இலங்கை பிரதான செய்திகள்

யாழில்.கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் ?

யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் , தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை காவல் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

யாழ்.சுன்னாகம் பகுதியை சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில் தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்கள் பழக்கத்தின் பின் நால்வரும் சந்திப்பதற்கு விரும்பியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 8ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து பெண்கள் இருவரும் யாழ்.நகருக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து கொடிகாமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளனர். கொடிகாம பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்களும் அவர்களுக்காக காத்திருந்து , இரு பெண்களும் பேருந்தால் இறங்கியவுடன் அவர்களை தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் பருத்தித்துறை வீதியூடாக வரணி மாசார் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் நான்கு பேரும் அங்கு இருந்த வேளை அப்பகுதிக்கு வந்த மேலும் சில இளைஞர்கள் இரு பெண்களிடமும் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளை அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி  வீதிக்கு வந்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் கொடிகாமம் காவல் நிலையத்திற்கு சென்று , இளைஞர்கள் குழு ஒன்று தம்மை கடத்தி செல்ல முற்பட்டதாகவும் , அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடி வந்துள்ளதாகவும் , தனது நண்பியையும் , நண்பர்களான இரு இளைஞர்களையும் காப்பற்றுமாறும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் கொடிகாம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை , சம்பவம் இடம்பெற்றது பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தமையால் , பருத்தித்துறை காவல்துறையினருக்கு அறிவித்து இரண்டு காவல்துறை பிரிவினரும் அன்றைய தினம் (8ஆம் திகதி) கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணையும் , பெண்களுடன் சென்ற இரு ஆண்களையும் தேடினார்கள்.
அந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அன்றைய தினம் மாலையே வீடு திரும்பியுள்ளார். அதனை அறிந்து கொண்ட பருத்தித்துறை காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வாக்கு மூலம் அளிக்க வருமாறு கேட்டனர். அதற்கு குறித்த பெண் நான்கு நாட்களாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை காவல்நிலையத்திற்கு சென்று வாக்கு மூலம் அளித்தார்.
குறித்த வாக்கு மூலத்தில் , தொலைபேசி ஊடாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் , இரு இளைஞர்களையும் தானும் தனது நண்பியும் சந்திக்க சென்றோம். அப்போது அவர்கள் தம்மை வரணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.அங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்ட வேளையே நண்பி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். என்னால் தப்பி செல்ல முடியவில்லை.
நாம் நம்பி சென்ற இளைஞர்களும் அவர்களின் நண்பர்களான ஏனைய இளைஞர்களுமாக மூன்று பேர் என்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் அங்கிருந்து என்னை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார்கள் என வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , அந்த இளைஞர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தொலைபேசி ஊடான பழக்கம் மாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார். அதனால் அவர்களின் தொலைபேசி இலக்கத்தினை கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.   #கடத்திசெல்லப்பட்ட  #வன்புணர்வு  #இளைஞர்கள் #தொலைபேசி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.