(க.கிஷாந்தன்)
“தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. அமைச்சுப் பதவிகளை வகித்து அரசாங்கத்துடன் இருந்தவர்களால் கூட செய்ய முடியாமல் போன பல விடயங்களை எமது கூட்டணி செய்து முடித்துள்ளது. எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை வாக்களிப்பு மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டன் காசல்ரீ விருந்தகத்தில் இடம்பெற்ற மக்களுடான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்களான பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார், கூட்டணி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்ததாவது,
2015 இல் நாம் ஆட்சியில் இருந்தே தேர்தலை சந்தித்தோம். தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரசாரத்துக்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, உரிய வகையில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
நாம் தற்போது யானை கூட்டணியில் இல்லை. இருந்தும் மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்கள் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த யுகம் மலையேறிவிட்டது. கடந்த காலங்களில் எமது மக்கள் அன்னத்துக்கு வாக்களிக்கவில்லையா? எமது மக்கள் யானையை மறந்து விட்டனர். தொலைபேசி சின்னத்திலேயே நாம் போட்டியிடுகின்றோம்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் அணியினர் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருப்பார். இழுபறி நிலை தொடர்ந்ததாலேயே வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒப்புதலுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.
எனினும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான சூழ்நிலை எமக்கு உருவாகியுள்ளது. அதில் மலையக மக்களின் பங்களிப்பும் மிக முக்கியம். எனவே, வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” – என்றார். #ராதாகிருஷ்ணன் #ரணில் #சஜித் #வெற்றி