கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது எனவும் இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
6 மாத காலத்திற்குள் உலகின் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசினால் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளரிகயுள்ளதுடன் 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு இன்னும் முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் எதிர்ப்புச்சக்தி பெருகினால் மட்டுமே பரவல் குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொரோனாவின் முதலாவது அலையினால் உலக நாடுகள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில் 2-வது அலையும் தாக்கும் என உலகளவில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த சமயத்தில் ஒரு முக்கிய ஆய்வை நடத்தி உள்ள இங்கிலாந்து விஞ்ஞானிகள் மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை, பொதுமுடக்க காலத்தின் முககவச பயன்பாட்டுடன் இணைத்து, பல மாதிரிகளின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள், ரோயல் சொசைட்டி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளான செயல்திறனுடன் வீட்டில் சாதாரணமாக தயாரித்து பயன்படுத்தக்கூடிய முக கவசங்கள் கூட, கொரோனா வைரஸ் தொற்று பரவலை அதிரடியாக குறைக்கும்.
நமக்கு கொரோனா வைரஸ் தொற்றோ, தொற்றுக்கான அறிகுறிகளோ இருக்கிறதா, இல்லையா என்பதை பார்க்காமல், பெரும்பாலானவர்கள் முக கவசங்களை அணிந்து வாழ பழகி விட வேண்டும். இப்படி செய்கிறபோது, கொரோனா வைரஸ் பரவலை வியக்கத்தக்க அளவுக்கு குறைக்க முடியும்.
நாங்கள் நடத்திய பகுப்பாய்வானது, உடனடியாக உலகமெங்கும் அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்பதை ஆதரிக்கின்றன. மேலும், பொதுமக்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்து கொண்டு, தனி மனித இடைவெளியை பராமரித்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இது கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிர்வகிப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வழியை வழங்கலாம். பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாகவே இது தடுப்பூசி போல வேலை செய்யும் என ஆய்வுக்கு தலைமை தாங்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரிச்சர்ட் ஸ்டட்புரோம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கொரோனா அறிகுறிகள் தோன்றிய பின்னர் மட்டுமே முக கவசங்கள் அணிவதைவிட, எப்போதெல்லாம் வீடுகளை விட்டு வெளியே வருகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் முக கவசங்கள் அணிந்து இருக்க வேண்டும். இது அவர்களுக்கு கொரோனா ஆபத்தை இரு மடங்கு குறைக்கிறது.
50 சதவீதமோ அதற்கு மேற்பட்டவர்களோ முக கவசங்களை அணிகிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை குறைக்கிறது. எதிர்கால அலைகளை தட்டையாக்குகிறது. குறைவான கட்டுப்பாடுகளுடனான பொது முடக்கத்தை அனுமதிக்கிறது.
பொதுவில் இருக்கும்போது அதிகமான மக்கள் முக கவசங்களை ஏற்றுக்கொண்டபோது, வைரஸ் பரவல் மேலும் குறைந்தது.
ஊரடங்கு இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி 100 சதவீத மக்களும் முக கவசங்களை எப்போதும் அணிந்து கொள்கிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும். தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையான 18 மாதங்களுக்கு மேலும் அதிகமாக கொரோனா மீண்டும் எழுவதை தடுக்கும்.
அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்ற கொள்கையானது, கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலைகளை தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா #2வதுஅலை #தடுக்க #முககவசம்