முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது தேர்தல் பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், இத்தகைய செயற்பாடுகளினால் தன்னை அச்சப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் அவர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமருக்கும், தேர்தல் ஆஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பில் விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடித்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
(2020 ஜூலை 28) அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி வியப்புக்குரியது. யாழ்ப்பாணம் குருநகரில் இரவு 8 மணியளவில் நான் தேர்தல் பிரச்சார மேடையில் இருந்த போது, முழுக் கறுப்புச் சீருடை அணிந்த 14 இராணுவத்தினர் (கறுப்புப் பூனைகள்?) மோட்டார் சைக்கிள்களில் வண்டிக்கு இருவராக கூட்ட அரங்கிற்குள் தடதடவென்று பெரும் சத்தத்துடன் நுழைந்தனர்.
வாகன எஞ்சின்களை அலறவிட்டுத் தொல்லை கொடுத்தனர். நான் புறப்படும் வரை காத்திருந்தனர். பிறகு என் கார் புறப்பட்ட போது 14 ஆட்களுடன் 7 மோட்டார் சைக்கிள்களுடன் என் காரைச் சுற்றிச் சுற்றி வந்தனர். கொஞ்ச நேரம் ஓரத்தில் நின்றுவிட்டு என் கார் செல்லும் பாதையில் குறுக்கிட்டனர்.
பிறகு ஒரே வரிசையில் சென்று ஒரு பக்கச் சந்தில் போய் மறைந்தனர். என் காவல் போலீசார் என்னுடன் காருக்குள்ளேயே இருந்தனர். இந்த இராணுவத்தினர் எனக்கு எதையாவது உணர்த்த விரும்பினார்களா என்று தெரியவில்லை.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் என்னைப் போன்ற வயதான ஒருவரை மிரளச் செய்து விட மாட்டா என்று போதிலும் மக்களுக்குத் தவறான செய்தியை வழங்கி வாக்களிப்பு நடைமுறையை பாதிக்கக்கூடும்.
இந்த சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். வட மாகாணத்தில் 2020 நாடாளுமன்றத் தேர்தல் இராணுவத்தின் இருப்பினால் பாதிப்பு ஏற்படாமல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என நம்புகிறேன். #கறுப்புஉடை #இராணுவம் #விக்னேஸ்வரன் #இடையூறு #புலனாய்வு