169
சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பில், இன்று மாலை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“சஹ்ரானுக்கும் அவருடன் இணைந்தவர்களின் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் தான் நிதியுதவி வழங்கியதாக, குறிப்பிட்ட சில இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இத்தகவலை வெளியிட்டதாக, அந்த இணையத்தள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் அலாவுதீனின் மருமகனான மற்றொரு வர்த்தகர் இன்ஷாப்பை தவிர, நான் சஹ்ரானையோ சஹ்ரானுடன் தொடர்புபட்ட எந்தக் குண்டுதாரியையோ இதுவரை கண்ணால் கூடக் கண்டதில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே, மீண்டும் மீண்டும் என்மீது, பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட பொய்யான குற்றச்சாட்டுக்ள் விதம் விதமாக வெளிவருகின்றன.
நான் முன்னர் பதவி வகித்த கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழுள்ள நிறுவனமான கைத்தொழில் அபிவிருத்தி சபையில், மேற்குறிப்பிட்ட குண்டுதாரியான இன்ஷாப் அஹமட்டின் நிறுவனமொன்றும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சின் கீழான 42 நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இன்ஷாப் அஹமட்டின் நிறுவனத்துக்கு, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஒழுங்கு விதிகளுக்கு அமையவே செம்பு விநியோகிக்கப்பட்டிருக்கின்றது.
துறைசார் அமைச்சர் என்ற வகையில், நிறுவனங்களின் கொள்கைத் தீர்மானங்களை எடுத்தல் மற்றும் பௌதீக, நிதி முன்னேற்றங்கள் தொடர்பான மேற்பார்வைகளே எனது பணிகளாக இருந்தன.
கைத்தொழில் அபிவிருத்திச் சபையில் சுமார் 300 கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குண்டுதாரி இன்ஷாபின் நிறுவனமும் ஒன்று. ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் கூட, குறித்த நிறுவனத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டொன் செம்பை வழங்கியிருக்கின்றது.
ஆனால், இதுபற்றி இதுவரை எந்த விசாரணைகளும் இடம்பெற்றதாக தெரியவில்லை. குண்டுதாரி இன்ஷாபின் நிறுவனத்துக்கு செம்பு மற்றும் ஏனைய மூலப்பொருட்களை வழங்குமாறு, கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு சிபாரிசுக் கடிதங்களை வழங்கியிருக்கின்றன. ஆனால், அது தொடர்பிலும் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்தும் இதுவரை எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்னை சம்பந்தப்படுத்தி, விரல் நீட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முழுமையான விசாரணையின் பின்னர், பதில் காவல்துறைமா அதிபர் கையெழுத்திட்டு, பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருந்த கடிதத்தில், ரிஷாட் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் எந்தப் பயங்கரவாத தக்குதலுடனும் தொடர்பில்லை என, அறிக்கையிட்டிருக்கிறார். ஆனால், இப்போது, அந்தக் கடிதம் செல்லுபடியற்றது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினத்திலிருந்தே, என்மீது இதனுடன் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையின் பின்னரே இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதே காவல்துறைமா அதிபரே இப்போதும் இருக்கின்றார் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டுகின்றேன். இப்போது இவ்வாறு தெரிவிப்பதும், என்மீது பயங்கரவாத சாயம் பூசுவதும் அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே நான் கருதுகின்றேன்.
அதுமாத்திரமின்றி, எனது சகோதரரை வேண்டுமென்றே, மூன்று மாதங்களாக நான்காம் மாடியியில் தடுத்து வைத்துள்ளனர். அவர் என்ன குற்றம் செய்தார்? என்பதைக் கூட இதுவரை நீதிமன்றத்தல் தெரிவிக்கப்படவில்லை. எனது சகோதரரும் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். எனவே, என்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கிலேயே, சகோதரரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர்.
எனினும், நீதியும் நியாயமும் வெல்லும் என்பதை உறுதியாக நம்புகின்றேன். என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். #சட்டநடவடிக்கை #சஹ்ரான் #ரிஷாட் #உயிர்த்தஞாயிறு
Spread the love