(க.கிஷாந்தன்)
அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது எனவும், இதன் பின்னணியில் அரசியல்வாதியொருவர் செயற்படுகிறார் எனவும் சுட்டிக்காட்டி, தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தி ஹட்டன், புளியாவத்தை நகரில் இன்று (19.08.2020) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
பாத்போர்ட், புளியாவத்தை கீழ்பிரிவு, புளியாவத்தை மேல்பிரிவு, பிலிங்பொனி, இஞ்சஸ்ரி கீழ் பிரிவு, இஞ்சஸ்ரி மேல் பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மேற்படி தோட்டங்களிலுள்ளவர்களுக்கு முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள போதிலும் இரண்டாம் கட்ட கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை. அந்த கொடுப்பனவு இம்மாதம் 18, 19 ஆம் திகதிகளில் அதாவது நேற்றும் இன்றும் வழங்கப்படும் என அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கொடுப்பனவை பெறுவதற்கு பயனாளர்கள் புளியாவத்தை நகர மண்டபத்துக்கு வந்தனர். ஆனால், வழங்கப்படவில்லை.
” ரவீந்திரன் என்ற அரசியல்வாதியே இதனை தடுத்துநிறுத்தியுள்ளார். சமுர்த்தி அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்படும் வாழ்வாதார கொடுப்பனவையும் அவர் அரசியல் மயப்படுத்திவிட்டார். அவரின் இந்த செயலை கண்டிக்கின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எமக்கு நீதியை வழங்கவேண்டும்.” – என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து வெளியிட்டனர்.
இது தொடர்பில் ரவீந்திரனிடம் வினவியபோது,
” 5 ஆயிரம் கொடுப்பனவுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், கொடுப்பனவு முறை தொடர்பில் என்னிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, தொழிற்சங்க தலைவர் ஒருவர் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அரச ஊழியர் ஒருவர் இந்த கொடுப்பனவை எப்படி அரசியல் மயப்படுத்தலாம், ஒரு சங்கத்துக்கு சார்பாக செயற்படலாம்.
இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த குறைகளையே நான் சுட்டிக்காட்டியுள்ளேன். பிரதேச செயலகத்திடம் முறையிட்டிருந்தேன். நேற்று உரிய வகையில் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இந்நிலையில் அது தொடர்பில் தவறான கருத்தை உருவாக்கி, எனக்கு எதிராக சேறுபூசும் வகையிலேயே அரசியல் பின்னணியுடன் இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.” – என்று கூறினார். சமுர்த்தி அதிகாரியை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை.
அதேவேளை. கவனயீர்ப்பு பேராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர், உரிய வகையில் கொடுப்பனவு வழங்கப்படும் என உறுதி வழங்கியதையடுத்து மக்கள் கலைந்துசென்றனர். #கொடுப்பனவு இழுத்தடிப்பு கவனயீர்ப்பு