178
வாள் வெட்டு வன்முறை கும்பல் தமது பதுங்குமிடமாக பயன்படுத்திய வீடொன்றில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது , கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்தனர்
யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மல்லாகத்தை சேர்ந்த ஐவர் நேற்றைய தினம் இரவு யாழ்ப்பாணகாவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , பிரதான சந்தேக நபரான மருதனார் மடத்தை சேர்ந்த ஜெகன் அல்லது கைலாயம் என்பவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் குறித்த வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
அதன் போது வீட்டினுள் இருந்தும் வீட்டின் பின் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் இருந்தும் கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் நீர்வேலி கரந்தன் பகுதியில் உள்ள குறித்த வீட்டினையே வாள் வெட்டுக்குழு தமது பதுங்குமிடமா கவும் , இங்கிருந்தே வாள் வெட்டுக்களை மேற்கொள்ள தயாராகி செல்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான “கனி குரூப்” எனும் வன்முறை கும்பலில் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த வீடு தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் #வன்முறைகும்பல் #கனிகுரூப் #கைக்குண்டு #வாள்கள் #இராணுவச்சீருடைகள்
Spread the love