இலங்கையின் பாதாள உலக தாதா அங்கொட லொக்காவுக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் போலி ஆவணங்கள் மூலம் லொக்காவின் சடலத்தை கோவையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்று எரித்ததாகவும் காதலி உட்பட 3 பேரை கோவை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்டவர் அங்கொட லொக்கா. 2017-ல் எதிர்தரப்பான சமயங் குழுவில் 7 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கொட லொக்கா குழுவினர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளது. சென்னையில் தஞ்சமடைந்த இந்த நிழல் உலக தாதா குழு காவற்துறையினரிடம் சிக்கிய போதும் பிணையில் வெளிவந்தது.
பின்னர் அங்கொட லொக்கா பெங்களூருக்கு தப்பி ஓடி மறைந்திருந்த நிலையில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இலங்கைக் காவற்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அத்துடன் பல்வேறு சம்பவங்களும் அங்கொட லொக்கா கொலையில் புதைந்து கிடந்தது தெரியவந்தது. அங்கொட லொக்காவால் கொல்லப்பட்ட பழைய நண்பரின் மனைவி ஒருவர், காதலியாக நடித்து விஷம் கொடுத்து அங்கொட லொக்காவை கொலை செய்தததாக முதலில் கூறப்பட்டது.
இதன்பின்னர் பெங்களூரில் கொல்லப்பட்ட அங்கொட லொக்காவின் உடல் கொரோனா கால பாதுகாப்புகளையும் மீறி கோவைக்கு கொண்டுசெல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியானது. இதனால் பெங்களூரு, சென்னை, கோவையில் அங்கொட லொக்கா குழுவின் நண்பர்கள் குறித்து தீவிரமான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இலங்கை காவற்துறையினர் இன்னொரு சந்தேகத்தையும் கிளப்பினர். நிழல் உலக குற்றச்செயல்களை தொடர்ந்து நடத்துவதற்காக தாம் கொலை செய்யப்பட்டுவிட்டதாக அங்கொட லொக்காவே நாடகமாடுவதாக சந்தேகிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கோவை காவற்துறையினர் இவ்வழக்கில் அங்கொட லொக்காவுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அங்கொட லொக்கா தொடர்பாக காவற்துறையினர் விசாரணை நடத்திய போது, கோவையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதிப்சிங் என்பவரது சடலம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டது. கோவையில் மாரடைப்பால் பிரதிப்சிங் இறந்தார். அவரது உடலை மதுரைக்கு செல்ல காவற்துறையில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு கோவை காவற்துறையினரும் அனுமதி கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் முதலில் சிவகாமசுந்தரி என்பவர் சிக்கினார். அங்கொட லொக்காவின் காதலி அவருடன் கோவையில் இருந்து மதுரைக்கு சென்றவர்கள் யார் யார்? என விசாரித்த போது இலங்கையை சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண்ணின் பெயரும் குறிப்படப்பட்டது. இந்த பெண் குறித்த விசாரணையிலேயு அனைத்து தகவலும் வெளியானது. இந்த அமானிதான், அங்கொட லொக்காவின் காதலி என்றும் இவர்தான் பெங்களூருவில் அங்கொட லொக்காவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சிவகாமசுந்தரி, அமானி, ஈரோடு தியானேஸ்வரம் ஆகிய 3 பேரையும் கோவை காவற்துறையினர் கைது செய்தனர். அங்கொட லொக்காவின் பெயரை பிரதிப் சிங் என மாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து அவரது சடலத்தை மதுரைக்கு கொண்டு சென்று மூவரும் எரித்ததும் தெரியவந்தது. தற்போது 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.