இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் தரிஷா பெஸ்டியான்ஸ்சின் மடிகணணியை உடனடியாக மீளக் கையளிக்குமாறு வலியுறுத்தியுள்ள சர்வதேச நிறுவனமொன்று, காவல்துறையினரின் துன்புறுத்தல்கள் இன்றி அறிக்கையிடுவதற்கு இடமளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
தரிஷா பஸ்டியான்ஸ் கடந்த நவம்பர் மாதம் இலங்கையை விட்டு வெளியேறியதை சுட்டிக்காட்டியுள்ள ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, அவருக்கு எதிராக முன்னெடுக்கும் பிரசாரங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த ஜுன் மாதம் 9 ஆம் திகதி மடிகணணி உட்பட ஏனைய உபரகணங்களை எடுத்துச் சென்றதன் மூலம் அவற்றில் உள்ளிட்ட தனிநபர்களின் தகவல்கள் உள்ளிட்ட தரவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன்ஸ் அஞ்சினார் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தரிஷா பெஸ்டியன்ஸ்சின் மடிகணணியை கையகப்படுத்தியமை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சி.பி.ஜே, தனது தகவல் மூலங்கள் இதன்மூலம் ஆபத்தை எதிர்நோக்கலாம் என அவர் கரிசனை கொண்டுள்ளார் என அமைப்பின் ஆசியாவிற்கான மூத்த ஆய்வாளர் அலியா இஃப்திக்கார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு எதிரான மிரட்டல் பிரசாரத்தை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இது பெஸ்டியன்ஸ்சின் விமர்சன அறிக்கைகளுக்கு எதிரான தெளிவான பதிலடி எனவும் அலியா இஃப்திகார் கூறியுள்ளார்.
சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் கானியா பரிஸ்டர் பிரான்ஸ்சிஸ், கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணையின் கீழ் ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியான்ஸ்சின் கணணி கையகப்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்ட தரிஷா பெஸ்டியன்ஸ்சின் மடி கணணியில் கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த 16 ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வறிக்கையில் பங்களித்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஊடகவியலாளர் தரிஷா பெஸ்ரியன்ஸ்சின் பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார் எனவும் சி.பீ.ஜே குறிப்பிட்டுள்ளது.
தரிஷா பெஸ்டியன்ஸ்சின் மடிகணணி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவை மின்னஞ்சல் ஊடாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்கவை வட்ஸ்அப் ஊடாகவும் தொடர்புகொண்ட போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என சி.பி.ஜே எனப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு கூறியுள்ளது. #தரிஷா #மடிகணணி #சர்வதேசம் #அழுத்தம் #குற்றப்புலனாய்வுபிரிவினர்