இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 681 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 30 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று முதன்முறையாக 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 11,18,043 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை இல்லாத அளவிற்கு 681 பேர் உயிரிழந்துள்ளனர். 7,00,086 பேருக்கு தொற்று குணமாகி உள்ள நிலையில் 3,90,459 சிகிச்சை பெற்று வருகின்றனர். 27,497 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,10,455 பேரும், தமிழகத்தில் 1,70,693 பேரும், டெல்லியில் 1,22,793 பேரும், கர்நாடகாவில் 63,772 பேரும், உத்தர பிரதேசத்தில் 49,247 பேரும், மேற்கு வங்காளத்தில் 42,487 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.