கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம்மிக்க புதிய கட்டத்தை, உலகம் எதிர்நோக்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில் உலக நாடுகள் முடக்கலைத் தளர்த்தியுள்ளதால், அபாய நிலை தோற்றம் பெற்றுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் 8.4 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 4,54,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு மில்லியன் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள பிரேஸில் இரண்டாவது நாடாக உள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஸிலில் 54,000 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக நான்காவது நாளாக 1200 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 14 ,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடுதழுவிய ரீதியில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,95,048 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2,13,831 பேர் குணமடைந்துள்ளதுடன், 1,68,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3,827 பேருக்கும், டெல்லியில் 3,137 பேருக்கும், தமிழகத்தில் 2,115 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மாத்திரம் 1,322 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். சீனாவில் மீண்டும் கொரோனா பரவி வருவதுடன், நேற்று மேலும் 27 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்று முன்தினம் 32 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.