Home இலங்கை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்…

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்…

by admin

(அ) அறிமுகம் :

இலங்கையில் இயங்கிவரும் தேசிய உயர்கல்வி நிறுவகங்களை பல்கலைக்கழகங்களின் பீடங்களாக மாற்றியமைக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கான ஒப்புதலைக் கோரும் கடிதம் குறித்த நிறுவகங்கள் இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களின் பேரவைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் ஒன்றாக இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் இடம்பெற்றுள்ளது. இப்பின்னணியில் தன்னாட்சித் தத்துவங்களுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த நிறுவகம் அதன் சுயாதீனத்தை இழக்காமல் விருத்தி செய்யப்படுவதே காலத்தின் தேவையாகவுள்ள நிலையில், இவ்விடயந் தொடர்பில் இந்த அறிக்கையூடாக உரையாட விரும்புகின்றோம்.

இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக, மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் அமைந்துள்ளது. இது இலங்கையிலுள்ள தன்னாட்சித் தத்துவத்துடன் இயங்குகின்ற அழகியற் கற்கைகளுக்கான ஒரு தேசிய உயர் கல்வி நிறுவகமாகத் திகழ்கிறது.

கிழக்கிலங்கையில் பிறந்தவரும், முத்தமிழ் வித்தகரும், உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு அதியுயர் கௌரவத்தை இந்நிறுவகத்தின் பெயர் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்நிறுவகத்திற்கான தொடக்கம் மட்டக்களப்புத் தொகுதியின் முன்னாள் முதன்மைப் பாராளுமன்ற உறுப்பினராகவும், பின்னாளில் பிரதேச அபிவிருத்தி, இந்துசமய இந்து கலாசார தமிழ்மொழி அலுவல்கள் அமைச்சராகவும் செயலாற்றிய திரு. செல்லையா இராசதுரை அவர்களின் முயற்சியினால் 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதாவது வட இலங்கையில் செந்நெறிக்கலைகளின் விருத்திக்காக இயங்கிய இராமநாதன் நுண்கலைக்கழகத்தைப் போல் கிழக்கிலங்கையிலும் நுண்கலைகளின் விருத்திக்கான ஒரு கல்லூரி அமையப்பெறுதல் வேண்டும் எனும் தேவையுணர்ந்து நன்னோக்கத்துடன் மட்டக்களப்பு இராமகிருஷ;ண மிசனால் நன்கொடையாக வழங்கப்பட்ட நொச்சிமுனையிலுள்ள காணியில் சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி எனும் பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் கர்நாடக சங்கீதம், பரதநடனம் ஆகிய செந்நெறிக் கலைகளுக்கான டிப்ளோமா சான்றிதழை வழங்கும் வகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கி வந்தது.

ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களின் பின்னர் இக்கல்லூரியினை இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் எனக்கோரி நடத்தப்பட்ட மாணவர் போராட்டங்கள் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அப்போது அமைச்சராகவிருந்த திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆதரவுடன் 2001 ஆம் ஆண்டு இக்கல்லூரி கிழக்குப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி 2005.06.06 ஆந் திகதி வெளியிடப்பட்ட 1396/4 ஆம் இலக்க அதிவிசேஷ வர்த்தமானியில் பிரசுரமாகிய 2005 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ‘சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்’ எனும் பெயருடன் இலங்கையிலுள்ள தேசிய உயர்கல்வி நிறுவகங்களுள் ஒன்றாகப் புதிய பரிமாணம் பெற்றுக் கொண்டது. இதனையடுத்து கர்நாடக இசை, பரதநடனம், நாடகமும் அரங்கக்கலைகளும், கட்புல தொழில்நுட்பவியல்கலைகள் எனும் நான்கு இளங்கலை கற்கை நெறிகள் மூன்று துறைகளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிறுவகத்தில் கல்வி கற்பதற்கான மாணவர் தேர்வானது வழமையாக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடைமுறையிலிருந்து வித்தியாசமுடையதாக விளங்குகின்றது. அதாவது க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றி அழகியல் பாடங்களில் திறமைச்சித்தியுடன் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகைமையினைப் பெற்று விண்ணப்பிக்கும் மாணவர்களின் செயல்முறைத் திறன்களை மதிப்பீடு செய்யும் கட்டமைக்கப்பட்ட தேர்வினூடாகவே இங்கு கற்பதற்கான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகிறார்கள்.

விசேடமாக குறித்த அழகியற் கற்கையில் மாணவருக்கு இருக்கின்ற உச்சபட்ச பிரயோகத்திறன் அடிப்படைத் தகுதியாகக் கொள்ளப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாட்டிலுள்ள தமிழ்மொழி மூலமாகக் கற்கின்ற நுண்கலைகளில் ஆர்வமும் திறனும் உடைய மாணவர்கள் பலர் தமது கலைத்திறனைத் தொழில்வாண்மையுடன் விருத்தி செய்து ஒரு பட்டதாரியாக உருவாக இந்நிறுவகம் வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இவ்விதம் வருடாந்தம் தேசிய ரீதியாக 220 (கர்நாடக சங்கீதம் – 70, பரதம் – 50, நாடகம் – 50, கட்புல தொ.நுட் கலை – 50) மாணவர்கள் இந்நிறுவகத்தில் கற்பதற்காகத் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்நிறுவகத்தில் மொத்தமாக நான்கு தொகுதிகளிலும் ஏறத்தாழ 900 மாணவர்கள் தற்போது கற்று வருகின்றார்கள். இனிவருங் காலங்களில் வருடாந்தம் 290 (கர்நாடக சங்கீதம் – 80, பரதம் – 70, நாடகம் – 70, கட்புல தொ.நுட் கலை – 70) மாணவர்களை உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர் கல்விக்கான வாய்ப்பினை வௌ;வேறு தேர்ச்சியுடைய பலதரப்பட்ட மாணவர்களுக்கும் வழங்கும் அரசின் நோக்கத்தை சாத்தியமாக்கும் வகையில் வருடாந்தம் அதிகளவான நுண்கலைகளில் திறனுள்ள மாணவர்கள் இந்நிறுவகத்தில் உள்வாங்கப்பட்டு வருகின்றார்கள்.

(ஆ) உயர்கல்வி நிறுவகமாக இருப்பதன் சாதகங்கள் :

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கான கட்டளைச் சட்டம் இந்நிறுவகத்திற்கென விசேடமான தத்துவங்களையும், கடமைகளையும் வழங்கியுள்ளது. அதாவது பல்கலைக்கழகத்தின் பீடம் ஒன்றிற்கு கிடைக்கும் வாய்ப்பு வசதிகளையும் விட மேலான வாய்ப்புக்களையும் வசதிகளையும் இதன்கீழ் இந்நிறுவகம் பெற்றுள்ளது. (கட்டளைச்சட்டத்தில் ‘அ’ முதல் ‘ஓ’ வரையாகக் கூறப்பட்டுள்ள தத்துவங்கள்.)

ஒரு பல்கலைக்கழகத்திற்கு இருக்கின்ற கல்விசார் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதியுயர் சபையான மூதவையைப் (Senate) போன்று இந்நிறுவகத்திற்கு ‘கல்விசார் கூட்டவையும்’ (Academic Syndicate), பல்கலைக்கழகத்தின் நிருவாகம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதியுயர் அவையான பேரவையினைப் (Council) போன்று இந்நிறுவகத்திற்கு ‘முகாமைச்  சபையும்’ (Board of Management)  உருவாக்கப்பட்டுள்ளன. இத்துடன் நிறுவகம் தனக்கென நிதி முகாமைத்துவம், பெறுகைகள், கணக்காய்வு, லீவு வழங்கலை ஒழுங்குபடுத்தல் என்பவற்றிற்காக தனியான குழுக்களையும் பல்கலைக்கழகத்திற்கு இணையான வகையில் கொண்டுள்ளது.

இந்த தத்துவங்கள் தன்னாட்சியுடன் இயங்குவதற்கான பலத்தை நிறுவகத்திற்கு வழங்கி வருகின்றது. இதன் காரணமாக தேவைக்கேற்ப கல்விசார், கல்விசாரா ஆளணியினரை உள்வாங்குவதற்கும், தேவைக்கேற்ப புதிய கற்கைகளை உருவாக்கவும், தேவைக்கேற்ப பௌதீக வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தனியான கல்விசார் கூட்டவை, முகாமைத்துவ சபை என்பன நிறுவகத்திற்கு கிடைப்பதால் நிறுவகத்தின் மிகமுக்கியமான துறைகள் சார்ந்தும் மிக ஆழமாகவும் நுணுக்கமாகவும் பகுத்தாராய்ந்து காத்திரமான தீர்மானங்களை திட்டமிட்ட காலப்பகுதிக்குள் மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவது இலகுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது துறைசார் நிபுணர்களின் பங்களிப்போடு துரித அபிவிருத்திக்கு இட்டுச்செல்வதற்கான சாதகமான நிலைமை அதிகமுள்ளது.

ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் பெரும்பாலானவை நிறுவகத்தின் பணிப்பாளரிற்கும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பல்கலைக்கழகத்திற்கு இருப்பதனைப்போல் தனியான நிருவாகக் கட்டமைப்பு, நிதியாளுகைக் கட்டமைப்பு, ஆளணி முகாமைத்துவம் என்பவையும் அதுசார்ந்த அதிகாரங்களும் குறித்த நிறுவகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பட்டத்திற்கான அங்கீகாரம் பெறும் நடைமுறை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் மூதவை, பேரவை என்பவற்றிற்கூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சுருங்கச் சொன்னால் பட்டமளிப்பிற்கான அங்கீகாரம் தவிர்ந்த பிற அதிகாரங்களுடன் சுயாதீனமாக இயங்கும் இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள ஓர் உயர்கல்வி நிறுவகமாக இது விளங்கி வருகிறது. பட்டமளிப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கும் அதிகாரத்தை இந்நிறுவகத்தின் கல்விசார் கூட்டவையும், முகாமைத்துவ சபையும் பெறுகின்ற போது அது ஒரு தனியான பல்கலைக்கழகமாக நிலைமாற்றம் பெறுவதாக இருக்கும்.

இவ்வாறு சுயாதீனமான தன்னாட்சியுடன் குறித்த நிறுவகம் இயங்குவதன் காரணத்தாலேயே கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பின்வரும் பல்வேறு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

  1. சமகால உலகளாவிய, தேசிய தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் முயற்சியாண்மைத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நிறுவகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் தலைமையில் பேராசிரியர் எப்.சி.றாகல் அவர்களின் நிபுணத்துவ வழிப்படுத்துகையுடன் துறைசார் நிபுணர்களான பேராசிரியர் எலிசபெத் டீன் ஹேமன், (Rhode Island School of Design, USA.) கலாநிதி மரியா லுக்மன், (University of Oxford, Art curator) கலாநிதி க.அரங்கராஜன், கலாநிதி.எஸ்.ரகுராம், (University of Madras) பேராசிரியர் அங்கையற்கண்ணி இளமுருகன், (தமிழ்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) கலாநிதி.எஸ்.பத்மலிங்கம் (யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் நிபுணத்துவ ஆற்றுப்படுத்தலுடன்; தொடர் களப்பயிற்சிகளினூடாக நிறுவக விரிவுரையாளர்களின் பங்குபற்றுகையில் நிறுவகத்தின் துறைசார் கலைத்திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
  2. பாரம்பரியக் கலைஞர்கள் (அண்ணாவிமார்) வருகைதரு கலைஞர்கள் (Visiting Artists) எனும் உத்தியோகபூர்வ அழைப்புடன் அதற்குரிய கொடுப்பனவுகளைப் பெற்று நிறுவகத்திற்கு வந்து பகுதி நேரங்களில் மாணவர்களுக்கு பாரம்பரிய ஆற்றுகைக் கலைகளை செயல்முறை ரீதியில் கற்பிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  3. கட்புல தொழில் நுட்பக்கலைத்துறையின் கீழ் பயிலும் மாணவர்களின் துறைசார் தொழில்வாண்மையினையும் தொழில் வாய்ப்புக்களையும் விருத்தி செய்யும் நோக்கில் பட்டதாரி கண்காட்சி (Degree Show) எனும் நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
  4. எதிர் காலத்தில் உடனடியாக ஆரம்பிக்கத்தக்க வகையில் ‘தமிழர் நடன மரபுகள்’, ‘தமிழர் இசை மரபுகள்’ எனும் இரு புதிய கற்கை நெறிகளுக்கான கலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன,
  5. நிறுவகத்தின் பௌதீக வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிறுவகத்திற்கு அண்மையிலுள்ள அரசுக்குச் சொந்தமான நிலப்பகுதியிலிருந்து நிறுவகத்திற்கென புதிய காணிகள் (பூநொச்சிமுனையில் 05 ஏக்கர், நிறுவகத்திற்கு அருகிலுள்ள அரச காணியிலிருந்து 50 ஏக்கர்) பெற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 05 ஏக்கருக்கு உறுதி பெறப்பட்டுள்ளதுடன் 50 ஏக்கருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
  6. பூநொச்சிமுனையில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கலைஞர் கிராமம் எனும் செயற்றிட்டத்திற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்களும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன,
  7. நிறுவகம் உலக பல்கலைக்கழகங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொண்டு ஆசிரியர்களின் ஆற்றுகை, ஆராய்ச்சி அனுபவங்கள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
  8. Fulbright Scholars இனுடைய தொடர்ச்சியான வருகை நிறுவகத்தின் கல்வி, கட்டுமான செயற்றிட்டங்களில் ஆக்கபூர்வமான பல புதிய மாற்றங்களை உள்ளடக்குவதற்கு வாய்ப்பளித்திருக்கிறது.
  9. உலக ஆய்வறிவாளர்களின் பங்களிப்புடன் சருவதேச ஆராய்ச்சி மாநாடுகளை தொடர்ச்சியாக நடத்தும் வல்லமையினை மூன்று மாநாடுகளூடாக (2016,2017,2018) நிரூபிக்கப்பட்டுள்ளது.
  10. நிறுவகத்தில் புதிதாக தகவல் தொடர்பாடல் கற்கை அலகு, மொழிக்கற்கைகளுக்கான அலகு, புறநிலைக் கற்கைகள் அலகு (Extra Mural studies Unit) என்பன உருவாக்கப்பட்டுள்ளன.
  11. 2016 இல் 85 ஆகவிருந்த நிறுவகத்தின் ஆளணியின் எண்ணிக்கை 2019 இல் 127 ஆக உயர்வடைந்திருந்தது.

எனவே மேற்படி ஆக்கபூர்வமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை குறுகிய கால எல்லைக்குள் திட்டமிட்டு மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு நிறுவகம் என்கின்ற கட்டமைப்பினூடாகவே சாத்தியமாகியுள்ளது. ஆகவே அத்தகைய ஆக்கபூர்வமான அடுத்தகட்ட அபிவிருத்திக்கான செயற்பாடுகளை செய்யவல்ல வாய்ப்புக்களை வழங்கி வரும் தன்னாட்சித் தத்துவத்துடன் கூடிய நிறுவகக் கட்டமைப்பினை இழக்காத வகையில் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

(இ) எதிர்கால அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் :    

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் அதன் தோற்றத்தில் ஒரு பிராந்தியத்தை மையப்படுத்தி ஒரு மதஞ்சார்ந்த திணைக்களத்தினூடாக உருவாக்கம் பெற்று காலப்போக்கில் தேசிய ரீதியில் தமிழ்மொழி மூலமாக அழகியற் கற்கைகளை வழங்கும் தன்னாட்சித் தத்துவத்துடன் கூடிய உலகளவில் அறியப் பெற்றதும், உலகளாவிய ரீதியிலான அறிஞர் கலைஞர்களின் ஊடாட்டத்தைக் கொண்டதுமான ஓர் உயர்கல்வி நிறுவகமாக பரிமாணம் பெற்று வளர்ந்துள்ளது. இந்நிலையில் இதன் அடுத்த கட்ட விருத்தி என்பது முழுக்க முழுக்க நுண்கலைகளுக்கான ஓர் உயர் கல்வி நிறுவகமாகத் தன்னை பூரணப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது எனலாம்.

  • நுண்கலைக் கற்கைகளுக்கான முழுமையான ஓர் உயர் கல்வி நிறுவகமாக விரிவாக்கப்படுதலின் தேவையும் வாய்ப்புக்களும் :

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமானது எதிர்காலத்தில் தேசிய ரீதியில் தமிழ்மொழி மூலத்தில் நுண்கலைகளில் ஆய்வறிவுத்திறனும், ஆற்றுகைத்திறனும் தொழில்வாண்மைத் தேர்ச்சியும் கொண்ட கலைஞர்களான பட்டதாரிகளை உருவாக்கும் உயர்கல்வி நிறுவகமாக விருத்தி செய்யப்படுதல் அவசியமாக உணரப்படுகின்றது.

இதற்குரியவாறு இக்கற்கை நிறுவகத்திற்கான ஆசிரியர் தேர்வும் மாணவர் தேர்வும் எதிர்காலத்தில் தனித்த தன்மைகளுடன் கூடியதாக விரிவாக்கஞ் செய்யப்படுதல் தேவையாகும். நுண்கலைகளைப் பயிற்றுவித்து போதிக்கத்தக்க பிரயோக ரீதியிலான தகுதியும் ஆற்றுகைத் திறனுங் கொண்ட ஆசிரிய வளங்களை வலுப்படுத்துதலும் அத்தகைய கலைத்திறனுடைய ஆசிரிய வளங்களை மேலும் உருவாக்கஞ் செய்து உள்ளீர்த்து எதிர்காலத்தில் நுண் கலைகளுக்கான ஒரு தனித்துவமான உயர்கல்வி நிறுவகமாக இது அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அதாவது இந்நிறுவகத்திலிருந்து வெளியேறும் மாணவர்கள் ஆய்வறிவுத்திறனும், செயல்முறைத் தேர்ச்சியும் ஆற்றுகைத் திறனும் தொழில் வாண்மையும்; உள்ள கலைஞர்களான பட்டதாரிகளாக உருவாக்கம் பெற்று சமூகத்திற்குப் பங்களிப்புக்களை வழங்குபவர்களாக வலுப்படுத்தப்படுதல் வேண்டும்

இந்த வகையில் நுண் கலைகளுக்கான உயர்கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் தேர்வும், மாணவர் தேர்வும் வழமையாக பல்கலைக்கழகங்களில் நடைமுறையிலிருந்து வரும் சான்றிதழ் மையப்பட்ட தேர்வு முறையிலிருந்து மாறுபட்டதாக அமைந்திருக்க வேண்டியது கட்டாயமானதாகும். அதாவது ஆற்றுகைத்திறன், பிரயோகத்திறன், அதிலுள்ள தேர்ச்சி, அதன் அனுபவங்கள், துறைசார் சான்றிதழ்கள் எனும் கலப்பு மதிப்பீட்டு முறைமைகளூடாக ஆசிரியர்கள் உள்வாங்கப்படும் புதிய பொறிமுறைமைகள் உருவாக்கப்படுதல் மிகவும் தேவையாக உணரப்படுகின்றது. இந்த இடத்தில் நடைமுறையிலிருந்து வரும் ஆசிரியர் தேர்வு முறைமை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகவுள்ளது. குறிப்பாக ஆற்றுகை மற்றும் பிரயோகத் திறனற்ற சான்றிதழ்களை மாத்திரம் கவனத்திற்கொண்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறைமை மாற்றப்பட்டு ஆற்றுகைத்திறனும் பிரயோக ரீதியான திறனும் தேர்ச்சியும் ஆய்வறிவுத்துறை சான்றிதழ்களும் மதிப்பிடப்பட்டு ஆசிரியர்கள் உள்ளீர்க்கப்படும் முறைமைகள் நடைமுறைக்குரியதாக கொண்டுவரப்படுதல் வேண்டும்.

இதேபோல் மாணவர் தேர்வும் குறித்த கலையில் மாணவருக்கிருக்கும் உயர்ந்தபட்ச ஆற்றுகைத்திறனை மையப்படுத்தியதாக இருத்தல் வேண்டும். விசேடமாக இந்நிறுவகத்திற்கான மாணவர் தேர்வின் போது தற்போதைய நடைமுறையுடன் மேலதிகமாக பிரயோக ரீதியான கலைப்பாரம்பரியமுள்ள குடும்பங்களிலிருந்து வரும் ஆற்றுகைத்திறன் உள்ள மாணவர்களுக்கும், கலையல்லாத வேறு துறைகளில் உயர் கல்வியைத் தொடரும் ஆனால் கலை ஆற்றுகைத் திறனுள்ள மாணவர்களுக்கும் (கணித, விஞ்ஞான, வணிக, தொழில்நுட்பப் பிரிவுகள்) குறித்த எண்ணிக்கை வரையறைகளுடன் இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவதாகவும் ஆக்கப்பெறுதல் வேண்டும். இவ்வாறு அமையும் போது நுண்கலைகளில் ஆற்றுகைத் திறனுள்ள சகலருக்குமான வாய்ப்பு அதிகரிப்பதுடன் நுண்கலைகளில் ஆற்றுகைத் தேர்ச்சியுடைய பிரயோக ரீதியிலான திறன் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவது பூரணத்துவமான உயர்ந்த மட்டத்தை எட்டுவதாகவும் பரிமாணங் கொள்ளும்.

அதாவது பாரம்பரியத்தினூடாக வருகின்ற ஆற்றுகைத் தேர்ச்சி மிக்க இளந்தலைமுறையினரும், கலையல்லாத வௌ;வேறு துறைகளிலிருந்து கலையின் மீது கொண்ட பிரத்தியேக ஈடுபாடு மற்றும் ஆற்றுகைத் திறன் காரணமாக உள்வருகின்ற புதிய தலைமுறையினரும், கலையினைத் தனது எதிர்காலக் கற்கையாகத் தீர்மானித்து அதனூடாக வருகின்ற மாணவர்களும் ஒன்றிணைந்து இத்துறையில் கற்பதானது வித்தியாசமான அனுபவங்களின் பகிர்தலுக்கும் கற்றல் விரிவாக்கத்திற்கும் வலுவூட்டும் செயற்பாடாக அமைந்திருக்கும்.

இத்தகைய பல்துறையாளர்களின் ஒருங்கிணைந்த கற்றல் கலைப்பயில்வு, ஆற்றுகை, பிரயோகம் என்பதையும் தாண்டி புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் வாய்ப்புக்களைப் பெருக்கித்தரும். உதாரணமாக சுவாமி விபுலானந்தர் கணித விஞ்ஞானத்;துறையினைச் சேர்ந்தவர் இவர் கலைத்துறையிலும் ஈடுபாடு காட்டியதால் இருதுறை அறிவனுபவங்கள் யாழ் நூல் ஆராய்ச்சிக்கு வழிகோலியது. இதுபோல் நுண்கலைகளின் தொழில்நுட்பங்கள், நுண்கலைகளின் மருத்துவ ரீதியான பக்கங்கள், நுண்கலைகளின் வாழ்வாதார பொருண்மிய ஆராய்ச்சிகள் எனப்பல்வேறு கோணங்களில் பரந்துவிரிந்த அறிவாராய்ச்சித் திறன்களுக்கான பாதைகளை இத்தகைய தேர்வும் கற்றலும் திறந்து கொடுக்கும்.

சுருங்கச்சொன்னால் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் முழுக்க முழுக்க ஆற்றுகைத் தேர்ச்சியுடைய, பிரயோக ரீதியிலான கற்றல் பேறினைக் கொண்ட தொழில் திறனுள்ள பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு தனித்துவமான உயர்கல்வி நிறுவகமாகத் தன்னை நிலை நிறுத்தும் வகையில் அதற்கான புதிய பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

இத்தகைய அபிவிருத்தியை நோக்கிச் செல்வது இந்நிறுவகத்தைப் பொறுத்த வரையில் மிகவும் இலகுவானதாகவே இருக்க முடியும். அதாவது தன்னாட்சித் தத்துவங்களூடாக நிறுவகத்திற்குக் கிடைக்கும் அதிகாரங்களைக் கொண்டே இதனை இலகுவாக நடைமுறைப்படுத்த முடியும். இத்தகைய புதிய பொறிமுறைகளின் உருவாக்கத்திற்கான வாய்ப்புக்களும் வசதிகளும் பல்கலைக்கழகக் கல்விக்கான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை அடியொற்றி புதிய தேர்வுப் பொறிமுறைகளை நிறுவகத்திற்கேயுரிய தத்துவங்களினூடாக உருவாக்குவது பற்றி ஆராய்தல் வேண்டும்.

  • சமூகத் தொடர்புடைய தொழில்வாண்மைக் கற்கைகளைக் கொண்ட ஓர் உயர்கல்வி நிறுவகமாக விருத்தி செய்யப்படுதலும் அதற்கான தேவைகளும் வாய்ப்புக்களும் :

இன்றைய அரசாங்கத்தின் உயர்கல்விக் கொள்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் சமூகத்திற்கு பயன்தரவல்ல பட்டதாரிகளை உருவாக்குவதுடன் சமூகத்தை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுவும் பிரதானப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தவகையில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமானது சமூகத் தொடர்புடைய நுண்கலைகளுக்கான கற்கை நெறிகளை மறுசீரமைத்துள்ளதுடன் அதற்கான துணை அலகுகளையும், செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் வகையில் கட்டமைப்பு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது.

அதாவது சமூகப்பங்குபற்றலுடன் கூடிய கூட்டுறவு உணவகச் செயற்றிட்டம், புறநிலைக் கற்கைகள் அலகு (Extra Mural Studies) என்பன முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கலைஞர் கிராமம், கலை கைவினைப் படைப்புக்களுக்கான நிலையம் என்பன நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகளும்; பூரணப்படுத்தப்பட்டுள்ளன.

சமூகப்பங்குபற்றலுடன் கூடிய கூட்டுறவு உணவகத் திட்டத்தினூடாக சமூகத்தில் பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் தொழில் முயற்சியுடன் வாழும் நபர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிறுவகத்தை அண்டி வாழும் உள்ளூர் உணவு உற்பத்தியிலும் அது சார்ந்த தொழில் முயற்சியிலும் ஈடுபடும் பெண்கள் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் நன்மைகளைப் பெறும் நிலைமை வலுவாக்கப்பட்டுள்ளது. இது நிறுவகத்தை சமூகத்துடனும் உள்ளூர் பொருளாதாரத்துடனும் ஊடாட்டங்கொள்ளச் செய்கிறது.

இதேபோல் கலைஞர் கிராமம் எனும் செயற்றிட்டமானது பூநொச்சிமுனையில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனூடாக சமூகத்தில் கலைத்துறையில் ஈடுபாட்டுடன் இயங்கும் நபர்களும், நிறுவகத்தின் மாணவர்களும், தேசிய, சர்வதேச துறைசார் நிபுணர்களும் ஒன்றிணைந்து பயின்று கற்று பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும்.  துறைசார் மாணவர்களின் தொழில் முனைவிற்கான கற்கையினை வலுப்படுத்தும் நிரந்தர இடமாகவும், ஏற்கெனவே நுண்கலைகள் சார்ந்து தொழில்முயற்சியில் இயங்கிக்கொண்டிருப்போரை மேலும் வலுவாக்கஞ் செய்யும் இடமாகவும் இக்கலைஞர் கிராமம் இயக்கம்பெறும். உதாரணமாக பிரம்பு பொருட்களை வடிவமைத்தலைப் பயின்று அதனை ஒரு வாழ்வாதார நடவடிக்கையாக முன்னெடுக்க விரும்பும் பட்டதாரிக் கலைஞருக்கான பயில்வுக் கிராமமாக இக்கலைஞர் கிராமச் செயற்றிட்டம் அமைந்திருப்பதுடன், இப்பிரம்புக் கைத்தொழிலினை உலக தராதரங்களுடனும், தொழில்நுட்பங்களுடனும் மேலும் செம்மைப்படுத்திச் செல்வதற்கான அனுபவங்களை அத்துறைசார்ந்த உள்ளூர்க் கலைஞர்களுக்கு வழங்குவதாகவும் இருக்கும். இக்கலைஞர் கிராமச் செயற்றிட்டத்தினூடாக உள்ளூர்க் கலைஞர்களும், துறைசார் மாணவர்களும் வலுவாக்கம் செய்யப்படுவர். இவ்விதமாக கிழக்கிலங்கையின் உள்ளூர் வளங்களும் அவற்றுடன் தொடர்புடைய கலைத் தொழில் முனைவுகள் பலவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

அடுத்து நிறுவகத்தில் அமையப்பெறும் கலை கைவினைப் படைப்புக்களுக்கான நிலையம் உள்ளூர் கலைஞர்களின் கைவினைக் கலைப் படைப்புக்களையும், நிறுவகத்தின் மாணவர்களுடைய கைவினைக் கலைப்படைப்புக்களையும் காட்சிப்படுத்தி அவற்றைச் சந்தைப்படுத்தும் இடமாக இயங்குவதற்கான முன்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக சமூகத்தில் வாழும் உள்ளூர் கைவினைக் கலைப் படைப்பாளர்களுக்கும் நிறுவகத்திற்குமான தொடர்பு அதிகரிப்பதுடன் உள்ளூர் பொருளாதார விருத்திக்கு நிறுவகம் களமமைப்பதாகவும் அமைந்திருக்கும்.

இத்தோடு நிறுவகத்தின் வருடாந்த நிகழ்ச்சித் திட்டத்தில் சமூகத்துடன் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள், கலை விழாக்கள் வடிவமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன உதாரணமாக உலக தாய்மொழிகள் தினம், உலக பெண்கள் தினம், உலக நாடக தினம், சுவாமி விபுலானந்தர் நினைவு தினம், உலக நடன விழா, உலக இசை விழா எனப்பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனூடாக சமூகங்களுடன் நேரடியான தொடர்புகளும் சமூக உறுப்பினர்களின் பங்குபற்றுகையும் வலுவாக்கம்பெற்று வருகின்றன. இவற்றினூடாக குறிப்பாக கிழக்குப் பிராந்தியத்தின் பல்பண்பாட்டினை வலுவாக்கம் செய்தலும், பொதுவாக தேசிய ரீதியிலான பல்பண்பாட்டுப் பாரம்பரியங்களை வலுவாக்கஞ் செய்தலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான ஓர் உயர்கல்வி நிறுவகமாக இந்தியாவின் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural Instuitute, Dindigul, Tamil Nadu, India.)  இயங்கி வருவது சுட்டிக்காட்டத்தக்கது. குறிப்பாக காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகமானது அது அமைந்துள்ள பிரதேசத்தின் சமூக பொருளாதார கலை பண்பாட்டு நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு இயக்கம் பெறும் ஓர் உயர்கல்வி நிறுவகமாக தன்னை அடையாளங்காட்டி வருகின்றது. இதற்கான பொறிமுறைகள், கட்டமைப்புக்கள் அங்கே உருவாக்கப்பட்டுள்ளன.

இதனையொத்த வகையில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அது அமைந்துள்ள பிராந்தியத்தின் தனித்துவமான சமூக பொருளாதார கலை பண்பாட்டு நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது தேவையாக உணரப்படுகின்றது. இத்தகைய தூரதரிசனத்துடனேயே கடந்த 2016 – 2019 வரையான காலகட்டத்தில் மேற்குறிப்பிட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • நுண்கலைகள் சார்ந்த ஆளுமையே பணிப்பாளராக இருத்தல் வேண்டும் :

குறித்த நிறுவகமானது அழகியல் கலைகளுக்கான உயர்கல்வி நிறுவகமாக இருப்பதால் இந்நிறுவகத்தின் பணிப்பாளர் கட்டாயம் துறைசார்ந்த ஆற்றுகையாளராகவும், ஆய்வறிவாளராகவும், துறை சார்ந்து நிபுணத்துவம் கொண்டவராகவும், குறிப்பாக சிறந்த தலைமைத்துவ ஆற்றலுள்ள ஆளுமையாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இத்தகைய துறைசார்ந்த ஒருவராலேயே இந்நிறுவகத்தின் ஒவ்வொரு விடயங்களையும் நுணுக்கமாக விளங்கி அதன் அடுத்த கட்டத்தை விருத்தி செய்ய முடியும். எனவே நிறுவகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நுண்கலைகள் சார்ந்த மேற்படி ஆளுமை ஒருவரே பணிப்பாளராக வரமுடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியத் தேவையாகவுள்ளது.

(ஈ) முடிவுரை :

இவ்விதமாக ஒரு பிராந்தியத்தின் இசை நடனக் கல்லூரியாக ஆரம்பித்து தன்னாட்சி அதிகாரங்களுடன் இயங்கும் ஒரு தேசிய உயர்கல்வி நிறுவகமாக விருத்தி பெற்றுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமானது அதன் வரலாற்றில் ஒரு தீர்க்கமான கட்டத்தில் வந்து நிற்கின்றது.

அதாவது ஒரு நிறுவகத்திற்கேயுரிய தன்னாட்சித் தத்துவங்களை இழக்காமல் அவற்றின் வாய்ப்புக்களையும் வசதிகளையும் பயன்படுத்தி சுயாதீனமான பல்கலைக்கழகமாகவோ அல்லது ஒரு பல்கலைக்கழகத்திற்கு நிகரான நிறுவகமாகவோ புதிய வளர்ச்சிப் பாதையினை நோக்கிப் பயணிப்பதா? அல்லது நிறுவகத்திற்கான தன்னாட்சி அதிகாரங்களினின்று  கீழிறங்கி ஒரு பீடமாக மாறி ஒரே சுற்றுவட்டப் பாதையில் சுழன்று கொண்டிருப்பதா? எனும் கேள்வியுடன் இந்நிறுவகத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டியதாகியுள்ளது.

இந்த இடத்திலேயே இலங்கையின் தலைநகர் கொழும்பிலே இயங்கிவரும் கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகத்தின் (University of The Visual and Performing Arts, Sri Lanka) வரலாறு பற்றி நாம் கவனஞ் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. ஒரு தொழில்நுட்பக் கல்லூரியாக ஆரம்பித்து 2005 ஜீலை மாதம் பல்கலைக்கழகமாக நிலைமாற்றம் பெற்றதாகவே இப்பல்கலைக்கழகத்தின் வரலாறு உள்ளது.

இப்பின்புலத்தில் ஏறத்தாழ நான்கு தசாப்த கால வரலாற்றில் ஒரு இசைநடனக்கல்லூரியாக ஆரம்பித்து தன்னாட்சித் தத்துவங்களுடன் இயங்கும் உயர்கல்வி நிறுவகமாக விருத்தி கண்டுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் அதன் அடுத்த கட்ட நகர்வாக முழுமையான பல்கலைக்கழகமாகவோ அல்லது பல்கலைக்கழகத்திற்கு நிகரான சுயாதீனமான உயர்கல்வி நிறுவகமாகவோ நிலைமாற்றம் பெறுவதே அவசியமாகும். அதைவிடுத்து நிறுவகக் கட்டமைப்பிலிருந்து கீழிறங்கி, நிறுவகத்திற்கேயுரிய தன்னாட்சித் தத்துவங்களை இழந்த ஒரு பீடமாக மாற்றப்படுவது எந்தவிதத்திலும் அபிவிருத்தியாக கொள்ளப்படவே முடியாதது.

நாட்டில் உயர்கல்வித் துறையில் தொழில் தேர்ச்சியுடைய பட்டதாரிகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் தற்போதைய அரசாங்கம் அதிக ஆர்வஞ்செலுத்தும் பின்னணியில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் அந்த இலக்கையடைவதற்கான (அழகியற் கற்கைகள் சார்ந்து அதிகளவான மாணவர்களை உள்ளீர்த்து அவர்களைத் ஆற்றுகைத் தேர்ச்சியும், தொழில்வாண்மையும் கொண்ட பட்டதாரிகளாக ஆக்குவதற்கான இயலுமையினைக் கொண்டிருத்தல்) கலைத்திட்ட, செயற்றிட்ட கட்டமைப்புப் பொறிமுறைமைகளைக் கொண்டதாகவும், அரசின் சமூகங்களுடன் இணைந்து செயலாற்றும் உயர்கல்வி நிறுவக அபிவிருத்தி செயற்றிட்டத்திற்கு உரிய வகையில் தகவமைக்கப்பட்டு வருகின்ற உயர்கல்வி நிறுவகமாகவும் அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் காலத்தின் தேவைக்கேற்ப இயங்கக்கூடிய தகுதிவாய்ந்த இந்நிறுவகத்தையும் அதன் கட்டமைப்புக்களையும் மேலும் எவ்வாறு பாதுகாத்து வலுவாக்குவது என்பது பற்றியே நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இதுவே நாட்டை அபிவிருத்திப் பாதையினை நோக்கி நகர்த்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாக அமைந்திருக்கும்.

ஆக்கம்:

கலாநிதி சி.ஜெயசங்கர், ஏ.ஜே.கிறிஸ்டி, சு.சந்திரகுமார், உ.பிரியதர்சன், அ.விமலராஜ், து.கௌரீஸ்வரன், கலைமகள் கோகுல்ராஜ், இ.குகநாதன், பொ.சுரேந்திரன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More