Home இலங்கை இன்றைய சூழலில் ஏற்படுகின்ற மனச்சோர்வும், அதற்கான தீர்வு நிலைகளும். – பௌர்ஜா அன்ராசா..

இன்றைய சூழலில் ஏற்படுகின்ற மனச்சோர்வும், அதற்கான தீர்வு நிலைகளும். – பௌர்ஜா அன்ராசா..

by admin


இன்று எமது வாழ்க்கை சூழலில் மிகவும் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயமாக தற்கொலைகள் காணப்படுகின்றன. இது இன்றைய இடர்காலத்தில் மிக தீவிரமாக இடம்பெற்றுவருகின்ற ஒரு விடயமாகவும் காணப்பட்டு நிற்கின்றது. சமூகத்தின் உயர் மட்டம், கீழ் மட்டம் என்று என எல்லா அந்தஸ்திலும் ஏற்பட்டு நிற்கின்ற ஒரு பெரிய பிரச்சனையாகவே காணப்படுகின்றது. ஓவ்வொரு மனிதனிடமும் ஏற்பட்ட தனிமை, மனச்சோர்வு, விழிப்புணர்வின்மை, பொருளாதார பிரச்சினைகள் என பல்வேறுபட்ட காரணங்களினால் தங்களது உயிர்களைத் தாங்களே மாhய்த்துக் கொள்கின்ற அவல நிலைலக்கு மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் தொழில் நுட்ப வளர்ச்சி துரித கதியில் வளர்ச்சியடைந்து செல்கின்றது. நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கென அதன் வளர்ச்சி தீவிரமடைந்தே செல்கின்றது. இதனால் மனிதன் ஒருவன் அத் தொழில் நுட்ப வளர்ச்சிகளில் மூழ்கி தன்னை, தனது சுயத்தை, கொள்கைகளை மறைத்து வாழும் நிலை உருவாகின்றது. தெரிந்தோ தெரியாமலோ சாதாரண மனிதன் ஒருவன் ஏதாவது தொழில் நுட்ப சாதனத்திற்கு அடிமையாகவே வாழ்ந்து வருகின்றான். இதனால் அவன் தனித்தனியாக இயங்கும் நிலை உருவாகின்றது.

ஆரம்ப காலத்தில் கூட்டாக சேர்ந்து இயங்கியவன் இன்று தனியனாக மற்றவர்களது உதவியின்றி தொழில் நுட்பத்தின் உதவியுடனேயே தனது இயக்கமொன்றை முன்னெடுத்துச் செல்கின்றான். ஒருவனது நித்திரையிலிருந்து உணவு வரை அனைத்தும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்து விடுகின்றது. இந்நிலையினால் ஒவ்வொரு மனிதனும் தனியன்களாக பிரிக்கப்படுகின்றனர். உறவுகளை மறந்து உணர்வுகளை மறந்து இயந்திரங்கள் போன்று நடமாடித் திரிகின்றனர். இந்த அவல நிலையினால் தமது புன்னகைகள், அழுகை, துயர் என்பவற்றை கூட தேவையான நேரத்தில் தேவையானவர்களோடு பகிரந்;து கொள்ள முடியாதவர்களாகிப் போகின்றனர். இந் நிழலையே ஒரு சாதாரண மனிதனுக்கு மனச் சோர்வை உண்டு பண்ணுகின்றது.

மனச் சோர்வானது என்னால் எதுவுமே செய்ய முடியாது, எனக்கு மட்டும் தான் இவ்வாறெல்லாம் நடைபெறுகின்றது, எனக்கு யாருமே இல்லை, சலிப்பு , விரக்தி என்பவற்றை எவ்வித செலவுகளின்றி மனித மனத்தில் விதைத்து விடுகின்ற ஆற்றலை கொண்டது. இதன் அடிப்படையில் காலப்போக்கில் மனரீதியான அழுத்தத்தினால் ஒருவன் தற்கொலையை தீர்வாக ஏற்று உயிரை மாய்த்துக் கொள்ளும் அபாயமான நிலை உருவாகின்றது.

தற்கொலைக்கான மற்றுமொரு காரணங்களாக ஒருவரது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான ஒருவர் கிடைக்காத நிலையும் காணப்படுகின்றது. சமீப காலத்தில் மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர்களது மரணங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றது. இவ் மனித்களது மரணத்தின் காரணங்களில் மிக முக்கியமான காரணமாக இதுவே சொல்லப்படுகின்றது. தொழில் நுட்பத்தினை நம்பிக்கையாக்கிக் கொண்ட நாம் நல்ல மனிதர்களை நம்ப மறுத்தமையே இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

இவ்வாறான மனச் சோர்வு ஏற்படும் நிலைகளில் மனிதன் ஒருவன் மிகவும் அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே இழப்புக்களை முடிந்த வரையில் தவிர்த்துக் கொள்ள கூடியதாக இருக்கின்றது. குடும்பங்களில் உள்ள அங்கத்தவர்கள் அனைவரும் தம்மிடையே ஒரு நட்புணர்வை உருவாக்கிக் எப்போதுமே ஒருவரை ஒருவர் கண்காணித்து வரும் நிலைகளில் உறவுகளின் இழப்புக்களை தவிர்த்துக் கொள்ளலாம். குடும்பமொன்றில் 3 அங்கததவர்கள் இருக்கும் நிலையில் அங்கு தனிமைகள் உணரப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவானதாகவே இருக்கின்றது. இந் நிலையானது தேவையற்ற வாழ்க்கையின் முரண்களை தவிர்த்துக் கொள்ளக் கூடிய நிலைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

குடும்பமொன்றிலோ, நண்பர்கள் கூட்டமொன்றிலோ, இதர ஏனைய குழுக்களிலோ கலந்துரையாடுகின்ற பண்பு காணப்படுகின்றமையானது பல்வேறுபட்ட முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு உதவுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான உறவு நிலைகளை கட்டி எழுப்புவதற்கும் தேவையற்ற மனச்சஞ்சலங்களையும் தீர்த்து வைப்பதற்கும் உதவுகின்றது. இந்த கலந்துரையாடலில் ஒவ்வொருவரது மன உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படுவதனால் வாழ்க்கை பற்றிய குழப்பங்கள் தீர்த்து கொள்ளப்படுகின்றன.

ஒருவருக்கு தேவையற்ற மனச் சோர்வு நிலை ஏற்படும் பட்சத்தில் இசையை ரசித்தல், விளையாட்டுக்களில் ஈடுபடுதல், விரும்பிய பொழுது போக்குகளில் ஈடுபடுதல், போன்ற பல்வேறு விடயங்களில் மனதை ஈடுபடுத்தும் போது அதுவே மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விடுகின்றது. இந் நேரங்களில் தொழில் நுட்பத்தை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதே மனமானது ஒரு தீர்வை எட்டும் நிலையை அடையகூடும். இவ்வாறான வழிமுறைகளை சிறிதளவேனும் நாங்கள் கடைப்படிப்பதன் மூலமாக தேவையற்ற மனச் சோர்வினால் ஏற்படுகின்ற அபாயகரமான நிலைகளை நீக்கி தற்கொலை எண்ணத்தை முற்றாக ஒளித்து விடலாமென்பது முடிவாக அமைந்து விடுகின்றது.

பௌர்ஜா அன்ராசா
3ம் வருடம்
நாடகமும் அரங்கியலும் சிறப்பு கற்கை
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More