வடக்கில் பாதுகாப்பு தரப்பினரால் வேட்பாளர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும், எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் விரைவில் தீர்வினை பெறுவோம் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசபிரிய தெரிவித்தார்.
வடக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட, பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில் பாதுகாப்பு தரப்பினரால் வேட்பாளர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ராணுவ தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பேச்சு நடத்த உள்ளோம். அதன் மூலம் அதற்கு ஒரு சுமூகமான தீர்வு எட்டப்படும் .
எதிர்வரும் தேர்தலை நியாயமானதாகவும், சுதந்திரமானதாகவும் நடாத்துவதற்கான முயற்சியை நாம் முன்னெடுத்துள்ளோம். அதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
அதேவேளை தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு மாத்திரமே உள்ளது. அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது. என தெரிவித்தார். #வடக்கில் #சோதனை #பாதுகாப்புதரப்பினர் #முறைப்பாடுகள்
Spread the love
Add Comment