வீரமுனை, புத்துணர்வூட்டும் அழகிய பெயர் கொண்ட பழந்தமிழ்க் கிராமம். பாரம்பரிய வாழ்வியலின் களஞ்சியமாக விளங்கிய வளமான கிராமம். சாதி, சமூகம் சார்ந்து பாகுபாடுகள் கொண்டும்; அவை கடந்தும் உறவுகள் ஊடாட்டங்கள் நிறைந்தும் மனிதர் வாழ்ந்து வந்த கிராமம்.
போரும் இடப்பெயர்வும்; போருக்குப் பின்னரான நிலமைகளும் வீரமுனைக்கும் விதிவிலக்கானதாக இருக்கவில்லை. சமூகங்களின் பெயரால் மனிதர்கள் பிரிக்கப்பட்டனர். இயல்புநிலை அழிந்து வாழ்வியலை சிதைத்து மனிதரைச் சிதைத்தும் சிதறுண்டு போகவும் வைத்தது போர். இன உரிமைக்கானதாக நாட்டின் பாதுபாப்பிற்கான போர் உள்ளூர் உற்பத்திகளில் இருந்து விடுபட்டுப் போகவும் உள்ளூர்ச் சமூகங்களுக்கிடையில் வார்ந்து வளர்க்கப்பட்ட வெறுப்புணர்வு சகசமூகங்களது உற்பத்திகளை வாங்குவதைத் தவிர்த்து விடவும்; இளம் மனித வளங்களின் உயிர் சிதைப்பிற்கும் உடல், உளச் சிதைப்பிற்கும் உள்ளாக்கி தேசம் முழுமையையும் முற்றுமுழுதான சமூகப் பண்பாட்டுப் பொருளாதார அடிமைத்தனத்துள் ஆழ்த்திவிடப்பட்டிருக்கிறது.
சிறுபராயத்து ‘தனிவிறகு-கட்டுவிறகு’ கதையை மறந்து அரசியல் சாணக்கியத்தாலும் சாக்கடைத்தனத்தாலும் ஒரு பகுதியினர் மீது மறுபகுதியினர் வெற்றி கொள்வதற்கான கீழான வழிமுறைகளில் இருந்து இன்னமும் மீளமுடியாத உறுதியான நிலமையே போருக்குப் பின்னரான காலத்திலும் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது.
சமூக நல்லிணக்கம், இனநல்லிணக்கம் என்பவை ‘பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை’ என்பதாகவே இருந்து வருகின்றது. எனினும் நடைமுறை வெறுப்புணர்வுகளை வளர்த்தலின் விளைநிலங்களாகவே காணப்படுகின்றன. சமூகங்கள் ஒவ்வோன்றும் மற்றவையுடன் தொடர்பறுத்து, தனித்தவையாக வாழ்தலும் வளர்தலும் பாதுகாப்பென நினைவுறுத்தப்பட்டு வருவது நச்சாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.
இதன் விளைவாக உள்ளூர் உற்பத்திகள் அற்றுப்போய் புற்றீசலாகக் கிளம்பும் பல்பொருள் அங்காடி பல்தேசிய நிறுவனங்களது பண்டங்கள் நிறைந்து பாவனையில் புளங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பண்டங்களில் பெருமை பேசும் பெருங்கூலி பெற்ற நட்சத்திரங்கள் வெகுசன ஊடகங்கள் வழியாக மக்களின் மூளையுள் பொய்களைத் திணிக்கும் கருவிகளாகப் பாவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வெகுசன ஊடகங்க வழி நட்சத்திரங்கள் எனப் போலியான ஆளுமைகள் உற்பத்தி செய்யப்பட்டு வானலை வழி வீடுகளுள் நுழைக்கப்பட்டு புத்தியை சிதைக்கும் வேலைகள் மிகவும் திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பெருமையுடன் ஏற்றுக் கொண்டாடப்பட்டு வருகின்ற நவீன கல்வி என்று சொல்லப்படுகின்ற காலனியக் கல்வியானது நவகாலனியக் கல்வியாக புத்துருவாகிக் கொண்டு எங்களை நாங்கள் கண்டடைய முடியாத வகையிலான வேலையை மிகவும் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது.
பகலில் கல்வியும் தொழிலும் இரவில் தொலைக்காட்சியும் Àக்கமும் இரவிலும் பகலிலும் நோண்டி நொங்கெடுக்கும் கைத்தொலைபேசிகளும் பண்பலை வானொலிகளும் பராமரிக்க சர்வதேச சமூகம் என்றழைக்கப்பட்டு ஒரு சில நாடுகளிடம் தலைவிதியை ஒப்புக்கொடுத்துவிட்டு அதிவேக சாலைகளில் புதுவேக வாகனங்களில் விரைந்து வளர்த்துக் கொண்டிருக்கும் அபிவிருத்தி பொதுவியான வாழ்வு வெற்றிகரமானதும் வரவேற்பிற்குரியதும் பெருமிதத்திற்கு உரியதாகவும் உருக்கொண்டதான வாழ்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆயினும் மனிதம் வளர்க்கும் ஆளுமைகள் இன்னமும் தனியாட்களாக, சிறுகுழுக்களாக, அமைப்புக்களாக உள்ளூர்களிலும் உலகெங்கிலும் இந்த நிலமைகளை மாற்றி மீளவும் மனிதரையும் மனிதர் வாழும் உலகங்களையும் மீட்டெடுக்கும் பசுமைப் பயணத்தில் வலுவாக இயங்கிவருவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது.
இந்தப் புள்ளியில் உடனடியாக நினைவுக்குரியதாக இருப்பவர் வீரமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பின் சமூகப் பண்பாட்டு ஆளுமையான ஆனந்தன் அவர்கள். சமூகப் புலமையாளரும் செயற்பாட்டாளருமான ஆனந்தன் அவர்கள் சாதிகள் சமூகங்களூடு தடையின்றிப் பயணிக்கும் இயல்பு பெற்றிருந்தவர். இந்த இயல்பை வளர்க்கும் சூழல்களே எல்லோரதும் விடுதலைக்கான அறிவுக் கூடங்கள்.
இந்த வகையிலான ஆளுமைகளது இருப்பும் இயங்குதலும் பரவலாகக் காணப்படினும் கல்வியிலும் வெகுசன ஊடகங்களிலும் இவை மிகவும் கவனமாகவே தவிர்க்கப்படுபவை. நவகாலனிய அறிவாகப் புதுப்பித்துக் கொண்டுள்ள புதிய நவீன அறிவு என்ற பிரபல்யப் பெயர் கொண்ட நவகாலனிய அறிவு அந்தவகையிலேயே எங்களது நிலமைகளைத் தகவமைத்து வைத்திருக்கின்றது.
சக சமூகங்களுடன் ஒத்திசைந்து ஆதிக்க நீக்கம் பெற்ற வாழ்வு பற்றிச் சிந்திப்பதும் பேசுவதுமே சமூக சமய குற்றமாகவும், துரோகமாகவும் அச்சுறுத்தப்படுவது இயல்பு வாழ்க்கையாகி இருக்கின்றது. இத்தகையதொரு பின்னனியில் ஜலீல் ஜீ அவர்களுடைய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்குமாகாணத்தினால் வெளியிடப்பட்ட, வீரமுனை பதியின் கூத்துக் கலை பற்றிய திறனாய்வு என்ற Áல் மிகுந்த கவனம் பெறுகின்றது. ஜலீல் ஜீ போன்ற இளம் ஆளுமைகளது இத்தகைய அறிவும் உணர்வும் இழக்கப்பட முடியாத பெரும் செல்வம். முன்னமொரு காலத்தில் இப்பெரும் பண்பு இருந்ததென நம்பமறுக்கும் எதிர் காலத்தை விளைவிக்கும் சூழலில் இன்னமும் வலிதாகவே இருந்து வருகின்றது. இந்த மேன்மைப் பண்பு என்று கூறுகின்ற அறிவுச் செயற்பாடு ஜலீல் ஜீ உடையது.
சமூகங்கள் இணைந்து வாழ்வதற்கும் வளர்வதற்குமான வெளிகள் இன்று மிகவும் குறைந்தளவிலானதாகவே இருந்து வருகின்றது. அத்தகைய அருந்தலான வெளிளையும் அற்றுப் போகச் செய்து அக்கம் பக்கங்களில் அன்னியர்களாகவும்; வெறுப்பிற்கும் விரோதத்திற்கும் உரியவர்களாகவும் வாழும் வகை செய்வது மிகப் பெரும்பாலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய நிலைமைகளில் இருந்து விடுபட்டு இலங்கைத் தீவில் வாழ்ந்துவரும் எல்லா மனிதர்களும் தங்கள் தங்களுக்குரிய பண்பாட்டு மரபுரிமைகளைக் கொண்டாடுவதற்கும்; சக மனிதர்களது பண்பாட்டு மரபுரிமைகளை மதிக்கும், மகிழ்ந்து வரவேற்கும் சமூகப் பண்பாட்டுருவாக்கம் நிகழ்வது இலங்கைத் தீவின் ஆரோக்கியமான இருப்பிற்கான ஒரேவழி முறையாகும்.
அத்தகையதான பயணத்தில் இலங்கைத் தீவு முழுவதும் சாதி, பால், இனம் இன்னபிற என ஊடறுத்து இயங்கிக் கொண்டிருக்கும் மனிதம் வளர்க்;கும் மனிதச் செயற்பாடுகள் அறிதலுக்கும் கொண்டாடுதலுக்கும் வலுப்படுத்தலுக்கும் உரியவை. இந்த வகைச் சமூகத்தின் பெருக்கம் இலங்கைத் தீவை மகிழ்விக்கும், மீள்விக்கும்
‘ மனிதர்களை மனிதர் கொல்லும்
வாழ்க்கை தன்னை வெற்றியென்றோம்
மனிதருடன் மனிதர் வாழும்
வாழ்க்கையல்லோ வெற்றிளாகும்.’
( கூத்து மீளுருவாக்க பாடல்)
தங்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை முக்கியத்துவப்படுத்திக் கொண்டும் புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டும், தங்கள் தங்கள் வரலாற்று தடங்களை தேடிக் கண்டுபிடித்துக் கொண்டும், புதிது புதிதாக உற்பத்தி செய்து கொண்டும்;;; மற்ரையவர்களுடையவற்றை உருமறைப்புச் செய்து கொண்டும் இல்லாதொழித்துக் கொண்டும் மௌனப் போர் நிகழும் அச்சம் கலந்த சந்தேகப் பெரும் சூழலில் ஜலீல் ஜீ உடைய பயணம் காட்டாற்று வெள்ளத்தை எதிர்கொள்ளும் நீச்சல்தான். ‘ எங்களுடைய விடையத்தில் அவரேன் தலையிடுகின்றார்?’ ‘ அவர்களுடைய விடையத்தை இவரேன் துக்கிப்பிடிக்கிறார்’, ‘இதற்குப் பின்னாலுள்ள அரசியல் எதுவாக இருக்கும்?!’ போன்ற சந்தேகத் துருவல்கள் மலிந்த சூழலில் முன்னைக் காலத்தின் ஆபூர்வமான அறிவுப் பண்பாட்டின் தொடர்ச்சியாக ஜலீஸ் மிளிர்கின்றார்.
காலனிய நலீன அறிவு பாமரர்களாக அடையாளப்படுத்திய உள்ளூர் அறிவுத் திறன் கொண்ட ஆளுமைகள் உயிர் வாழும் அறிவுக் களஞ்சியங்கள். அத்தகைய அறிவுக் களஞ்சியங்களுடன் உரையாடி வீரமுனை பதியின் கூத்துக் கலை பற்றிய திறனாய்வு Áலினை ஜலீல் ஜீ வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.
பண்பாட்டுப் பாரம்பரியங்கள் நிறைந்த வீரமுனைக் கிராமம் மீண்டும் புதுப்பொலிவு பெற்று ஒற்றுமையுடன் சக சமூகங்களுடனான உறவும் ஊடாட்டத்துடனும் வாழவிருப்பப்படும் ஆதங்கம் ஜலீல் ஜீ உடையது. இதில் இழையோடும் ஜலீல் ஜீ உடைய அறிவூட்டமும் உணர்வோட்டமும் மதிக்கப்படுவதற்கும் கொண்டாடப்படுவதற்கும் உரியவை.
கூத்துக் கலை சார்ந்து மட்டுமல்ல மற்றபிற உள்ளூர் அறிவுசார்ந்து வெளிக்கொண்டுவர வேண்டிய பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. இவை அணுகப்பட்டு ஆராயப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட வேண்டியவை. இவை, காலனிய நீக்கம் பெற்ற விடுதலை வாழ்வை உருவாக்குவதன் அடிப்படைகள்.
கலாநிதி.சி.ஜெயசங்கர்