Home இலங்கை காஞ்சிரமோட்டை கிராம மக்களின் மீள் குடியேற்றத்துக்கு வனவள திணைக்கள அதிகாரிகள் முட்டுக்கட்டை

காஞ்சிரமோட்டை கிராம மக்களின் மீள் குடியேற்றத்துக்கு வனவள திணைக்கள அதிகாரிகள் முட்டுக்கட்டை

by admin
காஞ்சிரமோட்டை கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவளத்திணைக்கள அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் அக்கூட்டணியின் வன்னிமாவட்ட தலைமை வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வனவள அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரமோட்டை மற்றும் நாவலர் கிராம மக்கள் அனைவரும் தாங்கள் மீளக்குடியமர வனவள அதிகாரிகள் தடையாக இருப்பதாக தெரிவித்து 21.06.20 முதல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
காஞ்சிரமோட்டை மற்றும் நாவலர் கிராமம் ஆகிய இரு கிராமங்களும்தமிழ் மக்கள் பூவீகமாக வாழ்ந்துவரும் கிராமமொன்றாகும். இக்கிராமத்தில் 1947ஆம் ஆண்டில் இருந்து அந்த மக்கள் அங்கு வசித்து வருகின்றார்கள்.
இப்பகுதி மக்கள் பல தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் அக் கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை.
குறிப்பாக, கைவிடப்பட்ட தமது காணிகளில் வாழ்வாதாரத்திற்காக பயிர் செய்கையில் ஈடுபடுவதற்கும் வனவள திணைக்கள அதிகாரிகள் தடைபோட்டு வருகின்றனர்.
அதுமட்டுமன்றி அவர்கள் தமது சொந்த நிலங்களில் வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் அம்மக்களை நிறுத்துவதற்கான முயற்சிகளை வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னெடுக்கின்றனர்.
மேலும் அக்கிராம மக்களுக்கான வீதி புனரமைப்பு மற்றும் கிராமத்துக்கான மின் இணைப்பு ஆகியவற்றை வனவள திணைக்களத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்தக் கிராம மக்களின் மீள் குடியேற்றத்தை வனவள துறையினர் தடுக்ககூடாது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வனவள திணைக்களம் தடுக்கிறது.
யுத்தகாலத்தில் பல இழப்புக்களை சந்தித்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறி தமது காணிகளில் பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கும் காணிகளை துப்பரவு செய்வதற்கும் அவர்களுக்கான வீதி புனரமைப்பு மற்றும் மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியிருக்கின்ற நிலையில் வனவள திணைக்களத்தினரின் இத்தகைய செயற்பாடுகள் மனிதாபிமானத்தினை குழிதோண்டி புதைத்து அதிகார மிலேச்சத்தனத்தினையே வெளிப்படுத்துவதாக உள்ளது.
ஆகவே அதிகாரிகளின் இவ்விதமான முறையற்ற நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உரிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோதும் அவை பராமுகமாக இருந்து வருவதால் ஜனாதிபதி உடனடியாக இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது. #காஞ்சிரமோட்டை #மீள்குடியேற்றம் #வனவளதிணைக்களம் #முட்டுக்கட்டை
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More