யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல் போன்றவற்றை அந்தப் பகுதி இராணுவ அலுவலகர் முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இராணுவச் சிப்பாய்கள் கடமைக்கு அமர்த்தப்படுவர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட இராணுவ அலுவலகரின் பொறுப்புத் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவூட்டப்பட்டு வருகிறது.
கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், போதைப்பொருள் விற்பனை – கடத்தல் மற்றும் நுகர்வு உள்ளிட்டவை தொடர்பில் முதலில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அலுவலகருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர் ஊடாகவே காவற்துறையினருக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கில் சிவில் நிர்வாகக் கட்டமைப்பில் மீளவும் முற்றுமுழுதான இராணுவ தலையீடு முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.