Home இலங்கை பேசப்படவேண்டிய பாரம்பரிய மருத்துவிச்சி சேவை.- நிறோஷினிதேவி.ம

பேசப்படவேண்டிய பாரம்பரிய மருத்துவிச்சி சேவை.- நிறோஷினிதேவி.ம

by admin


வாழ்க்கையின் ஓட்டத்தோடு கலந்துவிட்ட இன்றைய சமூகம் தற்காலத்தில் அருகிப்போயிருக்கும் பிள்ளைப்பேற்று மருத்துவிச்சிமாரினது சேவை பற்றிப் பேசுவது இன்றைய ஓட்டத்தில் ஒரு பொருத்தமில்லாத விடயமாகக் கருதக்கூடும். ஆயினும் பிள்ளைப்பேற்று மருத்துவிச்சிமாரினது சேவையும், அறிவும், திறனும் இன்றைய காலத்திலாவது பேசப்படவேண்டிய பேசாப்பொருளகக் காணப்படுகிறது. இதற்கான வாய்ப்பை கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற 2012 ம் ஆண்டிற்கான இலக்கிய விழா ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு இடம்பெற்ற இந்த இலக்கிய விழாவில் மிகவும் திறமை வாய்ந்த இரு மருத்துவிச்சிமார்: திருமதி கண்ணகை மற்றும் திருமதி மாணிக்கம் அழகிப்போடி ஆகியோர் கலந்துகொண்டு தமது அனுபவம் மற்றும் திறன்கள் குறித்தும் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலினை சட்ட நிபுணரதும், மகப்பேற்று வைத்திய நிபுணரதும் பங்குபற்றல் மேலும் வலுவூட்டியது.

மருத்துவிச்சி எனும் பதமானது ஆரம்ப காலங்களில் ஒரு அர்த்தத்திலும் , இன்று ஒரு அர்த்தத்திலும் பார்க்கப்படுகின்றது. அன்றைய கால மருத்திவிச்சிமார் குழந்தைகளைப் பிரசவிக்கச் செய்பவர்களாக பெரும்பாலும் தற்காலத்தில் ஒரு மகப்Nபுற்று வைத்தியர் செய்யும் பிரதான Nலையை திறம்பட செய்யும் பெண்களாக விளங்கியுள்ளனர். ஆயினும் இன்றைய அரiசாங்கத்தால்அங்கரிக்கப்பட்ட மருத்துவிச்சிமார் குழந்தைப்பேறு பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குபவர்களாகவும், மாதாந்தம் கர்ப்பினித் தாய்மார்களை பரிசோதனை செய்பவர்களாகவும், குழந்தையைப் பிரசவிக்கும்போது வைத்தியர்களுக்கு உதவுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களுக்கு மூன்று வருடங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னரே மருத்துவிச்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும். ஆனால் அன்றைய மருத்துவிச்சிமார் இன்றைய குழந்தைப்பேறு வைத்தியர்களாகவே செயற்பட்டுள்ளனர். அதாவது அன்றைய காலத்தில் குழந்தைகளைப் பிரசவிக்கச் செய்யும் வைத்தியர்கள் இம்மருத்துவிச்சிமாரே. இவர்களுக்கு குழந்தையினை தாயினுடைய வயிற்றில் இருந்து எவ்வாறு வெளியில் எடுப்பது என்பதற்கு பயிற்சிகளோ, புத்தகப் படிப்போ வழங்கப்பட்டதில்லை. இது சம்பந்தமாக அவர்களிடம் கேட்டால் குழந்தையைப் பிரசவிப்பது தங்களுக்கு கடவுளால் கிடைத்த அருள் எனக் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கில மருத்துவ வசதியோ, வைத்தியசாலை வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லாத காலகட்டங்களில் இவர்கள்; ஆற்றிய பணிகள் அளப்பரியது. அந்தவகையில் ஆரம்பகாலகட்டங்களில் ஒரு பெண் கருவுற்றதும் அதனை உறுதிப்படுத்துபவர்களாக மருத்திவிச்சிமாரே இருந்துள்ளனர். கருவுற்றிருக்கும்போது கர்ப்பினித்தாய்மார் உண்ணவேண்டிய உணவுகள், தவிர்க்கவேண்டிய உணவுகள் முதலியவை பற்றிக் கூறுபவர்களாகவும் இருந்துள்ளனர். இன்று கர்ப்பினித்தாய்மாருக்கு போலிக் அசிட், கல்சியம், அயன் போன்ற மாத்திரைகள் குழந்தை உருவாகியதை உறுதிப்படத்தியதுடன் வழங்கப்படுகின்றன. ஆனால் அன்று உணவுகளுக்கூடாகவே இச்சத்துக்கள் கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கப்பட்டுள்ளன. பச்சை மரக்கறிகள், கீரை வகைகள், பால், முட்டை, மீன், இறைச்சி, தானியங்கள், பழங்கள் முதலியவற்றை உண்டாலே தாய்க்கும், சேய்க்கும் போதுமான சத்துக்கள் கிடைத்துள்ளன என்பதை இந்நிகழ்வில் கலந்துகொண்ட மருத்துவிச்சிமார்உறுதிபடத் தெரிவித்தனர்.

அன்று மாதாந்த பரிசோதனை இருந்ததில்லை. கர்ப்பினித்தாய்மார் தங்களுக்கு ஏதும் சந்தேகம் ஏற்பட்டால், தங்களுக்கு உடலில் ஏதும் வலிகள் ஏற்பட்டால் மாத்திரமே மருத்துவிச்சிமாரை நாடிச்செல்வர். சில சந்தர்ப்பங்களில் மருத்துவிச்சிமார் கர்ப்பினித் தாய்மாரின் விட்டிற்கு சென்று அவர்களைப் பார்வையிடுவதும் உண்டு. இவர்களுக்கு வாயு, வலிகள் ஏற்பட்டால் ஊறல் போட்டுக் கொடுக்கும் வழமை அன்றைய மருத்துவிச்சிமாரிடம் இருந்துள்ளது. இதற்காக எந்த மாத்திரைகளும் அன்று அவர்களால் வழங்கப்படவில்லை.

மேலும் எத்தினத்தில் குழந்தை பிறக்கும் என்பதனை முன்கூட்டியே கூறும் ஆற்றலும் இம்மருத்துவிச்சிமாருக்கு இருந்துள்ளது என்பது இவர்களுடைய கலந்துரையாடலின் மூலம் தெரியக்கிடக்கின்றது. பெரும்பாலும் இவர்கள் சொன்ன தினங்களிலேயே குழந்தைகள் பிறந்துள்ளமையைஇம் மருத்துவிச்சிமார் சில உதாரணங்கள் மூலம் தெரியப்படுத்தினர். அத்துடன் குழந்தை ஆரேக்கியமாக உள்ளதா?, ஒரு குழந்தையா? அல்லது இரட்டைக் குழந்தையா? என்பவற்றை கண்டறிந்து சொல்லும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இவர்கள் விளங்கியுள்ளனர். இன்று குழந்தையின் துடிப்பு வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை என்பவற்றை அறிவதற்கு பல தொழிநுட்ப முறைகள் காணப்படுகின்றன. ஆனால் அன்று மருத்துவிச்சிமார் தங்கள் கைகளை கர்ப்பினித்தாயின் வயிற்றில் வைத்துப் பார்ப்பதன் மூலமே இவற்றைக் கண்டறிந்து சொல்லியுள்ளனர்.

மருத்துவிச்சிமார் பிரசவம் பார்க்கும் முறையினை எடுத்து நோக்கினால் இவர்கள் பிரசவம் பார்ப்பதற்காக பெரிய உபகரணங்களைப் பயன்படுத்தியதாக இல்லை. கத்திரிக்கோல், துணி தைப்பதற்குப் பயன்படுத்தும் நூல், சுத்தமான பழந்துணிகள் முதலியவற்றையே பயன்படுத்தியுள்ளனர். பிரசவம் பார்ப்பதற்கு முன் நான்கு அல்லது ஐந்து பட்டாக மடித்த நூலினையும், கத்திரிக்கோலையும் கிருமி நீக்கம் செய்வதற்காக சுடுநீரில் போட்டுக் கழுவி எடுப்பர். கர்ப்;பினித்தாய்க்கு வயிற்றில் நோவு எடுத்தவுடன் அத்தாய் குழந்தையினை வெளியே வரப்பண்ணுவதற்க இயலுமானவரை முக்குதல் வேண்டும். அவ்வேளையில் மருத்துவிச்சி பிரசவத்தினை இலகுபடுத்தும் நோக்கில் கர்ப்பினித்தாயின் வயிற்றை மெதுவாக அழுத்தி குழந்தையினை வெளியில் கொண்டுவருவதற்கு உதவுவார். குழந்தை வெளியில் வந்தவுடன் தாயையும் குழந்தையையும் இணைத்துள்ள மாக்கொடியினை சுடுநீரில் கழுவிய நூலினால் கட்டிய பின்னர் கத்திரிக்கோலினால் மாக்கொடியினை வெட்டி அகற்றிவிடுவர். பின்னர் குழந்தையைக் கழுவி தாயிடம் ஒப்படைத்துவிடுவர். இவ்வாறே மருத்துவிச்சிமார் பிரசவம் பார்த்துள்ளனர். அன்று அறுவைச் சிகிச்சை முறைமையோ, தையலோ இருந்ததில்லை. எல்லாப் பிரசவங்களும் சாதாரனமாகவே இடம்பெற்றுள்ளது. தாயும் சேயும் நலமுடனே இருந்துள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் குழந்தை வயிற்றிலிருக்கும்போது இறக்கும்பட்சத்தில் தாய்க்கு எந்தவித ஆபத்தும் வராமல் குழந்தையினை தாயின் வயிற்றிலிருந்து பிரசவிக்கச் செய்த வரலாறும் உண்டு. (தகவல் – மாணிக்கம் அழகிப்போடி) குழந்தையின் தலை முதலில் வருவதற்கு பதிலாக கால் முதலில் வரும் நிலையில் அக்குழந்தையினை சுகமாகப் பிரசவிக்கச் செய்த சந்தர்ப்பங்களும் உண்டு. சில மருத்துவிச்சிமார் முதலில் குழந்தையின் கால் வரும் பட்சத்தில் ஒரு பொல்லால் குழந்தையின் தலை முதலில் வரும் வகையில் பிரசவம் பார்த்தவர்களும் உண்டு. (தகவல் – த. சோதிமுத்து)

இவ்வாறாக தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவித ஆபத்துமின்றி பிரசவம் பார்த்த மருத்துவிச்சிமாருக்கு சமூகத்தினால், சட்டத்தினால் எந்தளவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என நோக்கினால் எந்தவித வசதியுமில்லாத காலத்தில் மருத்துவிச்சிமாரது சேவை எமது சமூகத்தினருக்குத் தேவைப்பட்டது. ஆனால் நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட நவீன மருத்துவத்தினால் ஈர்க்கப்பட்ட மக்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைக் கருத்தில்கொள்ளாமல் அதனையே விரும்பி நாடிச்செல்கின்றனர். எந்வித கருவிகளையும் கையாளாமல் பிரசவம் பார்த்த காலகட்டமும் உண்டு. ஆனால் இன்றைய காலத்தில் எத்தனை வகையான தெழிநுட்பக் கருவிகள், எத்தனை விதமான பரிசோதனைகள், எத்தனை விதமான மாத்திரைகள் கர்ப்பினித்தாய்மார் மீது திணிக்கப்படுகின்றன. இவ்வாறு திணிக்கப்படும் விடயங்கள் பிறக்கும் குழந்தையினை எந்தளவிற்குப் பாதிக்கும் என்பது எவராலும் கருத்தில்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக யுத்தச் சூழலில் இவர்களது சேவையினூடே மனிதகுல விருத்தி அல்லது தொடரச்சி பேணப்பட்டிருக்கின்றது என்பது சில மருத்துவிச்சிமாருடனான கலந்துரையாடலின் மூலம் அறியக்கிடைக்கின்றது. குறிப்பாக யுத்தகாலத்தில் மட்டக்களப்பில் ஏற்பட்ட நடமாட்ட நெருக்கடி காரணமாக பெரும்பாலான குழந்தைகள்வீடுகளிலேயே பிறந்துள்ளன. இவ்வாறு வீடுகளிலே பிறந்த குழந்தைகள் யாவும் எமது பாரம்பரீய மகப்பேற்று வைத்தியர்களான மருத்துவிச்சிமாரினாலேயே பிரசவிக்க வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சட்ட ரீதியாக நோக்கினால் நவீன மருத்துவத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் எமது பாரம்பரிய மருத்துவிச்சிமாருக்கு வழங்கப்படவில்லை. நவீன மருத்துவம் விஞ்ஞான பூர்வமானது, காரணகாரிய ரீதியில் நிரூபிக்கக்கூடியது. ஆனால் பாரம்பரிய மருத்துவம் விஞ்ஞானபூர்வமற்றது. நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுவது என்பதனால் இப்பாரம்பரிய மருத்துவத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கமுடியாது எனக்குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் நவீன மருத்துவத்தில் ஒரு குழந்தையினை பிரசவிக்கச் செய்யும்பொழுது அங்கு வைத்தியர்கள் , நவீன மருத்துவிச்சமார் எனப்பலர் பங்கெடுப்பர். ஆனால் பாரம்பரிய முறையில் தனியNனு மருத்துவிச்சி மாத்திரமே பங்கெடுப்பார். எனவே இங்க தவறுகள் ஏற்படுமிடத்து பொறுப்புக்கூறக்கூடிய சாத்தியப்பாடுகள் மிகக் குறைவு என வாதிடப்படுகின்றது.

எனவே இவற்றை அடிப்பரடையாக வைத்துப் பார்க்கும்போது எந்தவித தீங்கும் விளைவிக்காத மருத்துவிச்சிமாரது சேவை அளப்பரியது. இன்றைய சமூகத்திற்கு தேவையானது. இவர்களினுடைய அறிவு பகிர்ந்தளிக்கப்படவேண்டியது. அவர்களுக்கு சமூகத்தினாலும் சட்டத்தினாலும் அங்கீகாரம் வழங்கப்படுமிடத்து அவர்களது சேவை மீண்டும் தொடரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் துரதிஸ்டவசமாக இப்போதைய மருத்துவிச்சிமாருக்குப் பின்னர் இச்சேவையைத் தொடர அடுத்த சந்ததிகள் உருவாக்கப்படவில்லை. இது வேதனைக்கும் கவலைக்கும் உரிய விடயமாகும். ஏனெனில் எம்மிடமிருந்த முக்கியமான அறிவை நாம் இழக்கப்போகும் இறுதிக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். ஆகவே இம்மருத்திவிச்சிமாருக்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களது அறிவையும் , திறனையும் அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

நிறோஷினிதேவி.ம

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More