகளின் மூலமும் மேன்மேலும் சிறக்க இவை வழிவகுக்கின்றது. எங்கள் நாட்டில் அனைத்து சேவைகள் உள்ள இடமுண்டு. எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களுமுண்டு. இதனால் onlnestudy என்பது நாட்டில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் உகந்ததன்று.
இந்த வருடம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வியும் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் மூலம் தேவையான பாடத்திட்டங்களை மாற்றுவழிமுறையில் போதிக்கப்பட்டு வருகின்றது. இந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றும் தரம் ஜந்து புலமைப்பரீட்சை, கா.பொ.த சாதரணம் மற்றும் கா.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் அவர்களுக்கு தேவையான கற்கைகள் நடைபெறுகின்றன.
இலங்கை தொலைக்காட்சி அலைவரிசையான நேத்ரா மற்றும் வசந்தம் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் குறிப்பிட்ட நாட்களில் ஒலிபரப்பாகுவதையும் அவதானிக்கலாம். இதனைத்தொடர்ந்து கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் online ஊடாக கற்பிப்பதற்கு மட்டக்களப்பு வலயக்கல்விபணிமனை உத்தேசித்துள்ளது.
சில இடங்களில் online exam நடைபெறுவதையும் அறியமுடிகின்றது. இதனைத்தொடர்ந்து புலனம் (whats app ) மூலம் பல குழுக்களை உருவாக்கி அதில் பலவிதமான கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அலகு ரீதியான செயலட்டைகள், பரீட்சை வினாத்தாள்கள் போன்றவை இதனூடாக வழங்கப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது. அத்துடன் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு அச்சிடப்பட்ட செயலட்டைகளும் மற்றும் மாதிரி வினாத்தாள்களும் இவற்றுக்கான விடைகளும் பாடசாலைகளுக்கூடாக வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
கொரோனாவால் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் மாணவர்கள் நேரலையில் கல்வி கற்க கல்வியமைச்சினால் முயற்சிகள் எடுத்து வரப்படுகின்றது. இதன் மூம் அனைத்து மாணவர்களும் தமக்கு தேவையான கல்வியை இணைய வசதிகள் மூலம் பெறுகின்றனர். இதனைத் தவிர தரம் 6,7,8,9,10 ஆகிய தரங்களில் கல்வி பயில்பவர்களுக்கும் வசந்தம், படகு, மற்றும் நனச தொலைக்காட்சி மூலமும் வித்தியாதானம் செய்யப்பட்டு வருகின்றது.
இதே போன்று கல்வியமைச்சினால் ‘தக்சலாவ’ என்ற செயற்திட்டத்தின்கீழ் e-thaksalawa தரம் 1 தொடக்கம் 12மற்றும்13 வரையான வகுப்புக்களுக்கு கற்றல் செயற்பாடுகளும் நடைபெறுகின்றது.
எனவே பொதுவாக நோக்கினால் கொரோனாவின் கொடிய தாக்கத்தின் சூழ்நிலையிலும் எதோவொரு வகையில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்வியமைச்சினால் நடைமுறைகள் எடுக்கப்படுகின்றது. இவ்வகையான கற்றல் முறைகள் எல்லா மாணவர்களையும் சென்றடைந்து எல்லோரும் பயனடைய வேண்டும். என்பதே எல்லோருடைய அவாவாகும்.
நீ. கஜந்தினி
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.