ரஸ்யாவின் அரசியலமைப்பை திருத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெருமளவில் ஆதரவு கிடைத்துள்ளதன் மூலம் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் 2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஸ்யாவில் நடைபெற்று முடிந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளில் இதுவரை 87 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
ரஸ்ய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் நீடிக்க முடியாது .ஏற்கனவே தொடர்ந்து இரு முறை ரஸ்யாவின் ஜனாதிபதியாக இருந்த விளாடிமிர் புட்டின் பிரதமராக இருந்த பின்பு மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.
அவரது இரண்டு பதவிக்காலங்களும் முடிவடைய உள்ளதால் 2024ஆம் ஆண்டில் அவரது பதவிக் காலம் முடிந்த பின்பு அவரால் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதனால் புதிதாக திருத்தப்படும் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தலில் வெல்லும்பட்சத்தில், ஆறு ஆண்டுகள் கொண்ட இரண்டு பதவி காலங்களுக்கு அவரால் ஜனாதிபதி பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது #ரஸ்யா #புட்டின் #ஜனாதிபதி #வாக்கெடுப்பு