என் நெஞ்சு படபடத்துக் கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை, என் கனவு, என் இலட்சியம் எல்லாம் முடிவடையப் போகின்றதே என்ற ஏக்கம் என்மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நான் திருமணப் பந்தலில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன். என்னால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. தாலி என்னும் வேலி என் கழுத்தை நெரிக்க என்னை நோக்கி வருகின்றது. அதன்மத்தயில் அகோர சத்தம் என்னை ஆட்கொள்கிறது. முடிந்துவிட்டது என்வாழ்க்கை. கண்களில் ஆனந்தக் கண்ணீருக்குப் பதிலாக இரத்தக் கண்ணீர் வடிந்தோட எழுந்து நின்று ஆசிர்வாதம் வாங்கினேன் என் வீட்டாரிடமும் மாப்பிளை வீட்டாரிடமும்.
படித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று அப்பாவுக்கு ஏற்பட்ட கார்ட் அட்டக்கினால் என்னுடைய வாழ்க்கை எனும் முடிவை அவர் எடுத்துவிட்டார். “நான் கண் மூடுவதற்குள் உன்னை கல்யாணம் செய்து வச்சுப் பார்க்கணும் என்று சொல்லிப்போட்டார் என் அப்பா”. உடனே அவசரத்தில் மாப்பிள்ளை தேட முடியாமல் வைத்தியசாலையில் அப்பா தன்; அருகிருந்த அவரது நண்பனிடம் கேட்டார் என் மகளை உன் மகனுக்கு கட்டி வைக்கிறாயா? உனக்கு சம்மதமா என்று . அவரும் உடனே மண்டைய ஆட்டிவிட்டார். அப்பா இருந்த நிலைக்கு அந்த இடத்தில் என்னால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. பையன் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துக்கு வேலை பார்க்கிறான். நீ அங்கதான் போய் இருக்கவேண்டும் என்று வேறு சொல்லிட்டார்கள். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்தும் என் அப்பாவுக்காக ஒரு சிறு துளியும் விருப்பம் இல்லாமல் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தேன்.
மாப்பிள்ளை அப்பாவின் நண்பர் மகன் என்பதால் நல்ல பையன் என்று தெரியும் இருந்தாலும் நான் படிச்ச படிப்ப விட்டுத்து வெளிநாடு போக எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. இனி என்ன செய்ய தாலி என் கழுத்தில் ஏறிவிட்டதே. என்னை நான் மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு அவருடன் வெளிநாடு செல்ல முற்பட்டேன். அந்நாடு எனக்குத் தனிமையைக் கொடுத்தது. என் அப்பா, அம்மா, தங்கை, தம்பி என்று ஒரு வீட்டில் எல்லோருடனும் கலகலவென்று வாழ்ந்த எனக்கு இந்தவீடு தனிமையை மட்டும் தந்தது. என்னோடு சிரித்துப் பேச நான்கு சுவர்களுக்குள் யாரும் இருக்கவில்லை. அதற்காக எனது கணவரை கொடுமைக்காரன் என நினைத்துவிடாதீர்கள்.
என்மேல் அதிக அக்கறையுடையவராக அவர் இருந்தார். என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். இருந்தும் எனக்குத்தான் அவருடன் பெரிதாக முகம் கொடுத்துப் பேச விருப்பம் வரவில்லை. அவர் வேலைக்குச் சென்று வரும் வரை நான் தனிமையில் தான் இருக்க வேண்டி இருந்தது. சொந்தம் என்று சொல்லிக் கொள்ள அங்கு யாரும் இருக்கவில்லை. நாட்கள் நகர நகர நானும் அவருடன் சிறிது சிரித்துப்பேச முற்பட்டேன். அதன் பின்னர் அவர் எனக்குப் பிடித்த ஒவ்வொரு விடயத்தையும் எனக்குத் தெரியாமலே செய்தார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எப்படி எனக்கு இவையெல்லாம் பிடிக்கும் எனக்கேட்டால் உங்கள் வீட்டாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்பார். எனக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டது. அவரோடு சகஜமாக பேசிப் பழகினேன். என் கோபம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு நாள் அவர் வேலை விட்டு வரும் வரை காத்துக்கொண்டிருந்தேன்.
அந்தச் சம்பத்தைச் சொல்வதா இல்லை சொல்லாமல் விடுவதா, சொன்னால் அடுத்து என்ன நடக்கும்? சொல்லாவிட்டால் ஒருவேளை அவருக்குத் தெரிகின்ற போது நான் மறைத்ததை நினைத்து அவர் என்ன செய்வார் என்று பல கேள்விகள் அவர் வரும்; வரையில் என்னுள் ஓடிக்கொண்டிருந்தன. அவரும் வந்துவிட்டார். ஆனால் எனக்கு அந்தச் சம்பவத்தைச் சொல்லத் தைரியம் இல்லாமலும் தயக்கமாகவும் இருந்தது. இருந்தும் இன்று சொல்லியே ஆகவேண்டும் என்று அவரை நோக்கி நகர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று சொல்ல வெண்டும் என்று உடனே கூறினேன். என்ன சொல் என்றார். தொண்டைக் குழியில் உமிழ் நீர் வந்து சிக்கியது. இந்தச் சகுனம், சொல்ல வேண்டாம் என்ற அறிகுறியோ என்று கூடச் சிறிது யோசித்தேன். உடனே அவர் என்னைத் தட்டி என்ன சொல்ல வந்தாய் என்று கேட்டார். நான் என்னவானாலும் பரவாயில்லை சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நான் படித்து முடித்ததும் ஒரு வருடத்தில் வேலை கிடைத்தது. அந்த ஒரு வருடத்திற்குள்ளே காதலும் கிடைத்தது. அவனும் என்னைக் காதலித்தான். அவன் என்னை உண்மையாக காதலித்தான் என்று தான் நினைத்தேன். ஆனால் அடுத்த வருடத்திலே காதல் முடிவு பரிசாகக் கிடைத்தது எனக்கு. இவ்வாறு சொல்லி முடித்து என் கணவரின் முகத்தை அண்ணார்ந்து பார்க்கிறேன் எள்ளுப் போட்டாலும் பொரியாத அளவிற்கு அவர் முகம் விகாரமடைந்து கோப உணர்வோடு என்னருகில் வந்தார்.
என் கை, கால் எல்லாம் படபடத்தது. என்ன நடக்கப் போகின்றதோ என்ற பயம் என் மனதில் குடிகொண்டிருந்தது. சிவந்திருந்த அவரது முகம் உடனே சிரித்த முகமாக மாறியது. என்ன இது கோபப்பட்டவர் சிரிக்கிறாரே என்று எனக்குள் ஒரு கேள்வி. அவர் என் தோளில் கையை வைத்து இதுதானா அந்த விடயம். இதைச் சொல்லத்தானா நீ அவ்வளவு பயப்பட்டாய். இந்த விடயம் எனக்குப் அப்போதே தெரியும் என்றார். நான் உடனே யார் அப்பாவா சொன்னார் என்று கேட்டேன். இல்லை உன்னை நான் காதலிக்கும் போது தெரிந்துகொண்டேன் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் சிரித்துக் கொண்டு உன் அப்பாவும் என் அப்பாவும் நண்பர்கள் என்பதால் நாம் இருவரும் சிறுவயதில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம் சண்டையும் போட்டுக் கொள்வோம். ஆனால் என் அப்பாவிற்கு வேறு இடத்தில் வேலை கிடைத்ததால் இருவரும் பிரியவேண்டியதாயிற்று.
பின்னர் பல வருடங்களிற்கு பிறகு ஏதோவொரு வைபவத்தில் உன்னைச் சந்திக்க நேர்ந்தது. யார் இது இவ்வளவு அழகாக இருக்கிறாளே என விசாரித்தால் நீதான் அது. உன்னோடு நான் வந்து பேசினேன். ஆனால் நீ என்னை துளி கூட ஞாபகம் வைத்திருக்கவில்லை. நாம் சிறுவயதில் விளையாடிய நினைவுகள், இருவரும் போட்டுக்கொண்ட சண்டைகள் ஒன்றும் உனக்கு ஞாபகத்தில் இல்லை. உன் அப்பாவின் நண்பருடைய மகன் என்பது மட்டும் உனக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் உன்னைப் பார்த்ததில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. அதன்பின்னர் உன்னைப் பற்றி அறிவதற்காக பேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் உன்னைப் பின்தொடர்ந்தேன். அதன்பின்னர்தான் தெரிந்தது நீ இன்னுமொருவரை பின்தொடர்கின்றாய். அவரைக்காதலிக்கின்றாய் என்பது பற்றி. என் மனதில் ஓர் ஏக்கம் மட்டுமல்ல ஓர் ஏமாற்றமும் கூட. அதன் பின்னர் இங்கிருக்க விருப்பமில்லாதவனாய் வெளிநாடு வந்துவிட்டேன். கொஞ்சநாளைக்குப் பிறகு தெரிந்தது அந்நபர் உன்னை ஏமாற்றிவிட்டார் என்று. அதனால் நீ அடைந்த வேதனைகளையும் அறிந்துகொண்டேன். இருந்தும் மனதிற்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஒன்று.
உன் அப்பாவிற்கு திடீரென்று சுகயீனம் என்றதும் என் நண்பன் அழைத்துக் கூறினார். நான் என் அப்பாவை உடனடியாக அங்கே செல்லச் சொன்னேன். என்ன, என் அப்பா ஆர்வக் கோளாறில் என்னைப் பற்றிப் பேசி என் மகனை உன் மகளுக்கு திருமணம் செய்து வைப்போமா என்றோ அல்லது உன் அப்பா, உன் மகனை என் மகளுக்கு திருமணம் செய்து வைப்போமோ என்றோ கேட்டு என் ஆசையைப் பூர்த்தி செய்தவிமாட்டார்களோ என்ற நப்பாசைதான். ஆனால் வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட எதுவுமே உடனடியாக கிடைத்துவிடாத எனக்கு உன் அப்பாவின் சுகயீனம் கவலைதரக்கூடியதாக இருந்தாலும் அவர் எடுத்த முடிவு என்னை இன்பத்தில் ஆழ்த்தியது. நான் உனக்காக காத்திருந்தமைக்கான பலன் கிடைத்துவிட்டது என்று கருதிச் சந்தோசப்பட்டேன். உன்னைத் திருமணம் செய்து கொண்டு உன்னோடு வாழ்வது என்னும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் நான் விரும்பிய வாழ்க்கை எனக்கு கிடைத்துவிட்டது என்பதுதான்.
அதேநேரத்தில் என் விருப்பத்தை நிறைவேற்ற வந்த உன்னை, நான் நன்றாகப் பார்த்துக் கொள்ளத்தானே வேண்டும் என்று அவர் கூறி முடிப்பதற்குள் என் கண்களில் இருந்து கண்ணீர் சொட்ட ஓடிப்போய் அவரை கட்டியணைக்கும் போது கண்விழித்துப்பார்த்தால் பக்கத்தில் யாருமில்லை. கனவா? மதியம் ஒன்றரை மணி இருக்கும் சாப்பிட்டுவிட்டு பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கும் போது தூக்கம் வர அசதியில் தூங்கிவிட்டேன். ஆனால் இந்தக் கனவில் கண்ட விடயங்களை எல்லாம் எங்கோ பார்த்திருக்கிறேனே? ஞாபகத்தில் வருதில்லையே. அட ஆமா அன்றொருநாள் பார்த்த அ…ஆ குறும்படக் கதைதானே இது. கிட்டத்தட்ட அந்தப் படக் கதை மாதிரித்தான் நான் கண்ட கனவும். நம்ம வாழ்க்கையிலும் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்று சொல்வாங்க
நான் பார்த்த அ…ஆ குறும்படக் கதையானது வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு தள்ளப்பட்ட ஒரு பெண்னைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு பெண் அன்பைக் கண்டுபிடித்தாளா? அல்லது அதிலிருந்து விடுபட்டாளா? என்பது போல் கதை அமையப் பெற்றிருக்கிறது. இந்தக் குறும்படத்தைப் பார்க்கும் போது மேலும் பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். பெரிதாக படத்தில் நாட்டமில்லாத நான் அப்படத்தை பார்த்துவிட்டு நல்ல கதையாக இருக்கிறது என்று கூறி என் நண்பர்களையும் பார்க்கச் சொன்னேன். இக்குறும்படக் கதைக்களத்தில் உள்ள அத்தனை விடயங்களையும் ஒப்புவிக்காமல் அதன் சாராம்சத்தை எடுத்து என்னுள் தோன்றிய கற்பனையையும் கொண்டு இக்கதையை எழுதியிருக்கிறேன்.
இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு தமிழ் குறும்படப்படப் போட்டியில் முதலிடத்தைத் தட்டிக் கொண்ட இக்குறும்படத்தினை கிருத்திகா பாஸ்கர் இயக்கியிருக்கிறார். இதில் மில்ரன் ஜோசப், யாழினி கந்தேஸ்வரி மற்றும் ரேகா ஸ்ரீனிவாசன் போன்றோர் நடித்துள்ளனர். இக்குறும்படத்தை மேலும் மெருகூட்ட சஸாங்க் சிவசுப்பிரமணியம் இசை அமைத்திருக்கிறார். அதுமட்டுமன்றி நியூசிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு மிகப் பெரிய அளவில் அன்றி கதைக்கு தேவையான வகையிலான ஒளிப்பதிவினை பாஸ்கர் நாகராஜன் மற்றும் கீதன் சுந்தர் மேற்கொண்டிருக்கின்றனர். இந்தக் குறும்படம் ஏனைய படங்களைப் போல் பார்ப்பதற்குச் சாதாரணமாக இருந்தாலும் வாழ்க்கையில் நிறைய சாதிக்கத் துணிந்து தோல்வி கண்ட பெண்களுக்கு எல்லாம் பிரமாண்டமானதாகவும் ஒன்றில் தோற்றால் இன்னொன்றில் வெல்லலாம் என்பதை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்திருக்கிறது. #பகல்கனவு #பேபிசாளினி #இலட்சியம்
தெ. பேபிசாளினி
கிழக்குப் பல்கலைக்கழகம்