இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இன்று 10 லட்சத்தைக் கடந்துள்ளதுடன் உயிரிழப்பு 25 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியிடாத நிலையில், மாநிலங்களில் இருந்து வரும் நோய் தொற்று அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 202 எனவும் உயிரிழப்பு 25 ஆயிரத்து 553 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் 36 லட்சத்தைக் கடந்து சென்றுள்ளதுடன் பிரேசிலில் 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
அதேவேளை இந்தியாவில் கொரோhவுக்கு சிகிச்சை எடுத்துவருபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 ஆக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சைபெற்று வரும் மொத்த எண்ணிக்கையில் 48 சதவீதம் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் உள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 10 மாநிலங்களில்தான் 84 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,641 பேர் புதிதாக பாதிக்பட்டுள்ளதையடுத்து, அங்கு எண்ணிக்கை 2,84,281 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4,549 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 1,18,645 ஆகவும் இருக்கிறது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்து வருவோர் சதவீதம் 63.25 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வரும்நிலையில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது #இந்தியா #கொரோனா #உயிரிழப்பு #சுகாதார